Saturday 29 November 2014

என் பிரிய தாமிரமே!

என் பிரிய தாமிரமே! நாகரிக மோஸ்தரில் கட்டப் பெற்ற தனிம அட்டவணை மாளிகையில், 4ஆம் அவென்யூவில், 11 ஆம் குறுக்குத்தெரு விலாசம், உனது நவீன இருப்பிடம். எத்தனை மெடல்கள், பதக்கங்கள் உன்னை அலங்கரிக்கின்றன.! உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏனோ சிலி நாட்டின் ராணுவ ஜெனரல் பினோஷெ நினைவு தவிர்க்க இயலாமல் வருகிறது. ஆளப்பிறந்தவனாகவே உன்னை எண்ணிக்கொண்டிருக்கிராய் நீ! கிஞ்சித்தும் பிறத்தியானை, அவன் சுதந்திரத்தை மதியாமல் உன் கனத்த பூட்சுக்களின் கீழ் போட்டு மிதிப்பவன் நீ!
சிறார் பருவத்தைத் தாண்டாத நாளிலிருந்தே உன்னை நான் அறிவேன்.
சொல் ! உன் இடுப்பில் சுற்றியிருக்கும் கயிற்றில் செப்புத் தாயத்தைக் கட்டிவிட்டது யார்?
பிறிதொரு நண்பணான சிறிய புங்கக் கொட்டைக்கு அருகில் ஊஞ்சலாடியபடி செப்பு மினுங்கிக் கொண்டிருந்தது. இருவரும் சேர்ந்து ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்து, எந்த நோய் அரக்கனையும் அண்டவிடாது காத்துவிடுவீர்கள் என்பதாக ஐதீகம்.
இருக்கலாம். சரியாய் இருக்கலாம். இருமல் என்றால் சாதாரண இருமலா அது? பிசாசு பிடித்தது போலத்தான். இருமி இருமி, கேவிக் கேவி, நடு நிசியில் மூச்சடைத்து, கண்கள் செருகி, நாடி மெலிந்து மூச்சற்று பேச்சற்று…… வாந்தி எடுத்து, முகம் நீலம் பாரித்து…….குளிர்ந்த நீர் பருகி உன் இருமல் தணிக்க நீ பட்ட அவஸ்தைகள் சொல்லிலடங்கா!
ஐதீகம் அன்றைக்கு , கேவும் இருமல் அமளிக்கு நடுவே ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.
நீ வளர்ந்து விட்டாய்! பெரியவனாய், ஆகிருதியோடு, கட்டு மஸ்த்தாய்! உன்னைப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது. என்ன ஜோலி? எங்கே?
டெல்லியில், மிகப் பெரிய முக்கியஸ்தன். உன் அலுவலகத்தில் நீயே முக்கிய முடிவுகள் எடுக்கிறாய். சும்மாவா? உன் தேர்வை இதுவரை எந்த அமைச்சரும் மாற்றியதில்லை.
நீ எப்போதும் தளகர்த்தன்!. கமாண்டர்,! ஜெனரல்!. நீ தும்மினால் ஆயிரம் பேர் உன் கீழ் பணியாளர்கள் தும்மிக் கொண்டிருப்பர் என ஒரு வேடிக்கைக்கு விளையாட்டாய்ச் சொன்னால் தப்பில்லை
.
எங்கு சென்றாலும் என்ன முடிவெடுத்தாலும் நீயே வெற்றியாளன். வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் நீ செய்யக் கூடியவன். வெற்றி நோக்கம், வெறியாய்…. பேராசையோடு….. உன் கண்கள் மிளிறும் நீ சுய மோகி! நீ வெல்வதற்காய் அடுத்தவனைக் கால் வாரத் தயங்காதவன். உன்னோடு போட்டி போட எவனும் புலப்படக்கூடாது. அப்படி வந்தால் உனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கண்னாவது போகவேண்டும். அவன் –உன் போட்டியாளன், வீழ்ச்சியடைய, அதைக்கண்டு உள்ளம் பூரிப்பவன் நீ!
வெற்றி வெறிகொண்டு, சுய மோகியாய், சமூகக் காரியங்களில் உலா வருகிறாய், ஆபத்தான தாக்குதல் நீ எதிர்பார்த்துக் காத்திருக்கிராய்! வளர்கிறபோதே ஜூடோ, கராத்தே என தற்காப்பு வித்தைகள் பயின்றவனாச்சே! உன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கிறாய், எல்லா முஸ்தீபுகளும் உன்னிடத்தில் ஆயத்த நிலையில்
. ஒன்று! இரண்டு! மூன்று! எதிர்த்துத் தாக்கு! தாக்கு! வியூகங்கள் அறியாத அபிமன்யுவல்ல நீ! வெற்றியாளன் நீ!
