Saturday 22 February 2014

விழுங்க முடியாமை

விழுங்க முடியாமை

தொண்டை அடைக்கும் தருணங்கள்
எச்சில் கூட்டி விழுங்கி சமாளிக்கப்
பிரயத்தனம்; ஆனாலும் நீங்காதது அடைப்பு
முள்ளாய் குத்தும், திணறும், கண் கலங்கும்
கவிதை எழுதலாம்! அடைப்பின் புலம் தெளிய
ஓவியம் வரையலாம் வண்ணங்கள் குழைத்து
மிடறு ஏறி இரங்கும் பாவனையை!
இன்னும் என்னென்னவோ செய்யலாம்...
அடைப்பு முழுதாய் அடைக்க்கும் வரை
தானாய் நீங்குதலும் சிந்தனைக்குட் பட்டதே
டிஸ்பேஜியாவுக்குக் காரணம் சொல்வான் வைத்தியன்
பூஞ்சக் காளான் வழி நெடுகப் படிந்திருப்பதாய்
கண்டமாலைபோல் கோளங்கள் வீங்கியதாய்
தொற்று, புற்று எனப் படுத்தல்களின் பட்டியல் நீளும்
சீ டீ ஸ்கான், எம் ஆர் ஐ இத்தியாதிகள்
இருளில் ஒளியைப் பதித்தபடி,பிடித்தபடி
வியாக்கியான சாமர்த்தியங்கள்,விவரணங்கள்
யாரறிவார்? குறுகலான சந்தில் ஆழ அகல யோசனைகள்
மேலேறவும் கீழிறங்கவும் வாய்க்கால் தேடும்
தொண்டை அடைக்கும் தருணங்கள் அடிக்கடி!
எச்சில் கூட்டி விழுங்கி சமாளிக்கப் பிரயத்தனம்………….

கால் அண்டா ஆழத்தை காலண்டர் கொண்டு


கால் அண்டா ஆழத்தை

காலண்டர் துணைக்கொண்டு அளக்கிறாயா

என்று கேட்டார் கவிஞர் ந.பிச்சமூர்த்தி

மீள மீள இதே கேள்விதான் எழுகிறது

அண்டம் சார் நகர்வுகளாயினும் சரி

அரசியல் சார் முடிவுகளாயினும் சரி

பெரிது சிறிது, சரி,தவறு

அளவீடுகள் எப்படி?

ப்ரம்மாண்டம் தவிர்த்த சிறிதே அழகு

கட்சிக்காரர்களுக்கும் இதே ப்ரச்சினையே

எல்லா காலத்துக்குமான நிரந்தர

அளவீடுகளும் இல்லை மாற்றங்களே மதிப்பீடுகளை

காட்டித்தரும் என்பது பழங்கணக்கானது

மாற்றங்களும் தரத்தைச் சொல்லுவதில்லை

மண் மிதிக்கும் எந்திரமென உருளும் காலம்

பெரிதும் சிறிதும் விளக்கமற்று

நிரந்தர இயக்கம் உண்மைதானோ?

Saturday 15 February 2014

ஹோமியோபதியில் நோய்களின் வகைபாடு


இன்றைக்கு அல்லோபதி மருத்துவத்தில் பயன் படும் நோய்களின் வகைபாடு, திரு, தாமஸ் சிடன்ஹாம் 1660களில் முன் மொழிந்தது

தனித்து அடையாளங் காணக்கூடிய நோய்களுக்கு தனிப் பெயரும்,  தொகுப்பு நோய்களை ஸிண்ட்ரோம் எனவும் அழைக்கின்றார்கள்.  உம் டைஃபாய்ட்,   நிமோனியா, போன்றன. இவ்வகை பாட்டை ஹானெமன் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆர்கனான் நூலில், அவர் தனித்த ஒரு நோய் வகைபாட்டியலை முன்மொழிந்துள்ளார்.  ஹோமியோ அறிவியலுக்கு இவ் வகைபாடு மிகவும் முக்கியமானது.

1.   குறுகிய கால நோய்கள்  அ)தனியரைத் தாக்குவது, ஆ)அங்கொன்று இங்கொன்றாய் தாக்குவது,  இ)கொள்ளை நோய்கள்

2.   நீண்ட கால நோய்கள்--- அ)பொய்யான தோற்றம் கொள்பவை- வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டன் போன்றவற்றால் வரும் நோய்கள், சத்துணவே மருந்து ஆ)செயற்கையாய் தோன்றிய நோய்கள், பழைய மருத்துவத்தில் மருந்து உட்கொண்டதால் வரும் பக்க விளைவுகள் அணைத்தும் இ) இயற்கையாய் காணப்படும் நீண்டகால நோய்கள் முடக்கு வாதம், மைக்ரைன் தலைவலி, ரத்த அழுத்த நோய் போன்றவை

3    விட்டு விட்டு வரும் முறைக் காய்ச்சல்   உம்- மலேரியா

4    ஓர் உறுப்பு நோய்கள்  உம்-கல்கேனியல் ஸ்பர்

5    குறை குறி நோய்கள்

6    மன நோய்கள் மிதமான மற்றும் தீவிரமான மன நோய்கள்

 

1 மன சாட்சியின் உறுத்தல்

மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின்

சில ஆண்டுகள் ஆங்கில மருத்துவ சிகிச்சை.

சிகிச்சையின் பால் அதிருப்தி தோன்றுகிறது

புழக்கத்தில் இருந்த மருந்துகள் பற்றி

தனக்கு அதிகம் தெரியவில்லை எனும் எண்ணம்

தொல்லை தரும் நோய்கள் குறித்துத்

தான் ஏதும் கற்பிக்கப்படவில்லை என வருத்தம் வேறு

அடிப்படையான ஆராய்ச்சிகள் இல்லாமல்

சிகிச்சை இனி இல்லை என உறுதி கொண்டார்.

அப்படி செய்தால் அது கொலைத் தொழிலுக்கு ஒப்பாகும்

எனக் கருதினார்.
2

மொழி பெயர்ப்புகள் 

திருமணம் ஆகிக் குழந்தைகள் இருந்தன.

குடும்பப் பொறுப்பை முன்னிட்டுப் பல

மொழிகளிலிருந்தும் மருத்துவ நூல்களை

மொழி பெயர்த்தார்.

பல மொழி நிபுணத்துவம் இருந்தது

ஆங்கிலம்,ஃப்ரென்ச் லத்தீன் கிரேக்கம் போன்ற

மொழிகளிலிருந்து மருத்துவ வரலாற்றையும்

கருத்தாக்கங்களையும் கசடறக் கற்றறிந்தார். 

3 கொய்னா சோதனை 

1790ல் மக் கெல்லனின் மருத்துவக் களஞ்சியத்தை

மொழி பெயர்க்கையில் ஒரு அடிக்குறிப்பு அவரது

கவனத்தை ஈர்த்தது.

மலேரியாக் காய்ச்சலுக்கு கொய்னாவே சிறந்த மருந்து

தனக்கே மலேரியாக் காய்ச்சல் அடிக்கடி வந்ததால்

தானெ 20 கிரெய்ன் மரப் பட்டையை

அரைத்து உட்கொண்டார். மக் கெல்லன் பரிந்துரைத்தபடி.

அரை மணியில் அவருக்கு மலேரியா சுரத்தையொத்த

குறிகள் தோன்றின. கடுங்குளிர், விட்டு விட்டு சுரம்

சுத்தியால் அடிப்பது போன்ற தலைவலி.

இப்பரிசோதனை சரித்திரப் புகழ் பெறலாயிற்று. 

 4 புதிய கொள்கை 

ஏமாற்றமும் குழப்பமும் உடனடி எதிர்வினைகளாயின.

இங்கிலாந்தில் கொய்னா மலேரியாவைப் போக்கும்.

ஆனால் ஜெர்மனியில் தோற்றுவிக்குமா?

மக் கெல்லனோ மகா மேதை

அவரது கருத்து பொய்யாகாது;

தனக்கு நேர்ந்ததோ கண்கண்ட உண்மை

காமம் செப்பாது கண்டது மொழிந்தால்-

அப்படியானால் கொய்னாவுக்கு மலேரியா நோய்க் குறிகளைத்

தோற்றுவிக்கவும் முடியும்

அக் குறிகளைக் குணப்படுத்தவும் முடியும்

இக் கண்டுபிடிப்பு இதுவரை மனிதகுலம் அறியாதது.

ஒரு சுருங்கிய வடிவில் 2000 ஆண்டுகளுக்கு முன்

ஹிப்பொக்கிரேட்டஸ் பேசியது-பின் வழக்கொழிந்து போனது

மீண்டும் அரியாசனத்தில் ஏற்றினார் இக்கொள்கையை ஹானெமன். 

5 ஸிமிலியா ஸிமிலிபஸ் க்யூரெண்டர் 

கொய்னாவை ஆரோக்கியமானவருக்குக் கொடுத்தால்

குறிகள் தோன்றும்.  அதே மருந்தை அக்குறிகள்

கொண்ட துயரருக்குக் கொடுத்தால் குறிகள் மறையும்

ஒத்ததை ஒத்தது நலமாக்கும்

குறிகளைத் தோற்றுவிக்கும் பண்பு இருந்தால் மட்டுமே

அவற்றைப் போக்கவும் முடியும்.

அப்போதுதான் ஹோமியோபதியில் மருந்தாகவும்

அங்கீகாரம் கிடைக்கும்.

இது ஹோமியோபதியின் அடிப்படை விதி.
 

6 மெய்ப்பித்தல் மனித உடலில் மட்டுமே 

அவரது இல்லத்தின் அருகில் முயல் பண்ணையொன்று.

தினமும் கடந்து செல்கையில் முயல்களுக்கு பெல்லடோன்னா

இலைகளைத் தீனியாய்த் தருவதை அடிக்கடி பார்த்திருந்தார்

முயல்கள் கொழுத்து செழிப்பாய் துள்ளியோடி

விளையாடுவதைப் பார்த்திருந்தார்.

தான் ஒரு நாள் ஒரு இலையைத் தின்றார்

10 நிமிடத்தில் அருக்குக் கிறக்கம் தோன்றியது

விண் விண்ணெண்று தலைவலி

சுரம் போன்ற சூடு, அதீத கோபம், கடும்

நோய்க் குறிகள் தோன்றுவதைக் கண்டார்.
பெல்லடோன்னா இலயைத் தின்னும்

முயல்கள் கொழுக்கின்றன, துள்ளுகின்றன

மனிதனின் அனுபவம் வேறு, தீவிரமான நோய்க்குறிகள் தாக்குதல்

எனவே மருந்துகள் மனிதனில் மட்டுமே மெய்ப்பிக்கபடுவதே சரி

விலங்குகளில் மெய்ப்பிப்பதை அங்கீகரிப்பதில்லை

ஹோமியோபதியில் இதுவும் அடிப்படையான விதி  

7 வீரியப் படுத்தப்பட்ட மருந்துகள் மட்டுமே
 
ஸ்கார்லெட் சுரம் கொள்ளை நோயாய்

ஐரோப்பாவெங்கும்

உடலெங்கும் சிவப்புத் திட்டுக்கள்

வீக்கம் பரவலாய்; உறுப்புக்கள் செயலிழந்த நிலையில்

பெல்லடோனாவில் இக் குறிகள் காணப் படுவதால்

பெர்யவர்களுக்கு தாய் திரவம் 10 சொட்டுக்கள்

குழந்தைகளுக்கு 5 சொட்டுக்கள்

எங்கும் சிகிச்சை வெற்றி, ஹானெமன் புகழ் ஐரோப்பவெங்கும் பரவியது.

எனினும் 20% துயரர்கள் மரிக்கின்றனர்.

ஹானெமன் மீண்டும் பரிசோதனை

பெல்லடோனா தாய் திரவத்தை 30ஆம் வீரியம் வரை

 நீர்க்கச் செய்கிறார்..  அதையே துயரர்களுக்குப் பரிந்துரைக்கையில்

இறப்பு விழுக்காடு மீளவும் குறைவதைக் காண்கின்றனர்.

1816 லிருந்து வீரியப்படுத்தப்பட்ட மருந்தையே

பயன்படுத்துகிறார்

இக்கொள்கையும் அடிப்படை விதியாகிறது  

 8 தூய மருத்துவக் களஞ்சியம் 

தன் வாழ் நாளில் 90 மருந்துகளுக்கும் மேலாக

தன் உடலிலும், மெய்பிப்பவர் குழுவிலும் நிரூபிக்கின்றார்.

தூய மருத்துவக் களஞ்சியம் பதிப்பிக்கிறார்

ஐரோப்பவெங்கும் புழங்கி வந்த மருந்துகள் பாட்டி வைத்தியம்

எனும் நி;லை தாண்டிவிஞ்ஞான ரீதியில் மெய்ப்பிக்கப்படுகின்றன

ஒவ்வொரு மருந்தும் தனித்தனியாய் மெய்ப்பிக்கப்பட்டு

குறிகள் தலையிலிருந்து கால் வரைத் தொகுக்கப் படுகின்றன’
இதுவே ஹானெமனின் தூய மெட்டீரியா மெடிக்கா! 

9 ஒரு சமயம் ஒரே மருந்து 

ஹோமியோபதி மருந்துகள் தனித்தன்மை பெற்றவை

ஆளுமையாகப் புரிதல் கொண்டவை

தனித்தனியாகவே நிரூபிக்கப்பட்டவை

எனவே கலக்கப்படுவதில்லை

அதாவது ஒரு சமயம் ஒரே மருந்து தாம் கொடுக்கப்பட வேண்டும்

ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் கலக்கப் படக் கூடாது.

