Monday 18 August 2014

அறிவுக்கோணல்

அறிவுக் கோணல்……..

வளைந்தும் நெளிந்தும்
ஒரே இம்மியைச்
சுற்றி சுற்றியும்
சுழல் ஏணியில் மேலேறி
திருகின் புரியில் சிக்கியும்
மொத்தைக் கண்டு நூலும்
சிடுக்கு விழுந்தும்………
...
தினமும் புழங்கிய
சமன்பாடுகள் குலைகையில்
அறிவுக் கோடல் லட்சியம்
அறிவுக் கோணல் நிதர்சனம்
என்னளவில் மட்டுமென
பாசாங்கு விலக்கி
புறத்தே சொல்ல
விழையும் மனது!

உலகத்தையும் நாடகத்தையும்

உலகத்தையும் நாடகத்தையும்
மேதைகள் ஒப்பிட்டப் போய்
வேஷங்கள் முக்கியமாயின!
ஒரே கணத்தில் பல வேஷம்!
இறைவனுக்குப் பிடித்த
நான்கு முகங்களாய்!...

சாவி கொடுத்து
சுருள் வில் முடுக்கியதும்
கேசம் அடர்ந்த பொம்மை
தத்தித் தத்தி நடக்கும் வேஷம்
சகலருக்கும் பிடித்த ஒன்று!

திகட்டும் வேஷங்களாய்
மருத்துவர், காவலர், போராளி
நீதியரசர், படிப்பாளி எல்லாம்!

உம்ம் போடு! உம்ம் போடு!
எல்லா முடிவுக்கும் உம்ம் போடும்
பொம்மையாயிரு!
பொம்மையாய் நட!
வேடிக்கை காட்டு!
பல்லிளிக்கும் தொழில் நுட்பகாலம்
இதையும் விட நல்ல வேஷம்
இனி என்றைக்கும் கிடக்காது

விதம் விதமாய் பொம்மைகள்
முடுக்கிவிடப்பட்டு உம் போட்டபடி
நடந்து போகட்டும், நாடக உலகில்!
Ravichandran Arumugam's photo.

சோளக்கொல்லை பொம்மைக்கு

சோளக் கொல்லை பொம்மைக்கு
கோட்டும் சூட்டும் மாட்டிவிட்டு
அதிகாரி முன் கொண்டு நிறுத்து
அத்தாட்சி தரும் அதிகாரி!

அது பேச, விவாதிக்க, நிரூபிக்க
காகித நிரூபணம் சமர்த்தென!
கொம்புள்ள அதிகாரி கையெழுத்திட்டு!

நாமகரணம் ஆயாச்சு!...
இனி நீ பொம்மையில்லை!

ஒல்லியும் உயரமாய்
சரியும் தோள்களோடு
வயிறு எப்போதும் காலியாய்
தலையும் அப்படித்தான்!
ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி
கொஞ்சம் நாட்டியம், நாடகம்
கொஞ்சம் க்ரிக்கெட் ஆட்டம்
சமூக மனிதன் இரக்கத்தோடு
பரவி வியாபிக்கும் நட்போடு!

அத்தாட்சி பெற அதிகாரிக்குக்
கொடுத்த விலை மீட்க
வழியொன்று உண்டு
எல்லாரும் நம்பிட!
உன்னைக் கும்பிட!

நீ சொன்னால் நடந்துவிடுமென
சொல்லி பிழைத்துக்கொள்!!
குறி சொல்! எல்லாம் நன்றாய் நடக்குதென!
காவல் அதிகாரியாய் சொல்!
நீதி அரசராய் சொல்!
நடப்பதெல்லாம் நன்மைக்கேயென!
குறையொன்றும் இல்லையென!

தானாய் மலரும் புல்லையும் பூவையும்
மாதிரியாய் சொல்லிக்காட்டு! நம்புவர்!

வயிற்றுள் திணித்த
வைக்கோல் தீர்ந்து போகுமுன்!
தலைக்குக் கவிழ்த்த சட்டி உடையுமுன்!
கறுப்புக்கோட்டில் வைத்த
வெள்ளைப் புள்ளிகள்
அடுத்த மழையில்
அழிந்து போகுமுன்!