உன் அண்ணணேயாயினும், மாம்பழம் அவனுக்கு போகக் கூடாது. தாயானால் என்ன? தந்தையானால் என்ன! தூக்கியெறிவாய்! உன் செயல் வலிப்பான செயல்பாடுதான் எப்போதும். உன் அகந்தைக்குத் தீனி வேண்டும். அடுத்தவன் பாதிக்கப் படுவது குறித்தெல்லாம் நீ அக்கறைப் பட முடியாதவன். நீ ! நீதான் எங்கும்! எதிலும்!
சுத்த சுயம்புத் தாமிரம் நீ! உன் பளபளப்பில் உனக்குப் பெருமிதம் உன் அகந்தை! சிறப்பான வெப்பக் கடத்தி!
நன்றாக வளர்ந்துவிட்டாய். உன்னைச் சிறப்பாக பொருளாதார ரீதியில் கட்டமைத்துக்கொண்டிருக்கிறாய்! தன்னிறைவு எதிலும்..... குறையொன்றுமில்லை. சேகரத்தை இழந்துவிடக் கூடாதவன் நீ!. எளிதாக ஏறிவந்த வெற்றிப் படிக்கட்டில் சரியக் கூடாதவன் நீ! அசாதாரண தைரியத்துடன் , நம்பிக்கையுடன் பக்க பலங்களோடு உலா வருகிறாய். இப்போதும் உன் எண்னமெல்லாம் வெற்றி ஈட்டுவதில் மென்மேலும். !
வலிப்புகளோடு தான் வளர்ந்தாய். சிசு வயிற்ரோட்டத்தில், காலராவில், சுண்டி இழுக்கும் வலியோடுவதும் களைப்பில் சோர்வில் மயங்கி வீழ்ந்ததையும் நினைத்துப்பார்க்கிறேன்
என் பிரிய தாமிரமே! உன் உலோக ருசி நானறிவேன்.!

எங்கள் பரீட்டா கார்ப் நண்பர்கள்!

எங்கள் பரீட்டா கார்ப் நண்பர்கள்!
நீங்கள் இவர்களைப் பார்த்திருக்கக்கூடும் உங்கள் கவனம் வசீகரிக்கும் ஆளுமையாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இவர்களைப் பார்த்திருப்பீர்கள். .
அவர்கள் எல்லோரது உயரமும் சராசரிக்குக் குறைவுதான். உடலளவில் மட்டுமல்ல; மனதிலும் தான். புறத்தே உரையாடலும் குறைவுதான். பல கனமான விஷயங்களைக் கிரகிக்க முடியாமலும் விழுங்கி தம் வயப்படுத்திக்கொள்ள முடியாமலும் எப்போதும் ஒரு அவஸ்தைத் திணறல். ஏதோ தொண்டை அடைப்பான் நோய் தாக்குண்டவர்களைப் போல் அவர்களது காட்சித் தோற்றம். வியாபகக் குறைவால், தன் வெளி குறுகி, அதன் நான்கு எல்லையிலும் தடித்த சுவரெழுப்பி அதற்குள்ளேயே பத்திரமாய் வாசம். பிறத்தியானின் பிரவேசம் அத்துமீறலாகவே புரிந்துகொள்ளப்படும்.
அவர்களது ரத்தக்குழாய்களும், வலிப்பு கண்டு, வயதை மீறிய, தடிமனும், கனமும், குறுக்கமும் கண்டு, ரத்த சுழற்சி குறித்த சந்தேகங்களையும், குழப்பங்களையும் எழுப்பும். தேக்கம் பிதுக்கத்திலும், பெயர்தலிலும், கசிவிலுமாக முடியும். அவர்களை மீறிக் கட்டுப்பாடிழந்த நிலையில் ஏதோ வெற்றிக் களிப்பில் பித்தம் தலைக்கேறியர்களைப்போல் தங்கள் நடத்தைகள் குறித்த அவதானிப்பு ஏதுமின்றி அலைவர்.