இக்கொள்கை மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

Thursday 13 February 2014

சூர்ய ஒளியை ஸ்விட்ச் ஆன் செய்ய அறிகிலேன்


ஸூர்ய ஒளியை ஸ்விட்ச் ஆன் செய்ய அறிகிலேன்
வெட்டிபோட்ட  பச்சை மணம் வீசும்

புல் பத்தைகள் கெக்கலித்தன என்னிடம்

என்னத்தைப் பிடுங்கி விட்டாய்? என

பதில் தேடி விழித்திருக்கையில்

சிறகடிக்கும் வெட்டுக்கிளி சேதி சொன்னது

”முழிக்கிறான் முழிக்கிறான் திருடனாட்டம்”

”என் சோற்றுக் கவளத்திற்காக எல்லாம்” என்றேன்

”புல்லைப் புதிதாய் நட்டு சம்பாதி”  அறிவுறுத்தும்

புற்கள், பல்லைக் காட்டி  பெரிதாய் நகைத்து

வெட்டுக் கிளி கைகொட்ட, புல்லை

மீண்டும் அதன் இடம் சேர்க்க பிரயத்தனப்பட்டேன்

ஒரு வழியாய் பின்னப்பட்டே முடிந்தது

”தண்ணீர் ஊற்றனும் தெரியுமா,” குரல் கேட்டது

கொம்பேரி மூக்கன் ஊர்ந்து போனது தன்னிடம் தேடி

தண்ணீரும் ஊற்றினேன், மேகம் கருக்கவும்

சூரிய ஒளி கொண்டு வா என்றது வெட்டுக்கிளி

என்ன செய்ய? காத்திருக்கிறேன் என்றேன்.

இடுகாட்டுப் பிணத்திற்கு காத்திருக்கும் கொம்பேறி

மூக்கனாட்டம்- குரலெழுப்பித் தத்தியது வெட்டுக்கிளி

சூரிய ஒளியை ஸ்விட்ச் ஆன் செய்ய அறிகிலேன்

நான் என்செய்ய? வெட்டுமுன் யோசி! பிடுங்கியது போதும்!

நாலு திசை மந்திரமாய் கேட்டது பதிலுரைகள்.

ஒப்புக் கொள்ளத்தான் வேணும்! புற்கள்,, வெட்டுக்கிளிகள்,

மூக்கன்கள், எல்லாம் புத்திசாலிகள் என்னைவிட!!!

Wednesday 12 February 2014

தமிழ் இலக்கிய போதி மரம் 2



தமிழ் இலக்கிய போதிமரம் எனக்கருளிய உபதேசம்

””படிக்காதவன் முன் படித்தவன் வேஷம்
படித்தவன் முன் கசடறக் கற்றவன் வேஷம்
கசடறக் கற்றவன் முன் ஆன்று அவிந்து அடங்கிய வேஷம்
ஆன்று அவிந்து அடங்கியவன் முன் பொய்மையும் வாய்மையிடத்த வேஷம்””
இவ்வரிகள் எக்காலத்திலும், ஜீவித நியாயம் கொண்டவை!
இவற்றை வேஷங்களின் அணிவகுப்பாய் பார்ப்பதா?
அல்லது, ஒரு ஆளுமையின் வளர்ச்சிக் கட்டங்களாய்ப் பார்ப்பதா?
மனதின், தந்திர முக்காடுகளை இவ்வரிகள் தெளிவாய் விளக்குகின்றன.
கவிஞர் அபி சொல்வதுபோல்
“” ஊர்க்குளம் பாசி விலக்கி என்முகம்
கிடைத்த பெருமை தாங்காமல்
புரண்டெழுந்தேன்”” இம்மனோ நிலை-சுயமோகி நிலை எவர்க்கு சம்பவித்தாலும், மேலே சொன்ன வேஷ-வளர்ச்சிக் கட்டங்களை , தங்கள் மனத்தைப் புரிந்து கொள்ள, நினைவு கூர்தல் நல்லது என்றே தோன்றுகிறது.
 நான் என் நினைவிலிருந்தே இவ்வரிகளைப் பதிவு செய்திருக்கிறேன். ஒருவேளை அவை ஆசிரியரின் சொந்த, தேர்ந்தெடுத்த வார்த்தைகளிலிருந்து விலகியுமிருக்கலாம். அப்படியாயின், ஆசிரியர் பொறுத்துக் கொள்வாராக!
மெத்தச் சரி. இவ்வரிகளை எழுதிய ஆசிரியர் யார்?
உயர்வு நவிற்ச்சியற்று யோசித்தால். என்னைப் போன்ற சிறு நகரவாசிகளுக்கு, மார்க்ஸையும்,காந்தியையும்,பெர்ட்ரண்ட் ரஸ்ஸலையும்,ரோமண்ட் ரோலந்தையும் ஒருசேர படிக்கவைத்த, தங்கத்தையும், கல்யாணியையும், சாரங்கனையும், ஹென்றியையும், எங்களோடு உரையாடவைத்து, குருபீடங்களை அசைத்து,பிரம்மோபதேசம் புதிதாய்ச் சொல்லி, ஓங்கூர் சாமியாரையும்,அம்மாசிக் கிழவனையும், நந்தவனத்திலோர் ஆண்டியையும், காட்டித்தந்து, உள்ளே இருப்பவர்களையும், வெளியே இருப்பவர்களையும்,  சினிமாவுக்குப் போகும் சித்தாள்களின் நீளும் பட்டியலையும், ஆழமாய்ப் புரிந்துகொள்ளத் தூண்டிய, மதிப்பிற்குரிய 
த. ஜெயகாந்தன்.
தமிழ் இலக்கிய போதி மரம் எனக்களித்த அருளுரை:
திரு. ஆத்மாநாமின் கவிதை ----””ஏதாவது செய்””

ஏதாவது செய், ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்
சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி, உதை, விரட்டிச்செல்.
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத்தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மாவிடாது
சரித்திரம், இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யம் இழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச் செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக்கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.
எனது அலுவலக ஆசான்களில் மிக முக்கியமானவர் திரு  நரேந்த்ர நாத் ஜோஷி. ஒல்லியான உடல் வாகு, ஒரே சீராய்.  பஞ்ச கச்சம்-,மேலே வெள்ளை ஜிப்பா.  தடித்த ஃப்ரேம் சோடா புட்டி கண்ணாடி. தூக்கி வாரிய கேசம். எப்போதும் கலகலப்பு, கிண்டல், கேலி.  எந்தக் கூட்டத்திலும் பளிச்சென தனது கருத்தை வெளியிடும் தைரியம்.  யாராவது அது குறித்து அதிருப்தி தெரிவித்தால் அதற்கும் ஒரு எள்ளல் தயாராய் வைத்திருப்பார்
தொழிற்சங்கக் கூட்டங்களில்  நன்றாக வீரா வேசமாக முக்கியப்புள்ளி பேசி முடித்ததும், அடுத்துப் பேசுவதற்கு ஜோஷியைத்தான் அழைப்பார்கள். அப்படியே நிலைமை மாறிவிடும். வீராவேசம் சமனப்படுத்தப்பட்டு எல்லோரும் சாதாரண நிலையை அடைவார்கள். அவர் பேச்சு விகடம் தான்.  ஆனால் நிர்வாகம் வெட்கித் தலை குனிய வேண்டி இருக்கும்.  அடுத்து பேசுபவரும் தப்பித்தார்.  அவர் அவ்வளவு வீராவேசம் பேச்சில் வெளிப் படுத்த வேண்டியிராது. கூட்டம் முடிந்ததும், தோழர்கள் சூழ்ந்து கொள்ள, கேலி இன்னும் அரை மணி நேரம் நீடிக்கும்.
ஜோஷிக்கு ஒரே பிள்ளை. மனைவி இறந்துவிட்டார். மறுமணம் செய்து கொள்ளவில்லை. வயதான தாயார் பிள்ளையை வளர்த்தார். ஜோஷி புலம் பெயர்ந்த குஜராத்தி பிராமணர்.  தஞ்சாவூரில் மானோம்புச்சாவடியிலிருந்து மெடெஆஸுக்கு வேலைக்காக வந்தவர். கல்விமான் பாலகிருஷ்ண ஜோஷியின் ஒன்று விட்ட சகோதரர்.
ஜோஷு பூணூல் அணிய மாட்டார். ஆனால் பத்திரமாக ஒரு ஆணியில் கழற்றி மாட்டியிருப்பார். 90 வயதை தாண்டிய அவரது தாய் தஞ்சையிலிருந்து வரும்போது மட்டும் அதை எடுத்து மாட்டிக்கொள்வார்.  ”தெரிஞ்சுது தொலைச்சுப்பிடுவா தொலச்சி” என்று பயந்த பிள்ளையாய் கண்ணைச் சிமிட்டுவார். தன் மனைவி குறித்துத் தெரிந்தவர்களிடம் பேச நேரிட்டால், அவர் உயிரோடு இருப்பது போலவே பேச்சின் தொனி இருக்கும். .
79-80ல் மெட்ராஸ் ஃப்லிம் ஸொசட்டியில் என்னை அறிமுகப்படுத்தினார். நிமாய் கோஷுடன் பரிச்சயப் படுத்தினார். எங்கு போனாலும் சைக்கிள் தான். தனது கெடிலாக் என்று பெருமையுடன் சொல்லுவார். தத்துவப் பேரறிஞர் ஜே.கே சென்னை வரும்போது, தவறாமல் அவரது மாலை நேரக் கூட்டத்திற்கு ஜோஷியும்,தோழர் ஏ.வீ.வெங்கட்ராமனும் நானும் போவோம். அவர்கள் இருவரும் பேசும்போது தானாகவே நான் அடங்கிய தொனியில் இருப்பேன்.
ஜோஷி கோவில் சார்ந்த மனிதரில்லை. ஆனால் வீட்டில் ராமக்ருஷ்னர் படம் மட்டும் சுவற்றில் தொங்கும். ”குச் கரோ” என்ற வார்த்தையை அவர்தான் எனக்குப் பரிச்சயப் படுத்தினார். ஜோஷி சொல்லுவார்:  வாழ்க்கைக்குப் பெரிதாக ஒன்றும் பொருளில்லை,  நாமாக ஏதும் அர்த்தப்படுத்திகொண்டால் தான் .  ஆக, தொடர்ந்து ஏதாவது செய்..”
1988- ஜுன் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அலுவலக நண்பர்கள் தங்கள் பிள்ளைகளை எஞ்சினியர், மருத்துவர் என்று படிக்க வைக்கும் போது, தன் பையனை ஜோஷி, ப்ராஸ்தெடிக்ஸ் & ஆர்த்தாட்டிக்ஸ் டிப்ளமா படிக்க வைத்தார். ஏன் இந்த படிப்பு என்று யாராவது கேட்டால். ””ஒரே வேலை இல்லாத் திண்டாட்டம், படிச்சுட்டு வேலை கிடைக்கலைன்னா. ரோட்டோரம் பொட்டியை வைச்சுக்கிட்டு. மாட்டுக்கு, மனுசனுக்கு லாடம் கட்னாப்போச்சு”” என்று அதற்கும் கிண்டலாய் பதில் வரும்.
சினிமா, நாடகம் எல்லா சிந்தனைப் பள்ளிகளும் அத்துப்படி அவருக்கு. ரித்விக் கடக். ரே. சென், அரவிந்தன்,  குரோசோவா. பொலான்ஸ்கி எல்லாரும் தாராளமாய்ப் பேச்சில் புரளுவார்கள். எல்லாரும் அவரோட பங்காளிகள் என்று சொல்லுவார். கே. பாலச்சந்தர் அவரோட எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்தவர். நாடகத்தின் புதுமைகளை அலுவலகத்தில், அறிமுகப்படுத்தியவர்.  ஜோஷி எங்களோடு கூத்துப்பட்டறை, பரீக்‌ஷா நாடகங்கள் பார்க்க வருவார்.  வெகுவாகப் பாராட்டிப் பேசுவார். வெளியிலிருந்து பெற்ற தாக்கத்தினால், எங்கள் அலுவலக நாடகப் போட்டிகளில் நாங்கள் கட்டாயம் பங்கேற்போம். அபத்த நாடக வகை எங்கள் தேவைகளுக்கு ஏதுவாய் இருந்தது. பஷீரின் சிறுகதையை நீள மூக்காயணம் என்று ஓரங்க நாடகமாக்கினோம். அரசியல் அங்கதம் ; ஜோஷி நடிக்கவும் செய்தார்.  இன்னும், ”ஹிரண்யாய நமஹ அலயஸ் மக்கள்= பாவ்லோவின் நாய்கள்” ”சக்திவதை என்றுமாய்,” ”மனிதச்சங்கிலி” எல்லாவற்றுக்கும் ஜோஷியின் ஆதரவு உண்டு, பங்கேற்பும் உண்டு. ஒத்திகை நடக்கும்போது கூடவே இருந்து தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.  மற்றவர்களிடம் பேசும்போது அவருடைய நாடகங்களாகவே அவை மாறிவிடும்.
அண்டன் செகாவின் பச்சோந்திகள் நாடகத்தைத் தமிழில் 88ல் எங்கள் அலுவலகத் திறந்தவெளியில் நடத்தினோம். பல்லவபுரத்தின் பாடல்கள் இரண்டை நாடகத்தில் சேர்த்திருந்தோம். ’”நெட்டமரம், தொப்பை சரிஞ்ச மரம்”’ ””கொக்கு கொம்பு குடல் பாஞ்சு குள்ள நரி செத்துப்போச்சு””-இரண்டும்.  தோழர் சண்முகம் டேப் அடித்துக்கொண்டு பாடுவார்.  ஜோஷி எழுந்து நின்று ஆர்ப்பரித்து ஊக்கப் படுத்தியது எங்களுக்குப் பெரும் பலம்.
தனக்கு. தன் மருமகளுக்கு, பேரன் பரிட்சை பயத்துக்கு, பேத்திக்கு என்று ஹோமியோபதி சிகிச்சைக்காக அடிக்கடி கூப்பிடுவார். வெள்ளை உருண்டைகளில் நம்பிக்கை உள்ள மனிதர் ஜோஷி.
ஜோஷி 70களின் பிரதிநிதி. அவரைப் பார்க்கும் போதெல்லாம், தாமோதர ஆசான் பாத்திரம் எனக்கு ஞாபகம் வரும்.அவர் உரையாடல்கள் அப்படியே இருக்கும். எங்கள் அலுவலக வெளியின் அற்புத மனிதர்களில், எங்களை இளைஞர்களாக அடையாளம் கண்டு, தொடர்ந்து ஆற்றுப்படுத்தியவர் நண்பர் ஜோஷி.       
மகன், பேரன் இருவரும் அதே படிப்பு, அதே வேலை.  அசோக் நகரில் க்ளினிக் வீட்டிலேயே. மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப கேலிப்பர்ஸ் செய்து கொடுப்பார்கள் ஜோஷி சொல்லுவார் ”” யாராவது ஏழை மாற்றூத்திறனாளீயாய் இருந்தால் என்னிடம் அனுப்பு. இலவசமாய் செலவு இல்லாமல் சுரேஷ் ஜோஷி செய்து கொடுப்பான்”” அவரது குணம் அடுத்த தலைமுறைகளில் அப்படியே படிந்திருக்கிறது. ஜோஷி பெரும் மனிதாபிமானி. அவரது ரசனைகள்-அவர் ஆகிவந்த முறைமைகள், இந்த 85 வயதிலும் அவரை இளைஞராகவே வைத்திருக்கிறது.      

