Saturday 26 April 2014

வாசல் குறட்டில் வழுக்கி விழுந்தவன்

  1. காத தூரம் மாயமான் வேட்டை
    காதறுந்த ஊசியை கையகப்படுத்த
    காவிக் கோஷம் காதைப் பிளக்குது

  2. கடவுச் சீட்டு இல்லாமலே
    கடல் தாண்டும் யோசனைகள்

    பொரிஉருண்டைக் கொரிக்கும் பற்கள்
    ப்ளாட்டின முலாம் பூசி நிற்கும்

    கழுத்தில் தேக்கிய விஷமெடுத்து...
    ஆயிரம் பேருக்கு பங்கு வைக்கும்
    தேவ தர்மம் தலை தூக்கும் நாளில்........

    தொட்டாற் சுருங்கியை நிமிர்த்திட
    திகட்டாத விவாதம் தொடுவான் வரை

    யானைக்குக் குடைக் கொசு வலை தைக்க
    மான் கொம்புக்குத் தங்கக் காப்புப் பூட்ட
    சகடையில் உருளும் கணப் பொழுதுகளுக்கு
    வர்ணம் பூசி வாசனை திரவியம் சேர்க்க......

    கொள்முதல் வேண்டி திருவோடு ஏந்தி
    வாசல் குறட்டில் வழுக்கி விழுந்தவன்
    உலக மயமாய் வலம் வருகிறான்......
  3. நிலத்தையும் நீரையும் வைத்து சூதாடல்
  4. மரபு வழி மாற்றுதல் அரிது என்கிறான்.

    குட்டைத் தண்ணீரில் முக அழகு பார்த்தே
    வீனாய்க் கழியுது எங்கள் பொழுது.

Friday 25 April 2014

மலினப்பட்ட மனிதம்

மலினப்பட்ட மனிதம்

ஒரே ஒரு நாற்காலி
அவரது சம்பத்து
குடிசைக்கு வெளியே
குந்தியிருந்தது எப்போதும்
வேப்ப மர நிழலில்

சுற்றிலும் வெட்டுபட்ட முடிகள்
கறுப்புத் திட்டுக்களாய்...
இரைந்துகிடக்கும்
காற்றில் ரெக்கை முளைத்துப்
பறந்து போய் தூர விழும்

பலரை அமர்த்திப்
பெருமை சேர்த்த நாற்காலி
முடி திர்த்தவும்
முகம் திருத்தவும்
வந்து அமர்ந்து
நேர்த்திக் கடன் ஏதுமின்றி
கோரைக் கற்றைகளை
விட்டுப் போவர்

சோப்பு, பூதர மாவு
ஏதுமின்றி சிக்கன திருத்தம்
மலிவு விலையில்
காசு தராமல்
கடன் சொல்வோரும் உண்டு

பரமசிவம் ஏதும்
பேச மாட்டார்
வழுக்கை தலையைத்
தடவிக் கொண்டு
லேசாய் சிரிப்பார்

கரடியாய் வந்து
அழகாகிப் போகும்
அத்துணை பேருக்கும்
அவர் ஆப்த நண்பர்

நரைக்கு மருந்து
நகப் புரைக்கு மருந்து
வழுக்கைக்கும் ஆலோசனை
தலையில் கரப்பான்
சொறி சிரங்குத் தேமல்
எளிதாய் தீர்வு
பகருவார் பரமசிவம்

இப்போதெல்லாம் விடுமுறையில்
ஊருக்குப் போனால்
நாற்காலி மட்டும்
சரிந்து கிடக்கிறது
தொழில் நசித்துப் போய்
தொலைந்தும் போனார்

முடி திருத்துவோர் சங்கம்
அறிவிக்கை சொல்கிறது
முடி திருத்தவும்
முகம் திருத்தவும் விலையை!

அடிக்கடி கை
தடவும் தலையை
அவர் நினைவில்
பிடரியில் மெஷின் போட்டு
ஏத்தி வெட்ட அப்பா தரும்
கடளைக்கெல்லாம்
சிரித்தபடியே இருப்பார்

ஊர் மனிதர்
அனைவருக்கும்
அழகு செய்த பரமசிவம்
கடன் கிடுக்கிகளில்
தலை கொடுத்து
வெட்டுண்டு போனதாய்
சேதிதான் மிச்சம்!

Wednesday 23 April 2014

கால வெளியில் கழன்றுபோன என் இடது தோள்

  1. கால வெளியில் கழன்றுபோன
    என் இடது தோளைத் தேடுகிறேன்
    துருவ கரடிகள் சுமந்த குளிரை
    எளிதாய் தாங்கிய தோளது

    ஒற்றைக் கையால் லகுவாய்
    ஏவுகணைகள் வீசிய தோரணை!- இன்று
    எங்கு சென்று தேடுவது

    பண்ணை அறுவடை நாட்களில்...
    அரிவாள் பிடித்து சுழற்றிய
    ஞாபகம் அண்மையில் கூட…….