எல்லோரும் ஒரே பிரதேசத்திலிருந்து வந்தவர்களைப்போல் ஒருவரையொருவர் அண்ணே அண்ணே என விளிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. விசேஷ அர்த்தமற்ற மிகச் சாதாரண விளிதான். தான் குள்ளமாயும் பருத்தும் இருப்பதால் பிறத்தியான் அண்ணணாகிவிடுகிறான். மற்ற ஊர்களில் பிள்ளைகள் நான்கு மாதங்களில் குப்புறத் திரும்பினால் இங்கே கதையே வேறு. எட்டு மாதம் பிடிக்கும்; நடக்க ரெண்டு வருஷம்; வாய் திறந்து மழலைப் பேச மூன்று வருடம். தலை பெருத்த தலைப் பிரட்டைகள் போல்; வயிறும் சூணா வயிறுதான். உள்ளங்கையிலும் பாதத்திலும் எப்போதும் வியர்த்தபடி. ஓடியாடி விளையாடாமல் உட்கார்ந்தபடியே தேங்கிக் கிடப்பர் சோம்பி. புதிதோ,புதியவரோ, விஷய கனமோ, எதையும் எதிர்கொள்ள முடியாமல், மனதிற்குப் பரிச்சயமான முகத்திற்குப் பின்னால் ஒளிந்துகொள்ளலே அடிக்கடி நிகழும். புதியதின் நிழல் கூட அச்சுறுத்தும்.
விழித்தெழுந்தேன் முழங்காலொன்று காணலை” எனும் கூத்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வரும் இவர்களைக் கண்டால். அடிக்கடி காட்சிப் பிறழ்வு இவர்கள் மனத்தில்- தாங்கள் முழங்காலுக்குக் கீழாய் ஊனமுற்று முட்டிகளால் நடப்பதுபோல். விநோத ஊனமுற்ற சிந்தனைகள். மன முதிர்ச்சியின்மைக்குக் கையும் காலும் நட்டுவைத்தது போல் தான் எல்லாம். விளையாட்டையே இழந்த குழந்தைமை. புதிதில் ஆர்வமின்மை, மாற்றத்தைக் கண்டுகொள்வதில் ஆர்வமின்மை.
தேவையை மீறிய உரத்த குரல் பேச்சும், கூச்சமும், குழப்பமும் சூழலோடு பொருத்திக்கொள்வதில் சிரமமுமே தினசரிப் பாடு. மூப்பு கூட இரண்டாம் குழந்தைமையே. மறதி எல்லையற்று; தன் வீட்டு கதவிலக்கம் தொடங்கி எல்லாமே மறதி. பொருட்படுத்த வேண்டாத விஷயங்களில் சந்தேகம், கவலை, முடிவெடுக்க இயலாமை. தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கும் சாமர்த்தியமின்மை. இந்த இரண்டாம் குழந்தைமை ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றம்” சிறுகதை மடத்திராமனை நினைவூட்டுகிறது. அவன் குழந்தையாய் இருந்து, பெரியவனாகி, வளர்ந்து, மூப்பெய்தி, மீண்டும், பல் விழுந்து, முடிகொட்டி தவழ ஆரம்பித்து, குழந்தையாகி பாதுகாப்பாய் கருவறைக்குள் பிரவேசிப்பதுபோல்.
சதா தன்னம்பிக்கையிழந்து பேசிக்கொண்டிருக்கும் சிறார்களை, வளர்ந்தும் குழந்தைகளை, வளரவே, முதிரவே இயலாதவர்களின் இந்தப் பேச்சை செவி மடுத்திருக்கிறீர்களா?
தனது ஆருயிர் நண்பன் இறந்துகொண்டிருக்கிறான்; மற்றவர்களும் தன்னைத் தனியே விட்டுவிட்டு போய்விடக்கூடும். அச்சம்.
தன்னையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள், விமர்சிக்கிறார்கள்.
தன்னிடம் மிச்சம் இருப்பதெல்லாம் கொள்ளை போகப் போகிறது
நான் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன்.
என்னுடல் பார்க்க அருவருப்பய் இருக்கிறது. மூலத் தீவினையாக இருக்குமோ?
தான் தொட்ட காரியங்களெல்லாம் தவறாகவே முடிகிறது. தன்னால் வெற்றிகொள்ள முடியாது.
என் மரணம் சமீபத்துவிட்டது. கால்கள் வெட்டப்பட்டுவிட்டன.