மன்னார்குடியில் இருவரோடு

மன்னார்குடியில் இருவரோடு இலக்கிய உரையாடல்கள், சலிப்பின்றி நிகழ்த்த முடியும். முதலாமவர் – திரு. கரிச்சான் குஞ்சு. நேஷனல் உயர்   நிலைப்பள்ளியின் தமிழாசிரியர்- நாராயனசாமி ஐயர்.  என் அப்பாவின் தோழர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர். மானிடத்தின் பசிகளைத் தரிசித்தவர். எனது சகோதரியின் திருமணம் அவரது தலைமையில் நடந்தது. எங்கும், எப்போதும் இலக்கியப் பேச்சென்பது அவருக்கு வெல்லக்கட்டி.
இரண்டாமவர்- திரு எஸ்.மோஹன் அனந்த ராம்.  வாடகை அறை, சுற்றிலும் இலக்கிய இதழ்கள்.  அவரது சிறுகதைகள் தினமணிக்கதிரில் அதிகம் வெளிவந்தன.  பாரதியின் சக்தி வழிபாட்டில் ஆரம்பித்து, கார்ல் மார்க்ஸ், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்,அரிஸ்டாடில், விவேகானந்தர், கலை இலக்கியம்,  நாடகம் என எது குறித்தும் உரையாடலாம். ஒல்லியாய், உயரமாய்த் தோன்றினாலும், இலக்கியப் பேச்சில் அவர் கண்களில் ஒளி வந்து விடும்.  மணிக் கணக்கில் பேசுவோம். சில சமயங்களில், மன்னார்குடியின் பொது வெளிகளான, தேரடி, பந்தலடி, கோட்டூர் ரெங்கசாமி முதலியார் நூலகம், என பேசுமிடங்கள் அமையும்-  நின்று கொண்டே. என் கல்லூரி படிப்பின் பின் நானும், எஸ்.எம்.ஏ. ராமும், கரிச்சான் குஞ்சுவின் மகள் விஜயாவும் ஒரு டுடோரியல் கல்லூரியில் சிலகாலம் வேலை செய்தோம்.
78க்குப்பின், சென்னையில் தொடர்பு கொண்டபோது, அவரது வெளிவட்டங்கள் நாவலைப் பதிப்பித்திருந்தார். இலக்கிய சிந்தனை அவரது சிறுகதையைத் தெரிவு செய்து பாராட்டியது.   ஒருமுறை, எல்.எல்.ஏ ஹாலில், ராமின் ‘குப்பை’ நாடகம் நிகழ்த்தப்பட்டது.
சில ஆண்டுகள் கழித்து, ராம் , குரோம்பேட்டையில், என்.எஸ்.என் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர். அன்று ஆண்டு விழா.  மாலையில், திறந்த வெளியில், ‘மூடிய அறை’ நாடகம்.  பதின்மர் வயது மாணவர்களால் நடிக்கப்பட்டது. ஒரு மிருதங்கமும் கையுமாக ராம் நாடகத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அன்று நானும், வெளி ரங்கராஜனும், வீராச்சாமியும் பார்வையாளர்களில் இருந்தோம்.  அபத்த நாடக வடிவம்.  பள்ளி மாணவர்கள் கனமான விஷயங்களை உள்வாங்கி நன்றாகவே நடித்திருந்தனர். தலைமுறை தலைமுறையாய், காலங்காலமாய், மேலே மூடிய அறையில், அவரவர்க்குத் தேவையான பொருள் பொதிந்து வைத்திருப்பதாய் நம்பிக்கை.  மூத்த மகன் மூர்த்தி, அங்கே ஒன்றுமில்லை என்கிறான். குடும்பத்தில் மற்றவர்கள் ஏற்க மறுக்கின்றனர். யார் தடுத்தும் கேளாமல், மேலேறிச்சென்று, பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்து வந்து, “ ஒன்றுமில்லை, அழுக்கும், நூலாம்படையும் தான் இருக்கிறது” என அறிவிக்கிறான்.  தங்கள் கனவுகளையும், நம்பிக்கைகளையும் தகர்த்ததற்காக அவன் தாக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான். அந்த நாடகத்தைப் பார்த்ததிலிருந்து, சென்னையின் மற்றைய நாடகக் குழுக்கள் மூடிய அறையை நிகழ்த்த வேண்டும் எனும் அவா என்னுள் மிகுந்திருந்தது.
பரீக்‌ஷா ஞாநியிடம் விவாதித்தேன்  அவரால் ம்யூசியம் அரங்கத்தில் நாடக வாசிப்புத்தான் செய்ய முடிந்தது.  ஆனால், யவனிகா நாடகக் குழுவினர் மூடிய அறையை அரங்கேற்றினர்.  பெருந்தேவி, சங்கர நாராயனன், வைத்தியனாதன் ஆகியோர் நடித்திருந்தனர். நாடகத்தின் மையக்கரு மிக நன்றாக பார்வையாளர்களை சென்றடைந்தது.
சில ஆண்டுகளுக்குப்பின், மீண்டும், கிருஷ்ண ஞான சபாவில் ராமின் ‘எப்போ வருவாரோ’ நாடகம் டெல்லி, யதார்த்தா பென்னேஸ்வரன் இயக்கத்தில் நிகழ்த்தப்பட்டது. சாமுவேல் பெக்கெட், யூஜின் அயனெஸ்கு இருவரது தாக்கத்தையும் இவ்விரு நாடகங்களிலும் காணலாம்.
அடுத்ததாக ஒரு தனது வளர்ச்சியில் ஒரு பாய்ச்சலை நிகத்தினார். ராம். 1998ல் ஆபுத்திரன் கதை நாடகத்தை வெளியிட்டார். பின்னால், திருப்பத்தூரில், தூய நெஞ்சக் கல்லூரியில், திறந்த வெளியில், ஒரு மாலை நேரத்தில், ஆபுத்திரன் கதை நாடகம்,  பார்த்திப ராஜாவின் இயக்கத்தில் , பெருங்காவிய நாடக வடிவில் நிகழ்த்தப்பட்டது. ஒரு  Repertoire என்று சொல்லுமளவுக்கு, எண்ணற்ற கலைஞர்கள், இசையோடு பாடி நடித்திருந்தனர்.  மிகப் பெரும் நாடக அனுபவம்,,  பார்வையாளர்களில், சென்னையிலிருந்து, ஆசிரியரும் நானும் இருந்தோம். இந்நாடகத்தின்  நிகழ்வடிவம், ஆபுத்திரன் கதையையும்,  மிகச்சிறந்த இயக்குநராக பார்த்திப ராஜாவையும் அடையாளப்படுத்தியது.
30 வருடங்களாக எஸ்.எம்.ஏ ராமுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். செருக்கில்லாத இலக்கியவாதி.  மன முற்சாய்வுகளும் கிடையாது. பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இந்திய இதிகாச வெளிகள், தத்துவ பின்புலங்கள், ஸமஸ்க்ருத இலக்கியங்கள், இயற்பியலின் நவீனப் போக்குகள் எதுவாயினும் அவரது மனம் தீவிரம் கொள்ளும். தளம் முதல் இதழில் அவர் எழுதிய ’கடவுள் துகள்கள்’ கட்டுரை, இந்திய தத்துவ வரலாற்றையும், மேலை நாட்டு இயற்பியல் வரலாற்றையும் இணைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த ஒன்று.
தமிழ் கலை இலக்கிய வாசகர்கள், மெனக்கெட்டு, கவனம் கொள்ள வேண்டிய படைப்பாளி, எஸ்.எம்.ஏ. ராம்.  

