Saturday, 22 February 2014

விழுங்க முடியாமை

விழுங்க முடியாமை

தொண்டை அடைக்கும் தருணங்கள்
எச்சில் கூட்டி விழுங்கி சமாளிக்கப்
பிரயத்தனம்; ஆனாலும் நீங்காதது அடைப்பு
முள்ளாய் குத்தும், திணறும், கண் கலங்கும்
கவிதை எழுதலாம்! அடைப்பின் புலம் தெளிய
ஓவியம் வரையலாம் வண்ணங்கள் குழைத்து
மிடறு ஏறி இரங்கும் பாவனையை!
இன்னும் என்னென்னவோ செய்யலாம்...
அடைப்பு முழுதாய் அடைக்க்கும் வரை
தானாய் நீங்குதலும் சிந்தனைக்குட் பட்டதே
டிஸ்பேஜியாவுக்குக் காரணம் சொல்வான் வைத்தியன்
பூஞ்சக் காளான் வழி நெடுகப் படிந்திருப்பதாய்
கண்டமாலைபோல் கோளங்கள் வீங்கியதாய்
தொற்று, புற்று எனப் படுத்தல்களின் பட்டியல் நீளும்
சீ டீ ஸ்கான், எம் ஆர் ஐ இத்தியாதிகள்
இருளில் ஒளியைப் பதித்தபடி,பிடித்தபடி
வியாக்கியான சாமர்த்தியங்கள்,விவரணங்கள்
யாரறிவார்? குறுகலான சந்தில் ஆழ அகல யோசனைகள்
மேலேறவும் கீழிறங்கவும் வாய்க்கால் தேடும்
தொண்டை அடைக்கும் தருணங்கள் அடிக்கடி!
எச்சில் கூட்டி விழுங்கி சமாளிக்கப் பிரயத்தனம்………….

No comments:

Post a Comment