Thursday, 25 December 2014

ஹோமியோபதி பட்டறைச் சாத்தியப்பாடு-2

ஹோமியோபதி பட்டறைச் சாத்தியப்பாடு 2
பின் எழுபதுகளில் வெளிவந்த தீவிர அரசியல் இலக்கிய இதழின் பங்கேற்பாளர்கள் மூவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழித்து ஓர் மாலையில் முன் கூட்டித் திட்டமிட்டபடி ஓர் ரெஸ்டாரண்ட்டில் சந்திக்கின்றனர். இருவர் சென்னை வாசியாகவும் ஒருவர் அமெரிக்காவில் சிகாகோவிலும் வாசம். மூவரிலும் முதுமை கூடித் தோல் தடிப்பும் சுருக்கங்களும் தெரிகின்றன. எழுபதைத் தொட்டுவிட்ட கட்டம். வாழ்வின் வெற்றி அறுவடைகளை அசைபோட்ட காலம் போய் மூப்பில் சரிகிற பருவம். இருப்பதைக் கையில் பிடித்திக் கொள்ள வேண்டும் எனும் ஆசை மட்டிலும் உயிர்ப்புடன். அமெரிக்க வாழ் தமிழர் தனது மகனின் கல்லூரிப்படிப்பிற்குத் தேவையான ஒரு சான்றிதழ் பெற தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

தங்களது கடந்தகால தீவிர அரசியல் தத்துவ, கலை இலக்கிய லட்சிய வேகங்கள் குறித்து நினைவூட்டிக் கொள்கின்றனர். அந்தக் காலத்தில் அவர்களது ஈடுப்பாடு சிப்கோ இயக்கத்திலிருந்து, அயனெஸ்கோவரை, மாசேதுங்கிலிருந்து,சர்ரியலிஸ, க்யூபிஸ ஓவியங்கள்வரை, குரோசோவாவிலிருந்து ஃப்ரான்ஸ் ஃபேனான் வரை வியாபகம் கொண்டிருந்தது. தெரு நாடகங்களில் தங்களது நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தனர். இலக்கிய இதழியலில் ஆர்வம்..

இன்று மூவரும் அந்நியமாகிப் போயிருக்கிறார்கள். இப்போது விஜய் தெண்டுல்கரோ, மஹாஸ்வேதாதேவியோ, சுந்தர்லால் பஹுகுனாவோ வெறும் மங்கலான நினைவு மட்டுமே. யாரோ நடந்த தொலை தூரக் காலடிச் சுவடுகள். தினசரி பத்திரிகை வாசிப்பைத் தாண்டாத சராசரித்தனம்.

பதினெட்டுத் திருப்படிகளில் மூச்சிரைக்க பத்தில் ஏறி ஆசுவாசப்படுத்திக்கொள்ள இயலாமல் பதினேழு வரை சரிந்தும் தளர்ந்தும் தொய்ந்தும் அடிவைக்கிற கையறு நிலை.
கடந்தகால ஆழமான இறையிலிக் கொள்கை பின்னகர்ந்து போயிருக்கிறது. மூவரும் கடவுளின் ஜீவித நியாயத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கைக்கு, அற நியதி ஒன்று அவசியம் தேவை என்பதில் மூவரிலும் உறுதி தெரிகிறது.