பால் சக்காரியாவின் கதை bar

பால் சக்கரியாவின் சிறு கதை Bar. Guilt தான் அதன் முக்கியக் கரு. ஆனால் மிகவும் வித்தியாசமான தளத்தில் எழுதப்பட்ட நல்ல கதை. இரண்டு   நண்பர்கள் ஜோஸ், தாமோதரன் இருவரும் பாரில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். தங்களுக்குத் தோன்றிய மரண பயம் குறிக்கும் கனவுகளைப் பரிமாரிக் கொள்கின்றனர்.  பக்கத்து இருக்கையில் இருப்பவர் அறிமுகம் செய்து கொண்டு, அனுமதியுடன் தனது, சொந்தத், துயரமான வாழ்வை, குற்றவுணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்.
ஆப்பிரிக்க நாட்டில் ஆசிரியர் வேலைக்குப் போன இந்தியர் சூழ் நிலை வசத்தால் மனிதக் கொலை புரிகிறார். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, நண்பர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு, தூக்குத் தண்டணையும் விதிக்கப்படுகிறது. தண்டணை நிறைவேற்றப் படும் நாளன்று, எதிர்பாராத விதமாக, தூக்குக் கயிறு அறுந்து விழ, இன்னொரு முறை தூக்கிலிட சட்டம் அனுமதிக்காததால், உயிர் தப்புகிறார். பழைய நண்பர்கள், அவரைப் பார்க்கக் கூட விரும்பாதவர்கள் விமானப் பயண டிக்கெட் வாங்கிக் கொடுத்து, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். மனைவி அவரைப் புறக்கணிக்கிறார். மகன் மட்டிலும் அன்பைப் பொழிகிறான் இருந்தாலும், மனைவி மகனோடு ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்.
அவர் அனாதை உணர்வுடன் அலைந்து கொண்டிருக்கிறார். இது தான் கதை.
அவர் மனிதக் கொலை (culpable homicide amounting to murder) புரியும் சூழல் என்ன?
இதுவரை, சிறுகதையில், யாரும் இந்த சிக்கலைக் கையாண்டதில்லை என நினைக்கிறேன்.
நான் சட்டக் கல்லுரியில் மாலை நேர வகுப்பில் குற்றவியலும், இந்திய தண்டனைச் சட்டமும் படித்தபோது எனது பேராசிரியர் ஜெயமணி விஸ்தாரமாக விவாதித்த ஒரு வழக்கு-சரிதை (case-law) நினைவுக்கு வருகிறது.  “R vs Dudly & Stephans” ,  எனும் மனித மனத்தின் சிடுக்குகளை நன்கு விளக்கும் கேஸ்.  1884ஆம் ஆண்டு . சுருக்கமாகச் சொன்னால், ஒரு சிறிய கப்பலில் டாம் டூட்லி, ஸ்டீபன்ஸ், ப்ரூக்ஸ் மற்றும் 16 வயது இளைஞன் ரிச்சர்ட் பார்க்கர்,  நால்வரும் நீண்ட கடற் பயணம் செல்கின்றனர். கப்பல் விபத்துக்குள்ளாகிறது. ஒரு சிறிய லைஃப் போட்டில் ஏறி நால்வரும் தப்பிக்கின்றனர். கையில் உணவிருப்பு இரண்டே இரண்டு டின்கள் டர்னிப், கொஞ்சம் நல்ல நீர் குடிக்க. இரண்டு நாட்களில் ஒரு டின் டர்னிப் தீர்ந்து போக ஒரு கடல் ஆமை மாட்டுகிறது. அதைக் கொன்று நீருக்குப் பதிலாக அதன் ரத்தத்தைக் குடிக்கின்றனர். அதான் மாமிசம் ஒரு சில நாட்களுக்கு வருகிறது.  அவர்கள் எல்லொரும் நீண்ட கடற் பயண அனுபவங்கள் உள்ளவர்கள். கடல் நீர் அருந்த லாயக்கற்றது. அப்பாயகரமானது.  இருந்தாலும், ஆபத்துக்கு வேறு வழியின்றி, குடித்ததில் பார்க்கர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அபாயத்திலிருக்கிறான். ப்ரூக்ஸும் தொந்தரவுக்குள்ளாகிறான். கைவசம் உணவே இல்லை. டூட்லியும், ஸ்டீபன்ஸும் நிலைமையை விவாதிக்கின்றனர். பார்க்கர் எப்படியும் இறந்து விடுவான்.  அவன் இறப்பதற்குள் அவனை நான் கொன்றுவிடுகிறேன். அவனது மாமிசத்தை மூவரும் பகிர்ந்து கொள்ளலாம்.  ரத்தத்தையும் குடிக்கப் பயன் படுத்திக்கொள்வோம்.  வெற்று அறவுரைகளுக்கு இடமில்லை.  மூவர் வாழ வேண்டும்.  கடல் பயண விதிகளுக்கு இது ஒன்றும் முரணானது இல்லை.  நேர்மையோடும், உறுதியோடும் டூட்லி வாதிக்கிறான். ஸ்டீபன்ஸும் ஒப்புக்கொள்ள  ப்ரூக்ஸையும் இணைத்துக் கொள்கின்றனர்.  தன், கை பேனாக் கத்தியால் பார்க்கரின் கழுத்து ஜூகுலார் சிரையை துண்டிக்கின்றான் டூட்லி.  நிறைவேற்று முன் கடவுளிடம் பார்க்கருக்காகவும் தங்களுக்ககாவும் ப்ரார்த்திக்கின்றனர்.
ரத்தம்மும், நர மாமிசமும், அடுத்த கப்பல் வந்து அவர்கள் மூவரையும் காப்பாற்றும் வரை உதவி செய்கிறது.  தரைக்கு வந்ததும், போலிஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. வழக்கு ஆரம்பிக்கிறது. அவர்கள் மூவரும் நடந்ததை ஒப்புக் கொள்கின்றனர்.  ப்ரூக்ஸ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, சாட்சியாக மாறுகிறான். வழக்கறிஞர் காலின்ஸ் (the great necessity) “”பெரும் தேவைக் கொள்கையை”” முன்வைத்து வாதிடுகிறார். நீதிபதி அக்கொள்கையை மனிதக் கொலையில் தற்காப்பு வாதமாக பொதுப்புத்தி சட்டத்தில்(common law) வில் ஏற்க இயலாது எனப் புறக்கணிக்கிரார்.  இருவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப் படுகிறது.
இந்த உண்மைச் சம்பவமும், வழக்கும் நடைபறுவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே, 1838ல்அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன் போ The Narrative of Arthur Gordon Pym of Nantucket  எனும் நாவலை எழுதுகிறார். கடற்பயணம், கலகம், மனிதக் கொலை, நரமாமிசம் உண்ணுதல் ரத்தம் குடித்தும், தங்களின் சிறு நீரைக்குடித்தும் உயிர் தரித்தல், மற்றவர்கள் உயிர் வாழ, யார் முதலில் மரணிப்பது என்பதைத் தீர்மானிக்கக் குலுக்குச் சீட்டுப் போட்டுத் தெரிவு செய்வது   எல்லாம் அதில் வருகிறது. பெயர்கள் மட்டிலும் வேறு. அவ்வளவே. இந்நாவலில் கொல்லப்படும் மாலுமி தான் குலுக்குச் சீட்டு முறையை பரிந்துரைக்கிறான், ஆனால், சீட்டு அவன் பெயருக்கே வருகிறது. அவன் கத்தியால் குத்திக் கொல்லப் படுகிறான்.  அவன் மாமிசம் புசிக்கப் படுகிறது. அவனது பெயர் நாவலில் ரிச்சர்ட் பார்க்கர். 48 வருடங்கள் கழித்து  நடந்தேறிய  R vs Dudly & stehans உண்மை வழக்கில் கொல்லப்படுபவனும் ரிச்சர்ட் பார்க்கர். பதினேழாம் நுற்றாண்டில் நடந்த செயிண்ட் க்ரிஸ்டோஃபர் கடற்பயணத் துயர சம்பவங்கள் படைப்பாளிகளின் கூட்டு நனவிலி மனதில் இருந்திருக்க வேண்டும். ஆலன் போ மிகச் சிறப்பான இலக்கிய முன்னோடியாய் இச் சம்பவங்களைப் பதிந்திருக்கிறார்.
இப்போது மீண்டும் பால் சக்கரியாவுக்கு வருவோம்.  கதை சொல்லி ஏன் மனிதக் கொலை புரிகிறான்.?
அந்த ஆப்பிரிக்காவில் வேலை செய்யும் இந்திய ஆசிரியர் மாணவர்களைக் கூட்டிக் கொண்டு ஒரு பாலைவனத்திற்குக் கல்விச் சுற்றுலா செல்கிறார். வழி தப்பிவிடுகிறது. வாகன ஓட்டியும், அவரின் உதவியாளரும் தொலைந்து போகின்றனர். பின்னால் அவர்களது பிணங்கள் மட்டுமே கிடைக்கின்றன.  வயதில் மூத்த சில மாணவர்கள் வழி தேடிப் போய் அவர்களும் இறந்து போகின்றனர். எஞ்சியவர்கள் ஆசிரியரும் இன்னும் எட்டு மாணவர்களும் மட்டும்; உணவோ நீரோ இல்லை; எல்லோரும் இறக்கும் அபாயத்தில் இருக்கின்றனர். வேறு வழியில்லை. மரணத்தின் நுழைவாயிலில் முதலில் இருப்பவனை, பிரார்த்தனை செய்தபடியே ஆசிரியர் கொல்கிறார்.  அவனது ரத்தம் மற்றவர்களுக்குக் குடிக்கப் பயன்படுகிறது. நரமாமிசம் உண்கின்றனர். அவர்களுக்கு உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் துளிர்க்கிறது, சிறு நீர் சுரக்கிறது அதை அருந்தி உயிர் வாழ்கின்றனர்.  கொஞ்ச நாளில் ஒரு வாகனம் அவர்களக் கண்டெடுத்து சொந்த ஊர் திரும்புகின்றனர். ஊர் அந்நியப்பட்டு நிற்கிறது . ஆசிரியர் கொலைக் குற்றம் சாட்டப் படுகிறார்.  அவருக்கு வழக்கில் உதவி செய்ய யாரும் இல்லை.  முகங்கொடுத்துப் பேசுவோரும் யாருமில்லை. மரண த/ண்டனை விதிக்கப்படுகிறது.
இச்சிறுகதையில் கடற்பயணத்திற்கு, பாலைவனம் ஒரு பதிலி.  விபத்து, வழிதவறல், உணவுப் பற்றாக்குறை , பிரார்த்தனை செய்தபடியே கொல்லுதல் நரமாமிசம் உண்ணல், ரத்தம் குடித்தல் எல்லாம் நெய்யப்பட்டிருக்கிறது.  ஜோஸும் தாமோதரனும், மாணவனைக் கொல்லுமுன் அவர் கடவுளிடம் சொன்ன பிரார்த்தனையால்  சிந்தனை வயப்படுகின்றனர்.  இதெல்லாம் கடவுளுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? என்ற அறம் சார்ந்த கேள்வியோடு கதை முடிகிறது.
வாசிக்கவும் யோசிக்கவும் நிறைய அறிவுத்தீனி தரும் பால் சக்கரியாவுக்கு நன்றி. தமிழில் மொழிபெயர்த்த சுரா வுக்குப் பாராட்டுக்கள்.
கண் கெட சதா
பள்ளம் மேடெங்கும்
குருட்டு வழியில்
பிறிதொரு நிழலிருட்டின்
கைத்தடி பற்றி
பயணித்த நாட்கள்...
உணர்வின் சுழிப்பில்
முகமிழந்து போயின

இன்னும் மூச்சுக்காற்றில்
வெட்கமறியா ஆசைகள்
கனத்த குமிழிகளாய்
மேலே மேலே
பறந்து மரணிக்கும்....

நீ அறியா நான்
இன்னும் குருட்டு
வழித்தடத்தில்………….
See More
Photo: கண்
 கெட சதா பள்ளம் மேடெங்கும் குருட்டு வழியில் பிறிதொரு நிழலிருட்டின் கைத்தடி பற்றி பயணித்த நாட்கள் உணர்வின் சுழிப்பில் முகமிழந்து போயின இன்னும் மூச்சுக்காற்றில் வெட்கமறியா ஆசைகள் கனத்த குமிழிகளாய் மேலே மேலே பறந்து மரணிக்கும் நீ அறியா நான் இன்னும் குருட்டு வழித்தடத்தில்………….

சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் சிறுகதை

மலையாள எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் சிறுகதைத் தொகுப்பு “ஒற்றைக் கதவு“ தமிழில் படிக்க சாத்தியப்பட்டிருக்கிறது.. மொழிபெயர்த்த கே.வி. ஜெயஸ்ரீக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கலாம்.
“மூன்றாவது கை“ சிறுகதை வாசித்தேன். முகம் தெரியாத ஒருவனின் தற்கொலையால் நிகழ்ந்த மரணத்தில் ஆரம்பிக்கிறது கதை.
• வாழ்க்கைக்கு எதிராக முகம் திருப்புவதுதானே மரணம் ?
• இந்த வாழ்க்கைதான் என்ன ? செத்தவனின் முன்னால் உயிரோடு இருப்பவனின் ரோந்துதானே ?
• போலீஸ்காரனின் அடி ஏறக்குறைய பாரபட்சமானதுதானே.
• பின் நவீனத்துவத்தில் தத்துவத்திற்கு இடமில்லை.
• காலத்தின் மீது உனக்கொரு தத்துவார்த்த உள்ளுணர்வு படியமாட்டேங்குது. அதன் முகவரிபோல் வாழ்க்கை அவ்வளவு •••••
.இன்னிக்கு ஒவ்வொன்றுக்கும்ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்ட்
என்று யாருமில்லடா. படித்தது எல்லாத்தையும்
மொத்தமாப்போட்டு ஒரு அவியல் அவ்வளவுதான்.

கிளாமரு கிளாமருதான் மவனே !

மேலே சொன்ன சிந்திக்கத் தூண்டும் வார்த்தைகள் / வாக்கியங்கள் நிறைய
இக்கதையில் வரும் ஹக்கீம் – இப்பாத்திரத்தை
வாழ்க்கையின் இயங்கு தளத்தைத் தான் உணர்த்திருக்கும் விதத்தில்
வெளிப்படுத்துகிறான். ”பிளேடு –ஹக்கிமாய்” இருந்து,சம்பாதித்த பணத்தை மூலதனமாய் இட்டு அடுத்த கட்ட சம்பாத்திய பாய்ச்சலை வட்டித்தொழிலில் நடத்துகிறான். “மதீனா ஃபைனான்ஸ்“. திறப்புவிழா.வில் தன் நண்பனுடன் உரையாடுகிறான்.

“” என்ன ஆனாலும் செத்துப்போனவன்
ஐஸ்வர்யமானவன் .திறப்புவிழா முடிஞ்ச
அடுத்த நிமிஷமே நுறு பார்ட்டி வந்தது.
ஒரு லட்சம் ரூபா டெய்லி கலெக்க்ஷனுக்கே
கொடுத்தாச்சு. ஐம்பதாயிரம் மாசக்கலெக்க்ஷன் பத்து சதவீத வட்டி,
அதாவது நுறு நூறு ரூபாக்குப் பத்து ரூபா பாங்க் கணக்குப்படி பார்த்தா..

நகைக்கடன் குடுக்கறேன் கூடவே அஞ்சு லட்ச ரூபாய் சீட்டும்
பிடிக்கலான்னு ஒரு ப்ளான் இருக்கு. டெய்லி டெய்லி கலெக்க்ஷனுக்கே
ஆட்களைப் போடறதால சீட்டுபிடிக்கிறதும் அதுக்கு நடுவுல எந்தப் பிரச்சனையுமில்லாம நடந்துடும். கூடுதல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
அதுமட்டுமில்லாம எஸ்.எஸ்.எல்.சியிலிருந்து பிஜி வரைக்குமான சர்ட்டிபிகேட்டுகளை அடகு வச்சாலும் பணம் குடுக்கிறோம்.
சின்னத் தொகைதானே !””

பார்வைக்கு 5% மட்டுமில்ல. டெய்லி கலெக்க்ஷன் லாபம் குறைவு போலத்தான் தெரியும்.. ஆனால் இதுல தான் நிறைய லாபம் கெடக்கும்.
ஒரு லட்சத்தை நாம ஒருத்தனுக்குக் கொடுக்குறோம்னு வச்சுக்க….
85000 மட்டும்தான் நாம அனுக்குக் கொடுக்கனும்.. குடுத்த பணத்தை 100 நாட்களில் ரூ. 1000 வீதம் வசூல் பண்ணுவோம் பத்துநாள்
கழிச்சு அது வரைக்கும் வசூலான
பணத்தை நாம் வேறொரு ஆளுக்குக் கொடுப்போம்.
அப்படிப் பத்துமுறை கொடுப்போம். பணம் மறுபடியும் ரொடேட் ஆகும். அது அப்படியேஆயிரம் கிளைகளாக வளர்ந்து கிளைத்துப் பெருகும்.

“ வேர்வை சிந்தாம நாலு காசு பார்க்கனும்னா, இதுதான் நல்ல வழி,
இதுக்கு PHD வேண்டாம். கொஞ்சம் தில்லிருந்தா போதும். ஒரு ரூபாயைத்
தூக்கிப்போட்டு இதுபோல ஒண்ணத் தொடங்கு-- ஒரே வருஷத்துல மூணு
மடங்காக்கிடலாம். மூணுலட்சம் கதையெல்லாம் .அப்புறம் எழுதிக்கலாம்
நாலு காசு சம்பாதிக்க இப்பதான் முடியும். தலை நரைச்சி, அகாடமி `அவார்டும் வாங்கி யோசிக்கிறதுக்குள்ள வாழ்க்கை கை நழுவிப் போயிட்டிருக்கும், நல்லா வாழ்றத்துக்கு ஆண்டவன் ஒரு வாய்ப்பைத்தான்
தருவான்ல அதையே பற்றி எறிடனும்..


பற்றுக் கம்பிகள் கொண்டு, பற்றி ஏறி படர்ந்து, தழைக்கும்
(முகமுசுக்கைதான்) பிரையோனியாதான் ஹக்கீம்.

வாழ்க்கைக்கு எதிராக முகம் திருப்பாமல் இருக்கக் கற்றுக்கொண்டவன் ஹக்கீம். அவன் குறித்த பதிவுதானோ இக்கதை என எண்ணத்தோன்றுகிறது.

