Friday, 25 April 2014

மலினப்பட்ட மனிதம்

மலினப்பட்ட மனிதம்

ஒரே ஒரு நாற்காலி
அவரது சம்பத்து
குடிசைக்கு வெளியே
குந்தியிருந்தது எப்போதும்
வேப்ப மர நிழலில்

சுற்றிலும் வெட்டுபட்ட முடிகள்
கறுப்புத் திட்டுக்களாய்...
இரைந்துகிடக்கும்
காற்றில் ரெக்கை முளைத்துப்
பறந்து போய் தூர விழும்

பலரை அமர்த்திப்
பெருமை சேர்த்த நாற்காலி
முடி திர்த்தவும்
முகம் திருத்தவும்
வந்து அமர்ந்து
நேர்த்திக் கடன் ஏதுமின்றி
கோரைக் கற்றைகளை
விட்டுப் போவர்

சோப்பு, பூதர மாவு
ஏதுமின்றி சிக்கன திருத்தம்
மலிவு விலையில்
காசு தராமல்
கடன் சொல்வோரும் உண்டு

பரமசிவம் ஏதும்
பேச மாட்டார்
வழுக்கை தலையைத்
தடவிக் கொண்டு
லேசாய் சிரிப்பார்

கரடியாய் வந்து
அழகாகிப் போகும்
அத்துணை பேருக்கும்
அவர் ஆப்த நண்பர்

நரைக்கு மருந்து
நகப் புரைக்கு மருந்து
வழுக்கைக்கும் ஆலோசனை
தலையில் கரப்பான்
சொறி சிரங்குத் தேமல்
எளிதாய் தீர்வு
பகருவார் பரமசிவம்

இப்போதெல்லாம் விடுமுறையில்
ஊருக்குப் போனால்
நாற்காலி மட்டும்
சரிந்து கிடக்கிறது
தொழில் நசித்துப் போய்
தொலைந்தும் போனார்

முடி திருத்துவோர் சங்கம்
அறிவிக்கை சொல்கிறது
முடி திருத்தவும்
முகம் திருத்தவும் விலையை!

அடிக்கடி கை
தடவும் தலையை
அவர் நினைவில்
பிடரியில் மெஷின் போட்டு
ஏத்தி வெட்ட அப்பா தரும்
கடளைக்கெல்லாம்
சிரித்தபடியே இருப்பார்

ஊர் மனிதர்
அனைவருக்கும்
அழகு செய்த பரமசிவம்
கடன் கிடுக்கிகளில்
தலை கொடுத்து
வெட்டுண்டு போனதாய்
சேதிதான் மிச்சம்!

No comments:

Post a Comment