தீயின் பேச்சரவம் கேட்டு நடுங்குகிறேன் சிறு சத்தமும் எனக்குத் தாளவில்லை
என்னால் படிக்க இயலவில்லை. வாய் குளறாமல் பேசவும் முடியவில்லை
சிரமமிருக்காது உங்களுக்கு இனி இவர்கள் யாரெனப் புரிந்துகொள்ள! செல்லமாய் நாங்கள் பரீட்டா கார்ப் என அழைக்கிறோம் இந்த நண்பர்களை. இவர்களைப் புரிந்துகொண்டு நட்பு பாராட்டுவதில் பெரும் உற்சாகம் இருக்கத்தான் செய்கிறது.

Tuesday 18 November 2014

பல்சட்டில்லா ! என் இன்னுயிர் தோழி!

நீ இதிகாச நாயகி பாத்திரங்களில் எதிலும் நிச்சயமாய் உன் பிம்பத்தை வடித்துக் கொள்ளவில்லை. வானவில்லின் எந்த ஒரு வண்ணத்திலும் உன்னை ஒளியூட்டிக்கொள்ளவில்லை. இயல்பாகவே உன்னில் நீலம் அதிகம் என்றாலும் நீ அதிகம் சொல்லிக்கொண்டதில்லை. உன்னிலிருந்து பரவும் வாசம்-பாசம்-என்னவென்று சொல்வது?
இதுவரை, துல்லியத்தின் விழுமியங்களோடு எந்த சைத்ரிகனின் தூரிகையும் உன்னை வடிக்கவில்லை. அலை அலையாய் கரு நீல நிறத்தில் உன் கேசமும், சற்றே பூசியதுபோல் சதைத் திரட்சியும், சற்றும் வெப்பத்தைத் தாங்க இயலாது எப்போதும் ஜன்னல் திறந்து மெல்லிய குளிர்ந்த காற்றின் இன்பத்தை நீ நுகர்வதும்- அதற்காய் ஏங்குவதையும் நான் அறிவேன். இப்படி அழைக்கலாமா? என் மதிப்பிற்குரிய மென்மையான பெண்மணியே ! எளிதில் துணுக்குறுவதும், கண் கலங்கிவிடுவதும் உன் சுபாவெமென இரு நூறு வருடங்களாய் நீ குழவியாய் தவழ்ந்த காலந்தொட்டே சரியான புரிதலுண்டு எனக்கு.
புத்தெழுச்சிக்காலக் கலைஞர்கள் உன்னைப் புரிந்துகொள்ளவில்லை. ஏதோ குழந்தைகளின் மரப்பாச்சி பொம்மையைப் போல் உன்னைக் கொஞ்ச காலம் ஒளித்துவைத்துவிட்டார்கள். அவர்களின் அக்கறை அவ்வளவே! அதுவும் நல்லது தான். சரித்திர அதிர்வுகளில் எழும்பிய எந்த தூசியும் உன் மீது படியவில்லை.
பின் நவீனத்துவ புத்திசாலிகளின் கிட்டப்பார்வை தடுமாற்றத்தில் உன் இருப்பு அவர்களது பதிவுகளில், சொல்லாடல்களில், அவதானிக்க இயலாமல் போயிற்று.
பெண்ணியவாதிகளுக்குக்கூட உன் சகோதரியின் பிம்ப மயக்கத்தில் ஆழ்ந்துபோனதால், உன்னை கவனம் கொள்ளவில்லை.உன் கடைசிச் சகோதரி ஸெபியாவை அவர்கள் தீவிரமாய்க் காதலித்ததால் உன்னைப் புறக்கணித்துவிட்டனர். எல்லாம் பிம்ப மயக்கம்...அவளயும் உன் மூத்தவள் ப்ளாட்டினா இருவரை மட்டுமே உலக மேடைகளெங்கும் அரங்கேற்றினர் உன்னைக் கண்டுகொள்ளவே இல்லை.
ரத்த புஷ்டியாய், உன் பொய்த்தோற்றம். இந்த இரு நூறு வருடங்களில், நீ பருவமடைந்த காலத்திலிருந்து, பசலை நோயும்,பொருத்தப்பாடற்ற மாதவிடாயும், குருதித் தேக்கமும், ரணமும் வலியும், உன் ஆளுமையை ஒரு புறம் சிதைத்துக் கொண்டேயிருந்தாலும் உன்னில் ஆதிக்க உணர்வுகளும், வன்முறையும் கிஞ்சித்தும் இறங்கவேயில்லை. மூன்று சகோதரிகளுக்கிடையில் உன் அன்பின் வீச்சம் எப்போதும் உன்னை விட்டுக்கொடுத்தே போகச் செய்திருக்கிறது. முடிவெடுக்கும் சுதந்திரங்களை மற்றவர்களுக்காக துறந்திருக்கிறாய். சாம்ராஜ்ஜியக் கனவுகள் உன்னிடம் இல்லை. அன்பை மட்டுமே பிறரிடம் எக்கணமும் யாசித்திருக்கிறாய். எதிர்கொண்ட காயங்களில் ஊண் நீர் வடியும்போதும் கூட எப்படி உன்னால், மனதில் எரிச்சலைத் தேக்கிக் கொண்டே மிதியடிபோல் எல்லோரும் நடந்துபோகக் கிடந்துவிட முடிகிறது.?