ப்ரையோனியா எப்போதும், கொள்கை கோட்பாடுகள் தவிர்க்கும் ஆளுமை, எப்படியும் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவதுதான் அவன் லட்சியம். அவன் திட்டங்கள், எப்போதும் வட்டிககணக்குப் போடுவதுதான். அவன் ஒரு ””பொருளாதார மனிதன்.””. கலைஞனாகவோ, விஞ்ஞானியாகவோ இலக்கு நோக்கிப் பயணிக்கும் ஆதர்ச வாழ்க்கை அவனுக்கு வேண்டியதில்லை. எப்போதும் பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கான திட்டங்களை அலசி ஆராய வேண்டும்.


ஹக்கீம் ஒரு”” ப்ரையோனியா””

வில்லியம் கட்மன் அமெரிக்க ஹோமியோபதி நிபுணரின் விவரணைப்படி ப்ரையோனியா ஒரு சமகால வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஒரு பொருளாதார மனிதன் (An Economic Man)
மனிதன்
மலையாள எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் சிறுகதைத் தொகுப்பு “ஒற்றைக் கதவு“ தமிழில் படிக்க சாத்தியப்பட்டிருக்கிறது.. மொழிபெயர்த்த கே.வி. ஜெயஸ்ரீக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கலாம். “மூன்றாவது கை“ சிறுகதை வாசித்தேன். முகம் தெரியாத
 ஒருவனின் தற்கொலையால் நிகழ்ந்த மரணத்தில் ஆரம்பிக்கிறது கதை. • வாழ்க்கைக்கு எதிராக முகம் திருப்புவதுதானே மரணம் ? • இந்த வாழ்க்கைதான் என்ன ? செத்தவனின் முன்னால் உயிரோடு இருப்பவனின் ரோந்துதானே ? • போலீஸ்காரனின் அடி ஏறக்குறைய பாரபட்சமானதுதானே. •
 பின் நவீனத்துவத்தில் தத்துவத்திற்கு இடமில்லை. • காலத்தின் மீது உனக்கொரு தத்துவார்த்த உள்ளுணர்வு படியமாட்டேங்குது. அதன் முகவரிபோல் வாழ்க்கை அவ்வளவு ••••• .இன்னிக்கு ஒவ்வொன்றுக்கும்ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்ட் என்று யாருமில்லடா. படித்தது
 எல்லாத்தையும் மொத்தமாப்போட்டு ஒரு அவியல் அவ்வளவுதான். கிளாமரு கிளாமருதான் மவனே ! மேலே சொன்ன சிந்திக்கத் தூண்டும் வார்த்தைகள் / வாக்கியங்கள் நிறைய இக்கதையில் வரும் ஹக்கீம் – இப்பாத்திரத்தை வாழ்க்கையின் இயங்கு தளத்தைத் தான் உணர்த்திருக்கும் விதத்தில் வெளிப்படுத்துகிறான்.
 ”பிளேடு –ஹக்கிமாய்” இருந்து,சம்பாதித்த பணத்தை மூலதனமாய் இட்டு அடுத்த கட்ட சம்பாத்திய பாய்ச்சலை வட்டித்தொழிலில் நடத்துகிறான். “மதீனா ஃபைனான்ஸ்“. திறப்புவிழா.வில் தன் நண்பனுடன் உரையாடுகிறான். “” என்ன ஆனாலும் செத்துப்போனவன்
 ஐஸ்வர்யமானவன் .திறப்புவிழா முடிஞ்ச அடுத்த நிமிஷமே நுறு பார்ட்டி வந்தது. ஒரு லட்சம் ரூபா டெய்லி கலெக்க்ஷனுக்கே கொடுத்தாச்சு. ஐம்பதாயிரம் மாசக்கலெக்க்ஷன் பத்து சதவீத வட்டி, அதாவது நுறு நூறு ரூபாக்குப் பத்து ரூபா பாங்க் கணக்குப்படி பார்த்தா.. நகைக்கடன் குடுக்கறேன்
 கூடவே அஞ்சு லட்ச ரூபாய் சீட்டும் பிடிக்கலான்னு ஒரு ப்ளான் இருக்கு. டெய்லி டெய்லி கலெக்க்ஷனுக்கே ஆட்களைப் போடறதால சீட்டுபிடிக்கிறதும் அதுக்கு நடுவுல எந்தப் பிரச்சனையுமில்லாம நடந்துடும். கூடுதல் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதுமட்டுமில்லாம எஸ்.எஸ்.எல்.சியிலிருந்து
 பிஜி வரைக்குமான சர்ட்டிபிகேட்டுகளை அடகு வச்சாலும் பணம் குடுக்கிறோம். சின்னத் தொகைதானே !”” பார்வைக்கு 5% மட்டுமில்ல. டெய்லி கலெக்க்ஷன் லாபம் குறைவு போலத்தான் தெரியும்.. ஆனால் இதுல தான் நிறைய லாபம் கெடக்கும். ஒரு லட்சத்தை நாம ஒருத்தனுக்குக் கொடுக்குறோம்னு
 வச்சுக்க…. 85000 மட்டும்தான் நாம அனுக்குக் கொடுக்கனும்.. குடுத்த பணத்தை 100 நாட்களில் ரூ. 1000 வீதம் வசூல் பண்ணுவோம் பத்துநாள் கழிச்சு அது வரைக்கும் வசூலான பணத்தை நாம் வேறொரு ஆளுக்குக் கொடுப்போம். அப்படிப் பத்துமுறை கொடுப்போம். பணம் மறுபடியும் ரொடேட்
 ஆகும். அது அப்படியேஆயிரம் கிளைகளாக வளர்ந்து கிளைத்துப் பெருகும். “ வேர்வை சிந்தாம நாலு காசு பார்க்கனும்னா, இதுதான் நல்ல வழி, இதுக்கு PHD வேண்டாம். கொஞ்சம் தில்லிருந்தா போதும். ஒரு ரூபாயைத் தூக்கிப்போட்டு இதுபோல ஒண்ணத் தொடங்கு-- ஒரே வருஷத்துல மூணு மடங்காக்கிடலாம்.
 மூணுலட்சம் கதையெல்லாம் .அப்புறம் எழுதிக்கலாம் நாலு காசு சம்பாதிக்க இப்பதான் முடியும். தலை நரைச்சி, அகாடமி `அவார்டும் வாங்கி யோசிக்கிறதுக்குள்ள வாழ்க்கை கை நழுவிப் போயிட்டிருக்கும், நல்லா வாழ்றத்துக்கு ஆண்டவன் ஒரு வாய்ப்பைத்தான் தருவான்ல அதையே பற்றி எறிடனும்..
 பற்றுக் கம்பிகள் கொண்டு, பற்றி ஏறி படர்ந்து, தழைக்கும் (முகமுசுக்கைதான்) பிரையோனியாதான் ஹக்கீம். வாழ்க்கைக்கு எதிராக முகம் திருப்பாமல் இருக்கக் கற்றுக்கொண்டவன் ஹக்கீம். அவன் குறித்த பதிவுதானோ இக்கதை என எண்ணத்தோன்றுகிறது. ப்ரையோனியா எப்போதும், கொள்கை கோட்பாடுகள்
 தவிர்க்கும் ஆளுமை, எப்படியும் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவதுதான் அவன் லட்சியம். அவன் திட்டங்கள், எப்போதும் வட்டிககணக்குப் போடுவதுதான். அவன் ஒரு ””பொருளாதார மனிதன்.””. கலைஞனாகவோ, விஞ்ஞானியாகவோ இலக்கு நோக்கிப் பயணிக்கும் ஆதர்ச வாழ்க்கை
 அவனுக்கு வேண்டியதில்லை. எப்போதும் பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கான திட்டங்களை அலசி ஆராய வேண்டும். ஹக்கீம் ஒரு”” ப்ரையோனியா”” வில்லியம் கட்மன் அமெரிக்க ஹோமியோபதி நிபுணரின் விவரணைப்படி ப்ரையோனியா ஒரு சமகால வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக்
 கொள்ளும் ஒரு பொருளாதார மனிதன் (An Economic Man)

சங்கர பிள்ளையின் பரத வாக்கியம்

சங்கர பிள்ளையின் பரதவாக்கியம்

நாடகக் கலைஞன் சங்கர பிள்ளை

சென்னைக்கு வரும்வரை பார்த்த,படித்த, நடித்த நாடகங்கள் மிகவும் குறைவு. கட்டபொம்மன், சாம்ராட் அசோகன் போன்ற பள்ளிக்கூட நாடகங்களும், அறந்தை நாராயணன் சேரங்குளம் கிராமத்தில் நிகழ்த்திய ‘வரட்டுமே 67’ தேர்தல் நாடகமும் இன்றும் நினைவில் உள்ளது. தஞ்சை மாவட்ட தெருக்கூத்து அவ்வளவாக ஈர்க்கவில்லை. மன்னார்குடியில் இருந்த எனக்கு, மெலட்டுர் ஒன்றும் பெரிய தூரமில்லை; இருந்தாலும் பாகவத மேளா பற்றியெல்லாம் அப்போது கேள்விப்பட்டதில்லை.
சென்னையில், கசடதபற, ப்ரஞ்க்ஞை இதழ்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்த... போதுதான் திரு. ஜீ.சங்கர பிள்ளை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. ‘காலஞ்சென்ற சிங்கமும் மூன்று பண்டிதர்களும்’ பிரதி படிக்கவும், நாடகம் பார்க்கவும் வாய்த்தது. என்றென்றைக்கும் ஜீவித நியாயம் உள்ள நாடகம். என்னை பெரிதும் பாதித்த முதல் நாடகம்.
வீதி, கூத்துப்பட்டறை, பரீக்ஷா, அறிமுகம் கிடைத்த சில ஆண்டுகளுக்குப் பின்னர், மாக்ஸ் முல்லர் பவன் ஏற்பாட்டில், ‘கருத்த தெய்வத்தைத்தேடி’ பார்த்தேன். அலுவலக மலையாளி நண்பன் பங்கஜாக்ஷன் உதவியில் பரத வாக்கியம் நாடகப் பிரதி ஆங்கிலத்தில் வாசித்தேன். ஆழமாக யோசிக்கவைத்த பிரதி; இன்று வரை நாடக நிகழ்வு அனுபவம் கிட்டவில்லை. ஒரு நடிகனின் பார்வை இழக்கும் வயதில் அவனது மனசாட்சியே, அவனைக் குறுக்கு விசாரணை செய்து வாழ்வின் சகல இயக்கங்களின் சிறுமைகளையும்,பெருமைகளையும், சரிவுகளையும், குரூரங்களையும் உணர்த்தும் யுக்தி நாடகமாய் விகசித்திருக்கிறது. புறப்பார்வை குறையும் வேளை, அகப்பார்வை சாத்தியப்படுகிறது. சங்கரபிள்ளை, - காலத்தை வென்ற கலைஞன்- அவரது மூன்றே பிரதிகளை அறிந்திருந்தாலும், இரண்டே நாடகங்கள் நிகழ்த்தப் பார்த்திருந்தாலும்,எனக்கு அதுவே பேரனுபவமாகும்.
ஜீ. சங்கர பிள்ளை.See More
Photo: சென்னைக்கு வரும்வரை பார்த்த,படித்த,
 நடித்த நாடகங்கள் மிகவும் குறைவு. கட்டபொம்மன், சாம்ராட் அசோகன் போன்ற பள்ளிக்கூட நாடகங்களும், அறந்தை நாராயணன் சேரங்குளம் கிராமத்தில் நிகழ்த்திய ‘வரட்டுமே 67’ தேர்தல் நாடகமும் இன்றும் நினைவில் உள்ளது. தஞ்சை மாவட்ட தெருக்கூத்து அவ்வளவாக ஈர்க்கவில்லை.
 மன்னார்குடியில் இருந்த எனக்கு, மெலட்டுர் ஒன்றும் பெரிய தூரமில்லை; இருந்தாலும் பாகவத மேளா பற்றியெல்லாம் அப்போது கேள்விப்பட்டதில்லை. சென்னையில், கசடதபற, ப்ரஞ்க்ஞை இதழ்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்த போதுதான் திரு. ஜீ.சங்கர பிள்ளை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
 ‘காலஞ்சென்ற சிங்கமும் மூன்று பண்டிதர்களும்’ பிரதி படிக்கவும், நாடகம் பார்க்கவும் வாய்த்தது. என்றென்றைக்கும் ஜீவித நியாயம் உள்ள நாடகம். என்னை பெரிதும் பாதித்த முதல் நாடகம். வீதி, கூத்துப்பட்டறை, பரீக்ஷா, அறிமுகம் கிடைத்த சில ஆண்டுகளுக்குப் பின்னர்,
 மாக்ஸ் முல்லர் பவன் ஏற்பாட்டில், ‘கருத்த தெய்வத்தைத்தேடி’ பார்த்தேன். அலுவலக மலையாளி நண்பன் பங்கஜாக்ஷன் உதவியில் பரத வாக்கியம் நாடகப் பிரதி ஆங்கிலத்தில் வாசித்தேன். ஆழமாக யோசிக்கவைத்த பிரதி; இன்று வரை நாடக நிகழ்வு அனுபவம் கிட்டவில்லை. ஒரு நடிகனின்
 பார்வை இழக்கும் வயதில் அவனது மனசாட்சியே, அவனைக் குறுக்கு விசாரணை செய்து வாழ்வின் சகல இயக்கங்களின் சிறுமைகளையும்,பெருமைகளையும், சரிவுகளையும், குரூரங்களையும் உணர்த்தும் யுக்தி நாடகமாய் விகசித்திருக்கிறது. புறப்பார்வை குறையும் வேளை, அகப்பார்வை சாத்தியப்படுகிறது.
 சங்கரபிள்ளை, - காலத்தை வென்ற கலைஞன்- அவரது மூன்றே பிரதிகளை அறிந்திருந்தாலும், இரண்டே நாடகங்கள் நிகழ்த்தப் பார்த்திருந்தாலும்,எனக்கு அதுவே பேரனுபவமாகும். ஜீ. சங்கர பிள்ளை. 