    சிலை வடிக்க மாதிரியாய்
    ஆணும் பெண்னும் தோளுயர்த்த
    உயர்ந்த தோளது என்றும்!-இன்று
    எங்கு சென்று தேடுவது

    தோளை இழந்தவன்
    தோழமை இழந்தவன்
    அங்குசம் ஏந்தி மண் அழிக்கும்
    மதயானை அடக்க- தேவை
    இடது தோளின் உக்கிரம்.

    இரவல் தோள்தர
    கூட்டணி போட பலர்
    இருப்பின் சாட்சியம்
    நான் அறிவேன் ஆயினும்
    என் இடது தோளையே
    நான் நேசிக்கிறேன்

    வெளியெங்கும் அலைதலில்
    சில அகவைகள் கரைதலில்
    ஒரு நாள் மீண்டும்
    மீட்டெடுப்பேன்
    இடது தோளை!!

பாட்டி அறிவாள் யந்திரத்தின் மகிமை

  1. பாட்டியறிவாள்
    யந்திரத்தின் மகிமை
    ஒரு கால் மடக்கி
    ஒரு கால் நீட்டி
    யந்திரத்தின் முன்
    கைப்பிடி குச்சியின்
    கழட்டுத் தள்ளாட்டம் போக்கி
    துணைக்கு ஆணி இறுக்கி
    முதலில் தவிடு அரைத்து
    பின் தானியம் சுற்றும்...
    மாவாய், நொய்யாய்
    மையத்தில் சேகரம்………..

    விளிம்பில் வீழும்
    மாவை வாகாய்
    சேகரிக்கும் கைகள்
    தூரத்தில் சிதறும்
    மனிகளை மீண்டும்
    அரைத்து பொடி செய்ய
    மனம் ஒப்புவதில்லை
    சிந்தியது சிந்தியதே………….

    கை சுழற்றும்
    வாய் வெற்றிலை குதப்பும்
    நாக்கு துழாவும்
    இதற்குள் லகுவாய்
    ஓரிரு தடவை
    கால் மாற்றி
    உட்காரும் சமர்த்து
    வலி தெரியாமல்.

    பாட்டியறிவாள்
    யந்திரத்தின் மகிமை
    பிருமணை போட்டு
    குந்தவைத்த பலகாரச் சட்டி
    விரைவாய்க் காலியாகும்
    ருசியறிவர் மற்றவர்

    காமிரா உள்ளில்
    மூலையில் நிற்கும்
    பாட்டி படுக்கும்
    கிழிந்த கோரைப்பாய்
    சாட்சியாய் அனைத்துக்கும்

தப்பி வந்த புறா

  1. தெருவில் ஆடும்
    விடலைக் க்ரிக்கெட்டர்கள்
    வேகமாய் அடிக்க
    இரண்டாம் மாடிவரை’
    ஏவுகணையாய் வந்து
    என் வீட்டு பாத்ரூம்
    ஜன்னலில் ஆலமரப்
    பொந்தொன்று
    விட்டுச் செல்ல
    ...
    தப்பி வந்த புறா
    நுழைந்து ஏகதேசமாய்
    பயத்தில் தங்கிவிட
    சிறகடிப்பின் அதிர்வில்
    எல்லோர் மனமும்
    அதிர்ந்து நடுங்க
    தாளிடப்பட்டது கதவு
    நாள் முழுதும் பாத்ரூம்
    பயனற்றுப் போனதே பேச்சாய்!

    இரவில் அடைய வீடு வந்த
    நான் கதவைத் திறக்க
    அனுமதி மறுப்பு
    மீறல் எனக்கோ சாசுவதம்!
    தாள் திறவாய் பாடி
    உள் நுழைந்தால்
    சின்னஞ்சிறிசாய்
    புறா குஞ்சொன்று
    தனிமையில்
    நடுங்கி விரைத்து
    கழிவிரக்கத்துடன்
    ஒடுங்கிக் கூனிக்குறுகி
    படபடப்போடு
    சிறகில் நடுக்கம்

    நான் பிடிக்கும்
    முஸ்தீபுகள்
    எடுபடாமல் கொஞ்சம்
    போக்குக் காட்டிப்பின்
    கையில் யாசிக்கும்
    அன்போடு வந்தமர
    புறாவை முத்தமிட
    உயரத் தூக்கியதும்
    ஜன்னல் பொந்தில்
    விடுதலையாகும்…..

    நாள் முழுதும்
    பட்டினி போட்ட
    அனைவரும்
    சிறைபட்டு
    நின்றனர்
    பச்சாபத்தோடு
    பகலில் பட்ட
    மல ஜல உபாதைகள்
    நினைவை உறுத்த

    சதுரமாய் அட்டை வெட்டி
    பொந்தை அடைக்கும்
    புத்திசாலித்தனத்தோடு
    என் பேரன் ஆர்வம் காட்ட
    நீங்களும் இருக்கீங்களே!
    வசவுகள் மறு நாள் வரை…....