நானே பயந்திருக்கிறேன் – எங்கே, இனம் கண்டுகொள்ள முடியாமல் தளுக்குப் பேச்சுக்காரர்களின் வலையில் எளிதாய் விழுந்துவிடுவாயோயென்று? மெல்லிய காற்று வீசலைக்கூட தாங்க முடியாமல் வளைந்துவிடும் சுபாவம் உனது. ஆண்களை உன்னால் எதிர்கொள்ளவே இயலவில்லை. இந்தக்காலத்தில் கூட உனக்கு ஆண்கள் என்றாலே பயம்.
யாசிக்கும் அன்பு கிட்டாத தருணம் , எல்லோராலும் கைவிடப்பட்டு வெண்ணிலையாக நிற்பதாய் உணர்வாய். தனிமையை உன்னால் தாங்க இயலாது. இதமான வருடலுக்காகவும், இரக்கம் தோய்ந்த சொற்களுக்காகவும், வெப்பமான ஆரத் தழுவலுக்காகவும் தவமிருப்பதே உனக்கு சாத்தியம்.
எப்போதும் எளிதாக உன்னை உப்புமூட்டை சுமக்கும் விளையாட்டையே குழந்தைப்பருவத்தில் அதிகம் விரும்பினாய். அடிக்கடி , உடலின் வலி ஒவ்வொரு இடமாகத் தாவுவதாக துன்புறுவாய். உன் மன நிலை மாற்றம் போல் உன் உடல் உபாதைகளும் மாறிக்கொண்டேயிருக்கும்.
பார்க்க வேடிக்கையாயிருக்கும்! நீ தூங்கும்போது! தலைக்குக்கீழாய் கயை சும்மாடு கொடுத்தோ அல்லது நெற்றிமேல் கிடத்தியோ ஒயிலாகத் துயில்வாய்! ரொம்பப் படுத்துவாய் வீட்டிலுள்ளவர்களை. நீயாக சாப்பிட மாட்டாய்- யாராவது வற்புறுத்த வேண்டும்- ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொன்னால் சாப்பிடவாவது செய்வாய். ஆனால் தண்னீர் மட்டும் குடிப்பதே இல்லை. ஆமாம் உனக்கு மட்டும் தாகமே எடுக்காதா என்ன? எப்படி இருக்க முடிகிறது உன்னால்?
சாயங்கால வேளைகளில் ”வாசற்படியில் பூதம் வந்து நிற்கிறது பயமாயிருக்கு” என்று சொன்ன நாட்கள் அதிகம். எளிதில் பதட்டப் படுவாய். கைகள் உதறும். உடலின் வலப்புறம் மட்டும் உனக்கு வேர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். ரகசியமாய் பொறாமைகளை உனக்குள் புதைத்து வைத்திருப்பாய்.
உன் விநோதமான எண்ணங்களை என்னிடம் சொல்லியிருக்கிறாய். கண்ணை முடினால் போதும் ஏதேதோ உருவங்கள் என் முன் வந்து போகிறது என்பாய். ஒரு சமயம்- உன் இரவு உடைகளை அணிந்துகொண்டு யாரோ ஒருவன் –அந்நியன்- உன்படுக்கையில் கிடப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஓவென்று அழுதுவிட்டாய். எப்பவும் பயம். என்ன ஜென்மம் நீ தோழி?
உன் கைகளைப் பிடித்துக்கொண்டு யாராவது தெரிந்தவர் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தால் நீ சிறகடிக்க ஆரம்பித்துவிடுவாய்! கொஞ்ச நேரமாவது!.இல்லையென்றால் பயத்தில் ஜெபிக்க ஆரம்பிதுவிடுவாய். நெட்டுருப்பண்னி வைத்திருக்கும் மந்திரங்களை வாய் தானாக முனுமுக்கும் நான் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்!