எட்டயபுரத்திலிருந்து விஷ்ணுபுரம் வரை

எட்டயபுரத்திலிருந்து விஷ்ணுபுரம் வரை

எட்டயபுரத்திலிருந்து-----விஷ்னுபுரம் வரை!

ஆரம்பத்தில் எட்டயபுரத்திற்கு அருகிலேயே கைலாசபுரம் இருந்தது. மின்னலைச் சிக்கலெடுத்து உதறுகிற கடவுள் வர்க்கமும் , இனிக்கிற பிரியமான ஞானச் சரக்குகளை, வேற்று அங்காடிகளிலும் விநியோகித்திருந்தது.
அழகிய நம்பியாபிள்ளை போய், பரமசிவம் பிள்ளை என எல்லாம்- நேர் அனுபவ-அனுபவ சூன்யக் கருத்துக்கள் எல்லாம்- நான், என்னுடைய - என்ற அடித்தளம் இட்ட ஒரு மனையில் சுவர் எழுப்பிக் ...கட்டிடம் எழுப்ப ஆரம்பித்தது.கைலாசபுரத்து மருத மரம் நிழல் கொடுத்தது.மரம் பூத்துக், காய்த்துப், பழுத்தது. வரட்சியும் வரத்தான் செய்தது; வீடு ஒத்திக்கு. விட்டமற்றுப்போனால் வீடும் வெளியாகியது. மனற்கூண்டில், மணல் விரைவாய் சரிகையில், கடைசிப் பொடி மணல் மிகவிரைவாய்....கங்கையின் வெள்ளம் போல் காலம் என்ற ஜீவ நதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது எனும் யதார்த்தத்தோற்றம், பின்னால், நான் ஓடினால் காலம் ஓடும், நான் அற்றால் காலம் அற்றுப்போகும் ; காலம் ஒரு கயிற்றரவு ! “ என ஞானப் புரிதலாயிற்று.

நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய்தாமோ? காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? என்ற எட்டயபுரத்துக் கேள்விகள், கைலாசபுரத்தில் புதுமைப்பித்தனின் வீட்டுச் சுவற்றில் பட்டு எதிரொலிக்கவே செய்தது!

பின்னால் ’ பள்ளிகொண்டபுரம் “ வரலாறு பிரமிக்க வைத்தது. அனுபவச் சரக்கு தான். கொஞ்சம் யதார்த்தத் தளத்தில் மனம் புரிதலை நிரப்பிக்கொண்டது. பிறிதொரு அங்காடியில்” கபாடபுரம்”, வரலாறு, விற்பனை செய்யப்பட்டது. பொன்னும், மணியும், புரவியும், தேரும் என கற்பனை விண்ணைத்தொட்டது.

கற்பனைகள் நொறுங்கி, அதிகாரம், கழுத்தை நெரிக்கையில் புரிதலை, கற்பனைகளிலிருந்து விடுவித்து,” தருமபுரம்” தேங்கிபோன விஷயத்தைச் சூசகமாகச் சொன்னார் ஓ.வி. விஜயன். பின்னால் ”பார்வதிபுரம்” வந்தது. சமூகப் பிரஞையின் தீவிர பிரதிபலிப்பாக, மனிதரின் இழிவிற்கு, அவலத்தின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும், நம்பிக்கைகள் அதிகாரம் தாங்கியாய், குவிமையம் கொள்ளும் சாதீயம், மதம், கோவில் எதுவாயினும், அவற்றைக் கெல்லி எறியும் அவசியயத்தை உணர்த்தியது பார்வதிபுரம்.

இந்தியப் பழம்பெருமை சனாதனங்கள் சினுங்கின. எதிர்மறைப் பாடத்திட்டங்களின் அவசியம் சில முகாம்களில் உணரப்பட்டன.மீள் வாசிப்பாய், கற்பனையாய், விஷ்னுபுரம் வந்தது. பெருந்தொகுப்பு. கருத்துக்களின் அணிவகுப்பாய். மீண்டும், தளகர்த்தர்கள். பிரதம மந்திரிகள், புரவிகள், யானைகள், சிற்பிகள், நிமித்திகர்கள்.,கணிகையர்கள். வேதாந்திகள் சேர்ந்து விஷ்னுபுரம் சமைத்தனர்.

எத்தனை “புரங்கள்”? நமது மனங்களில் கூட்டுப்பதிவாய் இவ்விலக்கியங்கள் செயல் படுகின்றன என்று சொல்லமுடியுமா? இலக்கிய வெளி வேறு, சமூகவியல் வெளி வேறு என்று சமாதானம் நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோமோ எனும் கேள்வி உதிப்பதைத் தவிர்க்கமுடியவில்லை. இருப்பினும், இன்னொரு முறை எட்டய புரத்திலிருந்து, விஷ்னுபுரம் வரை பயணிக்க மனம் விழைகிறது. இடப்படும் இலக்கிய வெளியைத்துழாவித் துழாவி என்ன சேகரம் ஆகிறது என்று பார்க்கத்தான் 

சதாசிவம் எனது நெருங்கிய நண்பர்

சதாசிவம் எனது நெருங்கிய நண்பர்

டீ.எஸ்.சதாசிவம் எனது நெருங்கிய நண்பர். பெங்களூரில் சமுதாய நாடகக் குழுவில் பங்கேற்றவர். தனது தொலைபேசித் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றபின் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அவருக்கு மிகவும் பிடித்த, நாடக செயல்பாட்டிற்காக, ’பரீக்ஷா’ வைத் தெரிவு செய்தார். விஜய் டெண்டுல்கரின் ‘கமலா’, இ.பா.வின் மழை, பாதல் சர்க்காரின் தமிழ் மொழிபெயர்ப்பு நாடகமான ‘பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான்’ மேலும் ப்ரெக்டின் ’வெள்ளை வட்டம்’ ஆகிய நாடகங்களில் திறம்பட நடித்தார். நாடகத் தயாரிப்பில், அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி, ஞாநியின் வலது கரமாகத் திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
எப்போதும் நல்ல திரைப்படத்திற்கான தேடல் அவரிடம் இருந்தது. மற்ற நண்பர்களுடன் இணந்து தமிழ் நாடு திரைப்படக் கழகத்தில் ஒரு இயக்கமாகவே இயங்கினார். மொழிபெயர்ப்பு அவரது விருப்பம். தனக்கு மிகவும் பரிச்சயமான, கன்னட இலக்கியத்தின், மிகப்பெரும் ஆளுமைகளான, திரு. யு.ஆர். அனந்தமூர்த்தி, சந்திர சேகர கம்பார், தேஜஸ்வீ ஆகியோரின் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். சம்ஸ்காரா’ ஏற்கனவே ஆங்கில வழி வாசித்திருந்தாலும் தமிழில் படிக்கும்போதுதான், ப்ரனேஷாச்சார்யா, நாரணப்பா, சாந்த்னி ஆகியோரது இருத்தலியல் பின்புலம் தெளிவாகப் புரிந்தது. ப்ளேக் கொள்ளை நோய் ஒரு பாத்திரமாகவே வியாபித்திருப்பதன் புரிதல் கூடிற்று. சதாவுக்கு, மொழிபெயர்ப்புக்காக, விருது வழங்கி, சாகித்ய அகாடெமி தன்னை கௌரவப்படுத்திக்கொண்டது.
’திசையெட்டும்’ இதழில் அவரது ரசனையை வெளிப்படுத்தும் விதம் பல மொழிபெயர்ப்புக் கவிதைகள் சதா தந்திருந்தார். நாடகம், திரைப்படம்,இலக்கியம், கவிதை, மொழிபெயர்ப்பு என பன்முக ஆளுமை கொண்டவர் சதா.
வெள்ளையான மனம், வெளிப்படையான பேச்சு, எந்த இலக்கியக் கூட்டத்திலும், அனேகமாக அவரது கூர்மையான கேள்விக்கணைகள் இருக்கும். சதாவின் மூலம் கிடைத்தது திரு. பாரதி மணியின் நட்பு.
40 வருட ஆஸ்த்மா தொந்தரவு, இடையறா உறிஞ்சல் மருந்துகள் அவரது கல்லீரலை செயலிழக்கச் செய்தன. ஸிர்ரோஸிஸ் நோயை எதிர்கொள்ள முடியாமல் மருத்துவர்கள் கைவிட்டனர். சதாவுக்கு, ஹோமியோபதியில் அதீத நம்பிக்கை. மூன்றரையாண்டுகள் சிரமங்கள் குறைந்து, செயல்பட்டார். ஒவ்வொரு மாதமும் அசோக் நகரில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை எங்களது இலவச சிகிச்சை முகாமுக்கு வந்து மருந்து வாங்கிச் செல்வார். சில சமயங்களில் பாரதி மணியும் கூட வருவார். பேசும்போது கூட மூச்சு வாங்கினாலும், இலக்கியம் குறித்து பேசியே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வது வழக்கம்.
ஒரு நாள் மாலை ஞாநியிடமிருந்து சதாவின் மறைவுச் செய்தி வந்தது. பரீக்க்ஷாவின் உறுப்பினர்களும் நண்பர்களுமான சந்த்ருவும், ஷண்முகமும், நானும் சென்று அஞ்சலி செலுத்தினோம். ஓராண்டில் அவரது மனைவியும் காலமானார். சதாவின் மகன்கள் சேகர், செழியன் மற்றும் பேரனோடும் எங்கள் நட்பு தொடர்கிறது. எங்கள் பேச்சிலும், வாசிப்பிலும் சதா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Tuesday 11 February 2014

அம்மாவின் சவுரிகள்

அம்மாவின் தலையில் கிரீடம் இல்லை
குறை போக்க ஓராயிரம் சவுரிகள் இருந்தன
எல்லாம் பான்ஸாய் தான்
குட்டையாய், அடர்த்தியாய்

ஒன்றைக் கழட்டிப்போட்டு, பிரிதொன்றை
முடிவதில் வல்லவள் அம்மா
அடுத்ததன் ஆயுள் குறைகாலம் என்பதை
சவுரிகள் அறிவதில்லை

அன்று எது தலையில் இருக்கிறதோ
அது தன்னை கிரீடம் என்றே எண்ணிக்கொள்ளும்
பாவம் அந்த சவுரிகள்
நிச்சயமற்றதை அறிந்ததுமில்லை,ஏற்றதுமில்லை

வடக்கேபோனால் ஒன்று
உள்ளூரில் ஒன்று
இளைப்பாறும் எஸ்டேட்டில் வேறு
அலுவலின்போது பிறிதொன்று
அசத்தலாய் இருக்கும் வரை
ஆயுள் காலம் நீட்டிக்கும்
அடர்த்தி குறைந்தவை
 ம்யூசியத்தில்
கிளியோபாட்ரா மாடத்தின்
அண்மைக் கூண்டில் பத்திரமாய்
ஒவ்வொன்றின் வரலாறும்  ஆவணப்பதிவில்

நிதி குறைந்தால், பொற்குவை தரக்
கேட்டதில்லை அம்மா!
 பதிலாய், மாற்றுத் திட்டமென
ஏலம் விடுவாள்  சவுரிகளை
கோடிகோடியாய்
கொட்டிகொடுத்து
ஏலம் கேட்க, மண்புழுக்களும் அணிவகுக்கும்
விறைத்து நின்று சல்யூட்  போட்டு
மரியாதை செய்வாள் அம்மா
ஊர்ந்து ஊர்ந்து  மகிழ்ச்சியில்
ஒலி எழுப்பிக் களிப்புறும்

ஒரு நாள் சவுரி அவழ்ந்துவிட
காவல்  நாயொன்று சடுதியில்
கவ்விக்கொண்டு வந்ததது
மண்புழுக்கள்  பார்த்திருந்தும்
சிரிக்க மறந்து  விரைவாய்க் கடந்தன
அம்மாவின் தலைக் குறைவைக்
கண்ட புழுக்கள்
ஆணை பெற்றன , நாடுகடத்தப்பட
பாவம் அந்த சவுரிகள்!
பாவன் அந்தப் புழுக்கள்!!
அறிந்ததுமில்லை, ஏற்றதுமில்லை
தங்களின் நிச்சயமின்மையை!. 

ஸ்டெத்தாஸ்கோப்பை மாட்டிக்கோ

ஸ்டெதாஸ்கோப் மாட்டிக்கோ
சும்மாவேனும் காபினெட் மந்திரி
இதயத்தை அளவெடு
S1 S2  நார்மலென எழுதாதே
வீங்கிய அகந்தையின் பேய்
அங்குதான் உறைகிறது
மிட்ரல் வால்வில் சிக்கி
எதுக்களிப்பில் ஏறி இரங்கி
சதா சர்க்கஸ்.
அந்தர் பல்ட்டி
டயாஃப்ரம் அகற்றி
பெல் வழி கூர்ந்து கேள்
விக்ரம்,வேதாள் இருவரின்
முனுமுனுப்பும் கேட்கும்
மான் வேகம் மனோ வேகம்
உன்மத்தக் குளம்பொலிகள்
திடீர்ப் பாய்ச்சல்
ஏட்ரியல் ஃப்லட்டர்ஸ்
/\/\/\/\/\/\......./\/\/\/\/\/\.........
ஈசீஜி யின் மாதிரிப் படிவம்
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை………
நெஞ்சு பொறுக்குதில்லையே

அந்த ஊரின் மையத்தில் கிடந்த....

அந்த ஊரின் மையத்தில்
கிடந்த கேணியிலிருந்து
புறப்படும் பாம்புப் பாதைகள்
ஒன்றுக்கொன்று இணைய முடியா
இணைகோடுகளாய்
எதன் நிமித்தம் இவை இப்படி?
எவர் நாவும் நீண்டதில்லை கேள்விகேட்டு.

