Monday, 18 August 2014

சோளக்கொல்லை பொம்மைக்கு

சோளக் கொல்லை பொம்மைக்கு
கோட்டும் சூட்டும் மாட்டிவிட்டு
அதிகாரி முன் கொண்டு நிறுத்து
அத்தாட்சி தரும் அதிகாரி!

அது பேச, விவாதிக்க, நிரூபிக்க
காகித நிரூபணம் சமர்த்தென!
கொம்புள்ள அதிகாரி கையெழுத்திட்டு!

நாமகரணம் ஆயாச்சு!...
இனி நீ பொம்மையில்லை!

ஒல்லியும் உயரமாய்
சரியும் தோள்களோடு
வயிறு எப்போதும் காலியாய்
தலையும் அப்படித்தான்!
ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி
கொஞ்சம் நாட்டியம், நாடகம்
கொஞ்சம் க்ரிக்கெட் ஆட்டம்
சமூக மனிதன் இரக்கத்தோடு
பரவி வியாபிக்கும் நட்போடு!

அத்தாட்சி பெற அதிகாரிக்குக்
கொடுத்த விலை மீட்க
வழியொன்று உண்டு
எல்லாரும் நம்பிட!
உன்னைக் கும்பிட!

நீ சொன்னால் நடந்துவிடுமென
சொல்லி பிழைத்துக்கொள்!!
குறி சொல்! எல்லாம் நன்றாய் நடக்குதென!
காவல் அதிகாரியாய் சொல்!
நீதி அரசராய் சொல்!
நடப்பதெல்லாம் நன்மைக்கேயென!
குறையொன்றும் இல்லையென!

தானாய் மலரும் புல்லையும் பூவையும்
மாதிரியாய் சொல்லிக்காட்டு! நம்புவர்!

வயிற்றுள் திணித்த
வைக்கோல் தீர்ந்து போகுமுன்!
தலைக்குக் கவிழ்த்த சட்டி உடையுமுன்!
கறுப்புக்கோட்டில் வைத்த
வெள்ளைப் புள்ளிகள்
அடுத்த மழையில்
அழிந்து போகுமுன்!

No comments:

Post a Comment