உன் கனவுகளை நடுங்கிக்கொண்டே சொல்லியிருக்கிறாய் என்னிடம்- ஒரு நாள் ஒர் கறுப்பு நாய் கன்னங்கரேலென்று உன்னைத்துரத்துகிறது. ஓடுகிறாய் சிலசமயம் அது கறுத்த பூனையாகவும் இருக்கலாம். தேனீக்கள் சூழ்ந்துகொண்டு உன்னைத் துரத்துகிறது. பயத்தில் உனக்கு உடல் வெடவெடக்கும்- தலை சுற்றும். வாந்தி!அழுகை கண்ணில் நீர் முட்டிக்கொண்டு நிற்கிறது.
என் அன்புத்தோழி! உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்- உன்னைப்பற்றி சிந்தனைகள் மனத்தில்!
என் குடும்பத்தாரும் சுற்றமும் நட்பு வட்டமும் ஆச்சரிய மிகுதியில் உன் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றனர். என்னில் நீங்காத இடம்பெற்றுவிட்ட உன்னைப் பார்க்கவேண்டுமாம் அவர்களுக்கு!
சொல்லவா? உன் பெயரைச் சொல்லிவிடவா? உன்னை ஒருமுறைப் பார்த்துவிட்டால் அவர்களுக்குக் குதூகலம் வந்துவிடும். நீ எங்கிருந்தாலும் உன்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள். நிச்சயம் உன்னைப் பிடித்துவிடும். உன் உதவி அவர்களுக்கு அதிகம் தேவைப்படலாம்.
ஒருவேளை என் அதிகப்பிரசங்கி ஓவிய நண்பன் உன்னை வரைந்து பக்கத்தில் இரண்டு அன்னப்பறவைகளையோ அல்லது அவனுக்கு அதிகம் எளிதில் வரையவரும் இரண்டு யானைகளையோ மலர் தூவச்செய்து சித்திரம் வரையலாம். ஸர்ரியலிஸம் அறிந்தவன் உன்னைச் சுற்றி காற்றை குறிப்பாய் உணர்த்தி உன்னில் ஒரு சூரியனையும் வரையலாம்.
ஒரு கவிஞன் கவிதை எழுதி பாலக்ருஷ்ணனாய் உன் வாய் பிளக்கச் செய்து வெள்ளை படிந்த உன் நாவை வெண்ணையுண்டத்ற்கு குறிய்யிடு சொல்லலாம் போகட்டும் அவரவர்க்குத்தெரிந்ததை அவரவர் சொல்லட்டும்.
சரி! மெத்தச் சரி! கடைசியாக தோழி உன் பெயரை உன் அனுமதியுடன் சொல்லப்போகிறேன்.
எல்லோரும் கேட்கும்படி உரத்துச் சொல்கிறேன். என் இரு நூறு வருடத் தோழி வேறு யாருமல்ல.
பல்சட்டில்லா! அதுதான் அந்த ஆளுமையின் பெயர். இப்போது தெரிகிறதா யாரென்று?
அலாஸ்கா என்ன? வ்ளாடிவாஸ்டக் என்ன? க்வீன்ஸ்லாந்தாய் இருந்தாலும் சரி! கூப்பாச்சிக்கோடையாய் இருந்தாலும் சரி ! எங்கெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் என் தோழி பல்சட்டில்லா இருப்பாள். அவர்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஜெர்மனியில் என் ஆகப் பழைய நண்பன் - தாவரவியல் நிபுணன் அம்மாநிலத்தின் தலைமை நீதிபதியுங்கூட அவன் ஷயரோகம் கண்டு இருமி இருமி ரத்தம் துப்பிக்கொண்டு கோழையோடும் சுரத்தோடும் படுக்கையில் சுருண்டு கிடந்தபோது இவளே- என் அன்புத் தோழியே- அவனுக்கு உறுதுனையாய், ஒற்றத்தேவதையாய் உதவிசெய்து, அற்புதமென எல்லோரும் ஆர்ப்பரிக்கும்படி அவனை- என் ஆகப் பழைய ஆருயிர் நண்பன் கார்ல் வானை நலமாக்கினாள்.
இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. ஓய்வெடுக்கவேண்டும். ஒரு சில மணித்துளிகளாவது என் தோழிபோல் என் கையை தலைக்கு அண்டக்கொடுத்து ஒய்யாரமாய், விஷ்ராந்தியாய் படுக்கப்போகிறேன். அவளை எந்த விஷயத்திலும் போலி செய்ய இயலாது. சும்மா ஒரு பாவனைதான்.