ஊரின் புறத்தே புளியம் விதைகளாய்
தவளைகள் எப்போதும் இரைந்தபடி
ஒன்றையும் விட்டதில்லை
பேசிப் பேசித் தீர்த்துவிடும்!

குல்லாய்தான் வேண்டுமென்று…
காவிக் கத்தியும் குங்குமமும் போதுமென்று
குன்றிமணி இரட்டை வண்ண
ராஜ பாட்டையில்
சுகமாய் தாம்பூலம் பூட்டி
ஜல் ஜல் என சலங்கை ஓசையில்
பயணம் செய்யும் தவளைகள்.

வான வில்லின் நிறப் பிரிகையில்
தன் முகம் காண விழையும்.
ஏனோ கானல் நீர் கண்டு
கரைந்தபடி உலவித் திரியும்.
உண்டும் உடுத்தியும்
பெண்டு சுகத்திலும், பகலிரவென.
சூரியன் உதித்தும், மறைந்தும்.

ஆனாலும் அவை விலகியதில்லை
தம் தூசிப் பாதை விட்டு
பாசிக் குளங்கள் எங்கும்
பரவி நிலைக்கும் விதம் விதமாய்
மேலைக் காற்றில் முதுகு காட்டி
இதமாய்ச் சொறிந்து
காத்திருக்கும் மலட்டுத் தவளைகள்!

அந்த செவிட்டு ஞாயிறு

அந்த செவிட்டு ஞாயிறு
எதையும் காதில் வாஙிக்கொள்ளவில்லை
சூரியன் கிளை பரப்பியதும், எழுந்து
தான் எழுதிய உயிலைக் கிழவன்
பிள்ளைகளுக்கு வாசித்தான்
கீழ்க் குறிப்பிட்ட சொத்துக்கள் அனைத்தும்
சொல்லாமல் விடுபட்டனவும், எல்லாம்
என் மூன்று முட்டாள் பிள்ளைகளுக்கே
ஸ்விஸ் வங்கி சேமிப்பு
மூடர் தலைவனுக்கு
செவ்வாயில் வாங்கிய தோட்டம்
மூடர் செயலருக்கு
பாக்தாதின் குண்டு துளைக்கா மாளிகை
கடை மூடனுக்கு
உயிலின் மூலப்பிரதி ராஜபக்சே கையில்
நகல்,, கேரள ******* ராஜா நிலவரையில்.
எவ்வித துர் நபர் தூண்டலும் இல்லாமல்
சுயம்புவாய் நான் பதிந்தது
கையொப்பம்----- நர இந்த்ர பேடி
சாட்சி 1  பூரண மூடர்கோன்
சாட்சி2------சுயம்புலிங்கக்கோன்
******* இவ்விடத்தில் உங்கள் இஷ்டப்பெயரை இட்டு நிரப்ப
 உங்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
 

அந்த மரத்தில் குடியிருந்தது ஒரு நீள மூக்கன்

அந்த மரத்தில் குடியிருந்தது
ஒரு நீள மூக்கன்
வெகு நாளாய்
ஆறுகள் வற்றுவதும்
மீன்கள் படும்பாடும்
பின் நீர் வரத்தும்
கரையோரத் தவளைகளின்
கொர்க் கொர்க் சத்தங்களுக்கும்
சாட்சியாய்  நீள மூக்கன்.
சுறுசுறுப்பு துறந்த சோர்வோடு
இரைதேடும் நாட்களிலும்
ஓரிரு இரைகள் கிடைத்தன
பட்டினி அறியாதபடி.
ஒற்றைக்காலில் நின்று
நித்தம் தவம் செய்யும்.
ஆதார் அட்டைக்காரன்
சென்ஸஸ் கணக்கெடுப்பாளன்
கடவுச்சீட்டுக்காரன்
குடி நீர் வரிக்காரன்
எவன் தொல்லையும் இல்லாதபடி..
சிறகுகளில் வண்ணங்கள்
கலைந்துவிடுமென்றோ
சதை இழப்பில் தளர்ந்து
மெலிகிறோமென்றோ
கழிவிரக்கம் கொள்வதில்லை
முதுமையோ,சாவோ
அதன் சிந்தையில் இல்லை
மரத்திற்கருகில் விசால்மாய்
இருப்பிடம்  எனது
சதா தொல்லைகள்
சிந்தையில்.
கூடுதலாய் இரைதேடி
சுவாசித்து, எதிர் நீச்சலிட்டு
கைகளை வீசிப்போட்டும்,
பறக்கவே இல்லை நான்
என் ஓரக்கண் பார்வையில்
நீளமூக்கன் உயரத்தில்
அதன் பறவைப் பார்வையில்
குள்ளமாய் நான்.…..
 

அது வாயகன்ற பாத்திரம்

அது வாயகன்ற பாத்திரம்
திறந்து மூடலாம்
மேலேயும் கீழேயும்.
ரகசிய உள்ளடுக்குகளோடு.

பொதிந்து வைத்த ஸ்வாரஸ்யங்கள்
நீற்றுப்போகா பழிக்குப்பழிகள்
நீறுபூத்த காமங்கள்
ஒன்றன்மேல் ஒன்றாய்.

அவ்வப்போது ஒரு கட்டை
மேலெழும்பி வாசிக்கும்
உரசும், முரண்படும்,
உள்ளூரக் கைகோர்த்துக் குழிபறிக்கும்.

பாத்திரத்தின் இருப்பை
பொய்யென்றவரெல்லாம்
பூ வாடும் கணத்துள்
போய்ச்சேர்ந்தார்.

பாத்திரம் வளரும்
யுகங்களாய், மன்வந்த்ரங்களாய்
பலப்பல பெயரோடும்
பலப்பல பசியோடும்..
பல்லாயிரம் வயிற்றோடும்.
மகோதர மகோன்னதமாய்.

புழுவென வளையும் நெளியும்
மண்டியிடும், கதறும், சீறும்
அறச்சீற்றம் மட்டிலும்
அன்றுமில்லை, இன்றுமில்லை.

பல்லாங்குழியும், பாண்டியும்
தாயமும் லகுவாய் ஆடிக்
கரையேறும் திருப்படிகள் கடந்து
ஏதோ ஒன்றைக் கோஷித்தபடி!.

ஔவைக்கோ அம்னீஷியா
என் சொல்வாள் இன்று?
பல்லாயிரம் வயிற்றுப்
பாத்திரம்,பசிக்கக்கண்டு.!. .

அனுதினமும் நகம் கடிக்கிறான்

அனுதினமும் நகம் கடிக்கிறான்
நகம் வளருமென்று உறுதிதான்
ஒரு நாள் நகம் சொத்தையாய்
வெடித்துப் பிளந்து கறுத்தது
நுனியில் கடிக்க அருவருப்பு
மனம் கசந்தது நாளும்

 நகப் பூச்சுப் பூசி
வண்ணங்களில் அழகூட்டி
சுவைத்தான்.  சொத்தை
மறைந்ததாய் மனக்களிப்பு
பழுதெனினும், பழக்கம்
விலகாது. தொடரும் பூமிச்சுற்று
தேவை முன்னிறுத்தும்
ஒரு சிறிய மறைப்பை
 மாந்தன் இன்னும் குழவியே
காக்கா காக்கா பூப்போடு
பாட்டுப்பாடி வரப் பெற்ற
நக வெள்ளைப் புக்கள்
பழுதையும் அழகூட்டும்.  

இணைப்புக்கள் எல்லாம் துண்டிக்கப்பட்டன

இணைப்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டன
சன்னல்கள்,கதவுகள் மூடப்பட்டன
வாயும் இறுகக் கட்டப்பட்டது
திருக்கை வார் சொடுக்கலுக்குப்பின்
கழுத்து நெரிக்கப்பட
கைகால்கள் துவள
மூச்சும் நின்றது.
அவன் இல்லாதொழிந்தான்
எதிர்ப்புக் குரலில்பேசிக்கொண்டிருந்தவன்
கலகம் செய்தவன் அமைதியானான்
எதிர்பாராமல் நிறைய பேர்கள் எதிர்த்தனர்
திருக்கை வார்கள் இப்போது கை மாறின
துப்பாக்கிகள் செயலிழந்தன
மீண்டும் தலைவன் ஒருவன் தென்பட்டான்
உரத்துப் பேசினான்
எதிர்த்துப் பேசினான்
கரவொலி எழுப்பி
கலகமும் செய்தான்
முன்னைப்போலவே மூச்சுக் காற்றின் வெப்பம்
பொசுக்கியது சுரண்டலை
குரல்வளைகள் நெரிபடாதிருக்க
சட்டம் போட்டார்கள்
சன்னல்கள் திறந்தன சுதந்திரக் காற்று வீச.

  

இரு சக்கர வாகனம்

இரு சக்கர வாகனம்
பின்னிருக்கயில் புத்தன்
ஓட்டுனர் சைத்தான்
புழுதியில் வேகமாய் பயணம்
சாலையோரக் கடை
ஒழுகும் பனியாய்
ஐஸ்க்ரீம் சுவைக்கும்
சின்னஞ்சிறிசுகள்
ஓட்டுனருக்குப் புரிந்தது
பின்னவருக்கு நாக்கில் ஈரம்
வண்டி தானாய் நின்றது
தடையேதுமின்றி!
சைத்தானின் ஒருகையில்
ஐஸ்க்ரீம் , மறுகையில்
வண்டியின் கடிவாளம்
புத்தனின் ஆசைக் குதிரை
கடிவாளம் மறுத்தது
கைக் கொன்றாய் இரண்டு!
ஆசை உருகி உருகி.
குதூகலத்தில் புத்தன்
குறும்பாய் சைத்தான்
 

ஏணியைக் காட்டி அரவத்தை மறைத்தது யார்?

ஏணியைக் காட்டி அரவத்தை மறைப்பது யார்?

பரம பத ஆட்டத்தில்
ஏணியை மட்டிலும் காட்சிப்படுத்தல் தகுமோ?
ஏணி உண்டென்றால் அரவமும் உண்டன்றோ?
ஒன்றை மறைத்தல் , ஒற்றைப் பரிமாண பரமபதம்
மாயத்தாற்றம், பிறழ்வின் வழி, தினசரிக் காட்சி

ஏறு, ஏறு! ஏணிப்படி சாசுவதம்!, ஏறி வா!
தொடுவான் வரை உன் சுவர் தான்!
உன்கை சுத்தியல் உன் ஆளுகைக்குள்!
ஏன் தயக்கம்?  அடி! சுவற்றில் ஆணியை அடி!
இறுக்கி அடி!, பிடுங்கிக் கொள்ளாதிருக்க அடி!
எல்லாமே ஆணிகள் தாம்,  உன் சுத்தியல் விதிக்குள்!

அரவத்தை மறைக்கும் திரையை யோசி
விபரீதத் திரை, வியாபகம் கொள்ளும் திரை
சந்தையெங்கும் திரையின் இழைகள்
மாயப் பேரரசின் விழுதுகள்
உன் கண்ணில் புரை, நீஙகாதபடி
திரை, திரை, பாம்பை மறைக்கும் திரை

அறுத்தெறி புரையை அறுத்தெறி
கிழித்தெறி திரையை கிழித்தெறி
அரவம் அம்பலமாகக் கிழித்தெறி

உழுதவன் கணக்குப் பார்த்தால்

உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கும் மிஞ்சாது
படித்தவன் கணக்குப் பார்த்தால்
பைத்தியம் தான் பிடிக்கும்
சின்ன ஃபாண்ட், உருவில் பெரிய ஃபாண்ட்
பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்
மினேட்டார் ஸ்பிங்க்ஸ் என
தலை வீங்கிய நாட்கள்
கண்வழி இறங்கி கருத்திலும் மையோப்பியா
எழுதி எழுதிக் கையெங்கும் க்ராம்ப்ஸ்
படிப்புச் சாலையில் காததூரம்
தனிமையில்,கால் இழுக்கும் ஷியாட்டிக்கா
படிப்பாளி ரத்தம் தனி ரத்தம்
ரத்த சோகை, பொதுப்புத்தி சோகை
கூகிள்,யாஹூ வரைபடம் தேடித்தேடி
மிஞ்சியது என்னவோ ரத்தச் சிலந்தி
ஆயிரமாயிரம் நூல்கள் சேகரம்
அழுக்கும், தூசியும் சேகரம்
அறைக்குள் எப்போதும் அந்தர தியானம்
ஆஸ்த்மா இழுப்பு பின்னால் அம்னீஷியா!

Monday 10 February 2014

எங்கு போகின்றன இந்த ஆடுகள்?

எங்கு போகின்றன இந்த ஆடுகள்?
மேய்ப்பனின்றி, நகர மத்தியில்!
ஒற்றை வரிசையில்.
முதலில் போவது வெள்ளாடு-
பார்வை அதற்கில்லையென
மற்றவை அறியா.
பாசாங்கு செய்வதில்லை அது
தன்னால் பார்க்க முடியுமென….

ஆடுகள், நிறக்குருடென
எங்கும் நான் படித்ததில்லை.
சிவப்பு, மஞ்சள், பச்சை
சிக்னல் ப்ரஞையற்று
தொடரும் பயணம்.
எதிர்வரும் ஆபத்து
ஏதும் அறியாமல்.!
ஒழுங்கின்றிக் கணைத்து
ஆதரவைத் தெரிவிப்பது
யாருக்கென்று சொல்லயியலா
குழப்பப் பொழுதுகள்.

ஓரம்போவென
தடிகொண்டு எறிகிறான்
கண்ணாடியணிந்த வழிப்போக்கன்.
கோஷம் போடுறீங்களா கோஷம்?
முனுமுனுத்து விரைகிறான்
புழுக்கைகள் சேகரிக்க
இயற்கையுரம் எப்போதும் உதவுமாம்.

