- நீளக் கண்ணாடியின் முதுகில்
- சிவப்பாய் ரஸமேற்றி
படுக்கையறையில்
தடியனாட்டம் நிற்கிறது…..
கெட்டி மரச் சட்டத்துக்குள்!
சீதன அசேதனம் தானே
வெற்றுச் சிவப்புச் சாயம் தானே
என அலட்சியம் காட்டினேன்
நிற்க, போக, வர கிடக்க...
எல்லாவற்ரையும் ரகசியமாய்
படம்பிடித்து அப்பட்டம்
மாறாமல் அசத்துகிறான்!
மறைவாய் காமிரா ஏதேனும்?
அடிக்கடி சோதித்தும் பார்த்தேன்
அதெல்லாம் ஒன்றுமில்லை
பின்னெப்படி துல்லியமாய்?
குவிமையம் சதையூடுருவி
எலும்பூடுருவி, மனமூடுருவி!!
நான் ஏமாற்றியதும் ஏமாறியதும்
அகந்தை வீங்கியதும் குழைவதும்
நாயாய்ப் பணிவதும்,
நத்தையாய் சுருங்குவதும்
பாம்பெனப் படமெடுப்பதும்,
பஞ்சாரக் கோழியாய்
உறைவதும், அடைகாப்பதும்
அடுக்குமாடிகள் வீசிஎறிந்த
குப்பையாய் வீழ்வதும்
எல்லாம் பிசகின்றி தெரிகிறது!!!
கெட்டிக்காரன் புளுகு
அடுத்த கணத்தில் இவன்
முன் வந்தால். ஆஹா ஆபத்து
அப்புறப் படுத்த வேண்டும்
திருப்பித் தந்துவிடலாம்
வாஸ் கோட காமாவுக்கே!
காத்திருக்கிறேன் மின்னஞ்சல்
அனுப்பிவிட்டு…………..
Saturday, 29 March 2014
சீதன அசேதனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment