Wednesday 4 June 2014

அசல் தேடும் நகலின் பிலாக்கணம்

  1. அசல் தேடும் நகலின் பிலாக்கணம்

    அரை ஜீபீ போறாத வாழ்க்கை
    கூட்டுப் புழுவாய் தொங்கி தூங்கி
    ஊர்ந்து, அந்தர் அடித்து,சிறகு விரியப்
    பறந்திடும் ஆசையில் பல நாள்!
    வாங்கி வந்த வரத்தை யோசிக்கையில்
    சிறகுகள் வருமுன் சீவனற்றுப்போகும்!
    சூறாவளிகள் நகர்த்தி தூர வீசியெறிந்தும்
    மீள தொடக்கப் புள்ளி தேடி புழு ஊர்வலம்...
    காலியான பெர்ஃயூம் குப்பிகள் அணிவகுப்பில்
    இருத்தலின் மணம் பூரிதமாகும் நம்பிக்கை
    கையெழுத்துப் போட ஒட்டிய ஸ்டாம்புகள்
    விளம்பிய முகவரி விரைவாய் தொலைய
    ஒலிபெருக்கி முன் நின்று கணைத்தலில்
    வாங்கிய ஆராய்ச்சிப் பட்டம் எல்லாம்
    ஊசித்துளையில் ஒட்டகம் நுழைய
    வழி சொல்லிக் கடந்து போயின!
    காத்திருக்கலாம் இனி அடுத்த சூறாவளிக்காய்!
    அதுவும் இல்லையேல் அரைக்கால் ஜீபி தான்.
    எருக்குழி சாணம் நிரப்பிய நிம்மதி மட்டிலும்

காட்டாமணக்குப் பால் கறைகள்

  1. காட்டாமணக்குப் பால் கறைகள்
    சட்டை நிறைய சிறுவயதில்
    உவர் மண்ணோ சவுக்காரமோ
    கறைக் குறை நீங்கியதில்லை

    காற்றைப் பிளந்து புழுதி பறக்க
    சைக்கிள் நட்புப் பலகாலம்
    மசைக் கறைகள் ட்ரௌசரெங்கும்
    கருப்பாய் பழுப்பாய் திட்டுத்திட்டாய்
    ...
    கறை நிறம் புதிசாய்ப் பார்த்ததில்லை
    பணியிடத்தில் பக்கத்து இருக்கைக்காரன்
    கைகள் சிவக்கக் காவலர் வந்ததும்
    புரிந்தது பணத்திலும் கறையுண்டென

    துரோகக் கறைகள் நீங்காதென்பார்
    திருமதி மாக்பெத் கைகள் கழுவியபடியே
    கார்பன் கறைகள் மனிதக்கொடை பாரெங்கும்
    ஏழு ஜென்மம் தொடரும் பாவக் கறைகள்

சக்கரவர்த்தி கோமகன்களிடன் கடன் கறந்து

  1. எனக்கு தெரிந்த ஆறும் படுகையும் போல்
    பட்டாமணியமும் கணக்குப் பிள்ளையும்
    நானானறிந்த பெரிய மனிதர்கள் கை நீளமாய்
    பாக்கெட் பெரிதாய் எப்போதும் ஜமாபந்தி.

    வல்லவனுக்கும் வல்லவன் உண்டுதானே
    இன்னும் பெரிய மனிதர்கள் பார்த்தேன்
    குரல் நாண்களில் பாரீச வாயு தாக்கியவராய்
    தவளைக் குரலில் இழுத்துப் பேசுவார்
    ...
    மெல்லிய ரப்பர் குழாயில் காற்றடைத்து
    சுற்றிலும் முரட்டு டயர் உடுத்தியவராய்
    ஊதிய பெருக்கம் எப்போதும் பேச்சில்
    சக்கரவர்த்தி கோமகன்களிடம் கடன் கறந்து
    நம்மூரில் பால் உரைக்கூத்தத் தெரிந்தவர்

    எப்போதும் அடுத்தவன் பணமே குறி
    பணம் வந்துவிட்டால் மணலைத் திரித்து…….
    மாட்டு மூத்திரம் கறந்து ஏற்றுமதி
    இயற்கை உரம் தயாரிக்க வெளியூரில்

    உள்ளூரில் பத்துகிலோ ஒரு கத்திரிக்காய்
    செயற்கை விதை இறக்குமதி மாயமாம்

    கூடு விட்டுக் கூடுபாயும் கலை விற்பன்னர்
    இவர் ஒபாமா உடலுக்குள் போவார்
    அவரும் இவர் உடலில் புகுவார்
    எல்லாம் ஒரே கணத்தின் அற்புதம்
    பேச்சு மட்டும் அவரவர் சொந்தக் குரலில்.

    இவர் போல் பேச எவராலும் ஆகாது
    திருஷ்டி சுத்திப்போட மண் தான் கிடையாது
    எல்லாப் படுகையும் விற்பனைக்கே போச்சே
    இருக்கவே இருக்கு ஆலை சாம்பல்
    இனி சாம்பல் சுற்றினால் கெட்ட கண் போகும் திட்டம்.