ஆடுகள் அறியா, கொடிபோட்டக்
காரில், மரியாதை, வருமென
கணவான் கீழிறங்கி விரைத்து நின்று
அணிவகுப்புக்கு சல்யூட் செய்வதையும்
பாவம் அந்த ஆடுகள் அறியா.  

எதற்காய் நீ சோகம் காக்கிறாய்?

எதற்காய் சோகம் காக்கிறாய்?
முகம் வெளிறிப் போனதற்கா?
இரும்புச் சத்து சாப்பிட
சரியாகுமென சமாதானம்
அறிந்தவன் தான் நீ!
இல்லை இக்காரணி இல்லை

துணி வெளுக்கும், வெந்நீர், தண்ணீர்
அறிதிறன் எந்திரம் மீள் துவைப்பில்
சட்டை வண்ணம் வெளிறியதற்கா?
இல்லை; இல்லவே இல்லை.
இல்லாள் கோபித்தால் மீள்வண்ணம்
கூட்டவும் வகையறிந்தவன் நீ!

தோகை விரித்து ஆடிக் குலுங்கும்
மயிலிறகுக் குட்டி போடாததற்கா?
இல்லை ஒருபோதும் இருக்காது
இறகைக் கிள்ளிவைத்து லகுவாய்
கூட்டலைப் பெருக்கலாக்கும்
கலை வசப்பட்டவன் நீ

மாமியார் தந்த சீதனம்
ஈயச் சொம்பு முகம் நசுங்கியதற்கா?
இது பொருந்தாக் காரணி.
அடகுக் காரனும் சீண்டமாட்டானென
அளந்தே வைத்திருப்பவன் நீ!

வாசல் தேவதை அழகு கூட்டும்
ஒத்தை செம்பருத்தி வெளிறிக் கிடக்க
காரணம் அறியா மனம் வெதும்பும்.
மனிதனுக்கு வைத்தியருண்டு
மாட்டுக்கும், முயலுக்கும் வைத்தியருண்டு
ஏற்றமிகு வண்ணத்தொட்டி மீனுக்கும்
நோய் தீர்க்க வைத்தியருண்டு
செம்பருத்தி வைத்தியர்
யாரென்று அறிந்தவர் சொல்லுங்களேன்!


எப்படியும் அது நிகழ்ந்து விடலாம் தான்



எப்படியும் அது நிகழ்ந்துவிடலாம் தான்
இன்றில்லை, அடுத்த பொழுதும் இல்லைதான்
ஆனாலும் ஒரு நாள், திடீரென, ஒருகணம்
நடந்துவிடும்.

என்றோ ஒரு நாள் மழைபெய்ய தினமும்
குடைகொண்டுபோயென்பாள் அம்மா.
மழையில் நனையவே எனக்குப்பிரியம்
சங்கதி மழையென்றால் ஒரு பொருட்டல்ல
.
சீருடைப் பித்தான்கள் அறுந்துபோகலாமென
பட்டன் ஊசியெல்லாம் கைவசம் அப்பாவிடம்
ஒரு நாளும், அது தேவைப் பட்டதில்லை.
ஊசிமுனைகள் பத்திரபடுத்தலில் மழுங்கிப் போனது.

மூன்று இலை விட்டதும், பற்றுக்கம்பி நீட்டியிருக்கிறது
எதையும், பற்றித் தாவி ஏறிவிடலாம் என யத்தனிக்கும்
நம்பிக்கையோடு முற்றத்து மூலையில் வளரும் பாகல்.

பாட்டியின் சுருக்குப் பை, அப்பாவின் மணிப்பர்ஸ் எல்லாத்தையும் விட
அண்ணணின் ஏடீஎம் கார்டுக்குத்தான் வீட்டில் கூடுதல் மதிப்பு.
பிக்பாக்கெட் ஜாக்கிரதை என தினமும் சொல்லியனுப்புவாள் அம்மா
என்றாவது ஒரு நாள் அது நடக்கவும் கூடும்.
தினமும், கிளம்பும் நேர அறிவுரைகள் எரிச்சல் தரும்
அண்ணனின் சேமிப்பு ரூ ஆயிரத்துக்கும் குறைவுதான்
ஆனால் அம்மா அறியமாட்டாள். நான் விட்ட சாபங்களை.

எட்டு போட்டுக்காட்டி வாங்கிய லைஸென்ஸை
அம்மா நம்பியதில்லை. சாலை விதிகள் அம்மாவுக்கு அத்துப்படி
எதிர் வீட்டுக்காரன் விபத்தில் போய்ச்சேர்ந்தது
அம்மாவின் காதுக்கும் வந்துவிட்டது
பழிகாரன் வேறு எங்காவது குடியிருந்திருக்கலாம்

தினமும் எதற்கெல்லாம் பயந்து சாவது.?
இடீ இடிக்கையில் அர்ச்சுனா சொல்லுதல் நல்ல ஏற்பாடு
எல்லாத்துக்கும் பரிகாரங்கள் இருந்தால்………..
என்றைக்கோ நடக்கப்போவது
அவ்வளவு பயம் தந்திடாது… அர்ச்சுனா சொல்லிவிட்டால்.

எப்போதும் இடுப்பில் கையூன்றி

எப்போதும் இடுப்பில் கையூன்றி
கால்பரப்பி நின்றதாய் ஞாபகம்
முன்னால் விழுந்த நிழலோ
என்னப்போல் இல்லை-என்
ரசனைக்கும் ஏதுவாய் இல்லை
.
ஆசிரியரின் தலையும்
அப்பாவின்உடலுமாய்
நிழல் கிடந்தது.-எதிர் வீட்டு
ஸ்பைடர்மேன் பேரனையும்
அடையாளம் காட்டிற்று.

பெண்பாலற்ற நிழலென
வெளியெங்கும் வியாபகம்.
இடுப்பில் பதிந்த கரங்களில்
துப்பாக்கி நிழல்கள் கூராய்

நிழலுக்குமில்லை எளிய
அஹிம்சை ஞானம்.-மொத்தத்தில்
நான் நீயென பேதமற்று
பிறத்தியானை இம்சிக்கும்
மீசை வைத்த நம் நிழல்கள்.

ஏன் இந்த பயம்?

ஏன் இந்த பயம்?
உண்மை, சூரியனைப்போல
சுட்டுவிடும் என்றா?
வர்ஷிக்கும் மழைக்குப் பயம் உண்டா?
தாம் வீழும் இடம் குறித்து
நெடிதுயரும் குன்றறியுமா பயம்
வெடிவைத்துத் தகர்க்கப்படலாம் என!
பயமின்றி வாழ்தல் அரிதா?
பூவில் தேன் அருந்தும் வண்டுணருமோ
தான் சிக்கிக் கொள்வோம் என.

மனிதன் பயப்பட சபிக்கப்பட்டவனா?
சபித்தவர் யார்?

சௌகர்ய சல்லாத்துணி
திரையிடுமா உண்மை
ஒளி முகத்தை
மூடி மறைத்தாலும்
பயம் நீங்குமா?
நகமென சுருண்டு நீளுமே
தற்காப்பு, தலைச் சுருக்காகுமோ?
மரப்பட்டை உறை நீக்கி
காட்டிவிடலாம் தானே?
உண்மைச் சூரியனை!

ஒரே முறைதான் அனுமதிச் சீட்டு வாங்கினேன்

ஒரே முறைதான் அனுமதிச்சீட்டு வாங்கினேன்
இருந்தாலும் அலுப்பு சலிப்பின்றி
போயமர்ந்தேன் சர்க்கஸ் பார்க்க.
யானை தன் பலத்தையெல்லாம் விட்டுக்கொடுத்து
ஒரு ஸ்டூலின் மீதேறி
பணிந்து வணங்க, கூட்டம் குதுகலித்தது
அந்தரத்தில் தொங்கி போட்ட ஆட்டங்கள் அற்புதம்.
 நெருப்பு வளையம் என்றாலும் பாயத் தயாராயின
குதிரைகள், நாய்கள்.
மரணத்தைத் தொட்டு தொட்டு விலகி வந்தான்
விரைவாய், மோட்டார் சைக்கிள் ஒட்டி.
குள்ளர்கள், உயரர்கள் சுற்றி வந்து சலாம் போட்டனர்
கூட்டத்தார் அனைவருக்கும்
பல முறை பார்த்த பின்னர், புரிந்தது
காட்சிகள் அணிவகுப்பு மாறாதது
கோமாளிகள் அனைவர் முகத்திலும் தெரிந்தது
என்முகமே.

சாலையோரத்தே அழுக்குத் தலையும்

சாலையோரத்தே அழுக்கு உடையும்
பரட்டைத் தலையுமாய்
தனக்குள் பேசியபடி
தனிமையில் சிரித்தும்,அழுதும்
சிலரைப் பார்த்ததுண்டு.
பழகிய படிமம் இது
மனத்தில் பத்திரமாய்
ரட்சிக்கப்பட்டு பொதிந்து கிடக்கிறது
பித்துக்குளி எனப் பிறரைப்
பல முறை ஒரே நாளில் பழிப்பதுண்டு
அவர் மனம் நோக
அவர் முகத்தெதிரேயும்
ஒரு நாளாவது அப்படியொருவன்
எனக்குள் உண்டா என
விசாரித்ததில்லை

குடவோலைக் காலம்

கவிதை 3



குடவோலைக் காலம்
நெருக்கடி நிலை நீடிக்கிறது
அரைஞாண் கயிற்றில் தங்கக் காசுகள்
கோர்க்கக்  கேட்கும் வாழ்க்கை!
தாலிக்கு மட்டுமே தங்கம்!
சோழர்கள் எப்போதும் பெண்ணிய வாதிகள்
அரைஞாண் கயிற்றுக்கு எப்போது?
அடுத்த தேர்தலில் கட்டாயம்
தரப் போவதாய் சூளுரைகள்
கிடந்த நிலை ரங்கநாதரோ
எழுந்து வந்து க்யூவில் நிற்கிறார்!
ஆதார் கார்ட் கேட்டவன்
அகமதாபாத் மாற்றம்
ரேஷன் கார்ட் கேட்டவன்
ரேபரேலிக்கு மாற்றம்
அரைஞாண் கயிற்றுக்கு
அரை கிராமாவது தங்கம் வேனும்
இல்லாவிட்டால் நோ பட்டன்
ரெங்க நாதரின் கோஷம் கேட்கலையோ?

கவிதை2

பாட்டி சொன்னாள்
ஆறு தன் வழி போகுமென்று- நான்
கரையாய் இருந்தேன்
இல்லை, நம் வீட்டு வழி போகட்டுமென
திருப்பி விட்டார் அப்பா- நான்
மீனாய் இருந்தேன்
நீர் வற்றி, வெறும் மணல் திட்டெனப்
பேரன் சொன்னான் – நான்
மண்ணாய் கிடக்கிறேன்.
கூரை வீடு, உள்ளிருந்து
பார்க்க அலுப்பதே இல்லை
பூமியும், வானமும் எப்போதும்
தென்பட்டது தட்டையாய்,
பூகோளப் புத்தகம்
பொய்யுரைப்பதென
தாத்தாவின் பொருமல்..

அடிக்கடி வந்தது அமாவாசை
கைப்பிடியற்ற கருக்கருவாளாய்
சதா சதா தேய்பிறைகள்
முக்குக் கடையில் விற்கும்
கவிழ்த்துப்போட்ட ரொட்டியாய்
பௌர்ணமி மட்டும் அரிது அரிது.
தேள், பூரான் கடிகள்,
வலிகள் விலங்கியலில்
அறிமுகம் இல்லை.
விசுவாசம் கூடி
தேளிலும், நாகத்திலும்
ராஜாக்கள் இருந்தன எங்களுக்கு.
குப்புற விழுந்த இன்க் பாட்டிலாய்
விஸ்தரிக்கும் நட்பு வட்டம்
கருவண்டு, தேரை, நத்தை
எப்போதும் பேசிக்கொண்டிருக்க..
பஞ்சாரமிருந்தது கோழியோடும்
குஞ்சுகளோடும், சாணி மெழுகி.
பத்தாய பதிலி குதிர்
சின்னதாய் வாய் வைத்து.
பாட்டிக்குப் பக்கத்தில்
எச்சிப் பணிக்கம்
மூங்கிலில் முளைவிட்ட
ஆணியில் தொங்கும் சுரைக்குடுக்கை
கொஞ்சம் சில்லறைகள், திருநீரோடு.
திறந்து மூடப் படலாய்க் கதவு
வெளியுலகம் எங்களோடு இல்லை.
ஆட்டுகுட்டியில், கோழிக் குஞ்சில்
பங்கு கேட்டு வந்துபோகும் மணியக்காரர்
தாத்தா மரியாதை காட்டுவார்
அடுத்த ஈத்தில் நிச்சயம் தரேன்!
வாங்கிய கடனைத் தந்ததே
இல்லையாம் தாத்தா.!
கன்றுக்குட்டிக்கு, தாய்ப்பசு
சொல்லித்தந்தன எதைத் தின்னலாம்
எது கழிச்சல் தருமென
முகர்ந்து பார்த்தே பாடம் படித்தன
ஆகாதென ஒன்றுமில்லை எங்களுக்கு
ஏதாயினும் பரவாயில்லை பசிக்கு,
புல்லாயினும் பரவாயில்லை புலிக்கு.
ஐப்பசி அடை மழை,
பூமி குளிர்ந்து போகும்
நீரூறும் வீடு
அன்னக் கூடைகள் ஆசனமாகும்
தெருவோரம் பாயும் நீரில்
கத்திக் கப்பல்
கொஞ்ச நேரம்
போக்குக் காட்டும்
பின் அமிழும்
எங்கள் மனம் பதைக்க.
அடுத்த ரெண்டு நாளில்
மண் பிளந்து மூச்சுவிடும்
இலைத்தளிர்கள்
எங்கள் நம்பிக்கையாய்..