முதலாமவர் அரசுப்பணியில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். தலைக்குச் சாயம் பூசி பழுப்பேறி இருக்கிறது. ”என் கனவுகளில் கடவுளின் அமானுஷ்ய வடிவம் தோன்றுகிறது . அவரது ஆக்ஞைக்கு நான் கட்டுப்படுகிறேன். அவர் என்னோடு பேசுகிறார். அவரது கட்டளைப்படி அடுத்தவாரம் குடும்பத்தோடு குல தெய்வ பூஜைக்குச் செல்கிறேன் காலிலிருந்து அடிக்கடி மேலேறி வரும் இழுப்பு வலிக்கும் மரத்துச் சுரணையற்றுப் போதல் நிவர்த்திக்கான வேண்டுதல்”. கழுத்தில் இடப்புறம் பெரிதாக ஒரு சதை வளர்ச்சியும் கோள வீக்கமும் தவிர்க்க இயலாத படிக்குக் கண்ணில் படுகிறது.
”நீங்கள் அனேகமாக கோனியம் ஆளுமைக்கு ஒத்திகையாட்டம்“ என்கிறார் இரண்டாமவர்.. சற்று நேர அமைதிக்குப் பின் தொடர்கிறார். என்னால் லட்சியங்கள் எவை குறித்தும் சிந்திக்க இயலவில்லை..என் மகன் தன்னை நிறுவிக்கொள்ள வெளி நாடு செல்கிறான். அவனது மலர்ச்சி மட்டுமே என் முன்னால் தெரிகிறது. மனைவி போனபின் நான் ஒண்டிக்கட்டை. எப்போதும் ஒரு அறைக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது. மகன் லண்டன் போனதும் என் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எல்லாவற்றிலும் பயம். தெருவைக் கடக்க பயம் டையபடிக் நோய் வேறு- தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இனிப்பு எப்போதும் தேவைப்படுகிறது கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தனிமை, கவலை எதற்கெடுத்தாலும் பயம் மகன் நேரங்கழித்து வந்தாலே பதட்டம் மரண பயம் அகலாது கூடவே. வயிற்றில் உப்புசம் எரிச்சல் அல்சருக்கு முந்திய கட்டமாம் போட்டோ பிடித்துக் காண்பிக்கிறான் ஸ்பெஷலிஸ்ட். எந்தப் புத்தகத்தைத் தொட்டாலும் கொஞ்ச நேரம் தான். எதையும் முழுமையாக வாசிக்க இயலவில்லை.இடது கண்ணுள் எப்போதும் ஒரு வேதனை. வாங்கி வைத்த அஞ்ஞாடியும் கொற்கையும் அப்படியே இருக்கிறது படிக்க இயலவில்லை. கழிவிரக்கம், சுயமதிப்பில் இறக்கம், அவரது பேச்சில்.
உங்கல் தலையில் அர்ஜெண்டம் தலையை யாரோ மாற்றிப் பொருத்திவிட்டிருக்கிறார்கள் நீங்கள் மிகவும் இனிப்பானவர் என்று கொஞ்சம் தூக்கலான எள்லலோடு பேசுகிறார் முதலாமவர் இதுவரை அதிகம் பேசாமல் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த மூன்றாமவர் தொண்டையைக் கணைத்துக் கொள்கிறார். பார்வை எங்கோ தொலைவில் நிலைகுத்தியிருக்கிறது.

முதலாமவர்: குமார் நீங்கள் எப்போதும் சுற்றுப்புற சூழலில் ஆய்வு நடத்திக் கொண்டிருப்பீர்களே இப்போது ஏதேனும் நூல் வெளியிட்டிருக்கிறீர்களா? கோ ஆதரிங் அட்லீஸ்ட்?

மூன்றாமவர்: தன் நரைத்து வெளுத்த தலையைக் கோதிக்கொண்டே” ”இல்லை அப்படி எதுவும் செய்ய இயலவில்லை. 80களுக்கு மேல் என்னில் ஆர்வம் தங்கவில்லை. நான் மிகவும் மாறியிருக்கிறேன். என் வாழ்க்கை எப்போதும் விரைவை வேண்டுகிறது. அதனுள் லட்சிய வேட்கை எல்லாம் தோற்றுப் போய்விட்டன. வீடு , ஆஃபீஸ், கார், பாங்க் பாலன்ஸ் இவை தவிர நாட்டம் என்பது எதிலுமில்லை பிள்ளைகள் இருவரும் நன்கு படித்துவிட்டு உத்யோகத்தில் இருக்கின்றனர். இன்னும் நானும் வேலை பார்க்கிறேன். மூன்றாவது மகனின் கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாகத்தான் சென்னை வந்திருக்கிறேன்.