Sunday 1 June 2014

தொட்டிலில் உறங்கும் குழந்தை

  1. தொட்டிலில் உறங்கும் குழந்தை
    கனாக்கண்டு சிரிக்கும் தானாய்
    பாம்பில்லை அதன் கனவில்
    பஞ்சு மிட்டாயும் வந்ததில்லை
    என்னவென்று புரியாமல் சிரிக்கும்
    எப்படியும் எதாவது கிடைத்துவிடும்
    தொட்டிலில் உறங்கிச் சிரிக்க
    கருப்பைப் புறவெளி வியாபகம்
    பிஞ்சுக்கை முறித்துத் திமிறும்
    கால் நீட்டித் துழாவும் ஆனாலும்...
    காதில் இரைச்சல்கள் இல்லை
    புறச்சத்தம் ஏதும் பாதிப்பில்லை
    அகச்சத்தம் இல்லவே இல்லை
    ஊமைப்படமாய் எல்லாக் காட்சியும்
    ஒருவேளை தொட்டில் மொழி
    சத்தமற்ற, சலனமற்ற காட்சியோ?
    திரிசங்கு நிலையில் ஊஞ்சல்
    மேலே மட்டிலும் இணைப்பு
    கீழென்று ஏதுமற்ற வெளி
    மேன்மை நோக்கிய பயணம்போல்!

பாடாக் குயில் காகம் தானென

  1. காகமாய்க் கரையும் பெண்குயில்
    ஒரு நாளும் பாடியதில்லை
    பாடுவதெல்லாம் ஆண் குயிலே!
    காம விழைவின் அறிவிக்கையே!
    ஹைப்போதலாமஸ் விசிலடிக்குதென
    விலாவாரியாய் விஞ்ஞானம்!
    பாடாக் குயில் காகம் தானென
    பால பாடம் சொன்னாள் பாட்டி!
    ஆனாலும் போற்றுவோம் பெண்குயிலென
    சினிமாவில் பாடும் பாடகியை!

ரோஜா வம்சமும் தாமரை வம்சமும்

  1. ஊசி மிளகாயும் குண்டு மிளகாயும்
    நட்பில் செழித்த யுகத்தில்
    இருவருமே நல்ல காரமென
    சுய தம்பட்டம் கொஞ்சம் அதிகம்!

    சந்தைப் பெருமைகள் சில நாட்களே
    சுய மோகம் வேரிலிலிருந்து ஊற
    மோவாயிடித்து பிறர் பழிப்பும்
    புறங்கூறலும் நாளும் நடந்தது
    ...
    வேற்றுமைகள் இல்லாமலே வேறுபட்டு
    அரிதாரங்கள் மாற்றிப் பூசி புனுகும்
    ஜவ்வாதும் சந்தனமும் அலங்கரித்து
    தான் ரோஜா வம்சமென ஊசியும்
    தான் தாமரை வம்சமென குண்டும்
    ஆர்ப்பாட்டமாய் போட்டா போட்டி!

    கடுகு சிறுத்தாலும் காரம் குரையலாகாது!
    நடுவராய் பன்னாட்டு நரிகள் கட்டளை
    ஐந்து வருடம் ஊசிக்கு சந்தைக் குத்தகை
    ஐந்து வருடம் குண்டுக்குக் குத்தகை
    மாற்றி மாற்றி தந்திரமாய் ராஜ்ஜியம்!
    ஜோராய் கைதட்டும் ரசிகர் கூட்டம்!
    வேறு பாக்கியம் நமக்கில்லை போலும்!

பட்டமெதற்கு பட்டாபிஷேகம் தானெதற்கு?

  1. நான் என் உடலெங்கும்
    உச்சந்தலையிலிருந்து
    உள்ளங்கால் வரை
    தவிட்டு நிறத்தில்
    வழவழவென
    அட்டை போட்டு
    வெள்ளையாய் லேபிள்
    ஒட்டிப் பேரெழுதி
    கற்ற கல்வியும் காட்டி
    வெளியெங்கும் அலைகிறேன்...

    பெயரென்றால் என்னவென்று
    நண்பன் கேட்கிறான்

    நேற்றுக் கொட்டிய தேனீயின்
    பெயரென்னவென்று அறிவாயா?
    பிராது கொடுக்கப் பெயர் வேண்டுமோ?

    தினமும் காலையில்
    துளசிமாடம் சுற்றிவந்து
    ஒரு கை உருவி
    வாயில் போட்டுக்கொள்கிறாள்
    உன் அம்மாவும் என் அம்மாவும்
    உருவிய இருவீட்டுத் துளசிக்கு
    இரு வேறு பெயருண்டா ?
    எல்லா துளசியும் துளசிதான்

    பாரபட்சம் நம் குலப் பெருமையாம்!!!

    குரங்கில் வாலி சுக்ரீவன் பெயருண்டு
    பருந்தில் ஜடாயு பாம்பில் சேஷன்
    ராமர் வருடிய அணில் பெயரென்ன?
    அவதார மச்சமும் வராகமும்
    லேபிள் ஒட்டிக்கொண்டதா?

    ப்ரம்மா டீஜீஓ,விஷ்னு எம்பீபீஎஸ்,எம்டீ
    யமதர்மன் எம் ஏ.எம் எல்
    ரெண்டு முறை சொல்லி
    ஜெபித்துப்பாரென்றான் !
    நான் முகம் சுளித்தேன்
    உனக்கு மட்டும் பட்டமெதெற்கு
    பட்டாபிஷேகம் தான் எதற்கென்றான்?