இரண்டாமவர்: நீங்கள் தோரோவின் வால்டென் மீது தீராத மோகம் கொண்டவராயிற்றே! போய்ப் பார்த்தீர்களா அதன் மிச்ச சொச்சங்களை?

மூன்றாமவர்: இல்லை இல்லை! அமெரிக்கா சென்றபின் அந்த ஆர்வமெல்லாம் என்னில் வற்றிப்போய் விட்டது தனது வெளிறிய ஜீன்ஸை சற்றே தளர்த்திவிட்டுக் கொள்கிறார் இறுக்கம் குறைய. . நெஞ்சு வேகமாக ஏறி இறங்குகிறது

முதலாமவர்: நான் யூ ட்யூபில் ஒரு வீடியோ பார்த்தேன். மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு ஹோமியோ மருத்துவர் அமெரிக்கா செல்கிறார். முன் கூட்டித் திட்டமிட்டபடி ஸாண்ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் அறுபது வயதைக் கடந்த பெண்மணியை சந்திக்கிறார். இருவரும் காரில் புறப்பட்டு அப்பெண்மணியின் குடும்ப கல்லறையைக் காணச் செல்கின்றனர். கல்லறை வாசலில் டாக்டர் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் என்ற வாசகம் பொறித்திருக்கிறது. மிகவும் எளிமையான முறையில் மலர்க்கொத்துக்கள் வைக்கிறார் இந்திய மருத்துவர். ஓரிரு நிமிடங்கள் கல்லறையின் முன் மண்டியிட்டு கண்மூடி நிற்கிறார். அந்தப் பெண்மணி திரு கெண்ட்டின் பேத்தியாம்!
மூன்றாமவர்: அந்த இந்திய மருத்துவரின் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியது. அவர் தனது நம்பிக்கயைத் தொடர்கிறார். அவரது லட்சியம் நீர்த்துப் போகவில்லை.

மூவரும் தங்களை சுதாரித்துக் கொள்கின்றனர். சற்றே தேநீர் குடித்தாலென்ன எனும் யோசனை வருகிறது. மூவரும் கொஞ்சம் தே நீர் அருந்துகின்றனர். தங்கள் குரலில் படிந்திருக்கும் கிலேசத்தை மறைத்துக்கொண்டு, பேசிக்கொள்கின்றனர். ஒரு கோரஸ் போல் அவர்களிடம் வெளிப்படுகிறது. ”” நாம் நம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறோம்! வருந்துவதெற்கெல்லாம் ஒன்றுமில்லை””. அடுத்த முறை சந்திக்கலாம்.

LETTING GO OF ART
LETTING GO OF IDEAS
LETING GO OF CULTURE
……………
எப்போதோ வாசித்த அயோடியத்தின் ஆளுமைப் பண்புகள் நிணைவுக்கு வருகின்றன. கலை, கருத்தியல், கலாச்சாரம் இவற்றை விட்டுவிடும் மனிதர்களில் அயோடியம் தங்கியிருக்கிறது. இவர்களது பதட்டத்தையும் படபடப்பையும் இவர்களால் இனி தாங்கிக் கொள்ள இயலாது.
  
பழைய நாட்கள் என்றால் நமக்கெல்லாம் மிகவும் பிடித்தமான, ஓடுகாலிகள், பிழைப்பு வாதிகள், ஃபிலிஸ்டைன்ஸ் என்ற சொற்களால் வசைபாடி இருக்கலாம். அவையெல்லாம் இப்போது புழக்கத்தில் இல்லை நாம் மிகவும் முன்னேறிவிட்டோம் என்பது ஆசுவாசம் தருகிறது..

No comments:

Post a Comment