Thursday, 25 December 2014

மாலை நேரத்து சிறுகதை வாசிப்புக்கள்

மாலை நேரத்து சிறுகதை வாசிப்புக்கள்
இன்று மாலை தி. நகர் பனகல் பார்க்கின் வடவாயில் சிமெண்ட் பென்ச் புண்ணியம் கட்டிக்கொண்டது. இதுவரை அதில் யார் யாரேனும் உட்கார்ந்திருக்கக் கூடும். ஆனால், ஒரு மாலை நேரத்தில், தொடர்ச்சியாக மூன்று சிறு கதைகள் வாசிக்கக் கேட்கும் பாக்கியம் அதற்குக் கிடைத்திருக்கிறது. காற்றில் ஈரம் இருந்த நேரம். சுற்றிலும் அடர் வனம் போல் மரம் செடி கொடிகள். ரம்மியமான சூழல் கூட்டமும் அதிகமில்லை. நானும் நண்பர் சண்முகம் மட்டிலுமே வடவாயில் பென்ச்சில்.
தெரிவு செய்த கதைகள் ந...ீல பத்மனாபனின் ”சமூக ஜீவி”, பால் சக்காரியாவின் “ஜோசப் நல்லவனின் பாவ மன்னிப்பு” மற்றும் குமார செல்வாவின் “ ஈஸ்தர் கோழி” . கால் மணி நேர இடை வெளி விட்டு ஒவ்வொன்றாய் வாசித்தோம். ஒரு கதை முடிந்ததும் நண்பர் சண்முகம் தன் மீது ஏற்பட்ட தாக்கத்தை விளக்கமாகச் சொல்லுவார். பின் நான் என் அபிப்பிராயத்தைச் சொல்லுவேன். அபிப்பிராயம் தான் எந்த இலக்கிய கோட்பாட்டின் அடிப்படையிலும் அது வராது. எங்களது மாலை நேரம் எங்களது வாசிப்பு அனுபவம் அவ்வளவே.
குமார செல்வா நல்ல கதை சொல்லி. தான் மிகவும் ஆசையோடு வளர்த்துவந்த கோழி- மிகவும் வாத்சல்யத்தோடு, இறந்துபோன தனது தங்கை எலிசபெத்தின் நினைவில் அவள் பெயரையே இட்டு அழைத்து வந்த செல்லக் கோழி, -க்றிஸ்துமஸ் நாளன்று விருந்துக்காக சமைக்கப் படுகிறது. கதையை நகர்த்திச் செல்லும் தம்பியின் மனம் நோகடிக்கப்படுகிறது. கதையின் முடிவில் அப்பா அவனை சாப்பிட அழைக்கையில் எலிசபெத் என ஓவென்று அலறி அழுகிறான்.
ஏனோ, குமரி வட்டார வழக்கு, வாசிக்கையில் ஒரு நெருடலை உண்டாக்கவே செய்கிறது. வரிகளின் பிடிபடல் உடனடியாய் நிகழ்வதில் தடை ஏற்படுகிறது. பூரணமாய் பாராட்ட முடியாமல் ஒரு அவஸ்தை.
நீல பத்ம நாபனின் “சமூக ஜீவி” ஒரு கையறு நிலையின் பதிவு. தன் வீட்டைச் சுற்றி மூன்று அத்து மீறல்கள். தெரு வாசலிலிருந்து சாலைவரை தான் போட்டு வைத்திருந்த மணலை போக்கிரிகள் அனுமதியின்றி அள்ளிச் செல்கிறார்கள். எதிர்ப்பைத்தான் காட்ட முடிகிறதே தவிர தடுக்க முடியவில்லை. பக்கத்து வீட்டை வாங்கிய கள்ள நோட்டு சாமியார் மாடி எழுப்புகிறான் இவன் வீட்டுக் குளியலறை பார்த்து ஜன்னல் திறக்கிறான்; அதையும் தடுக்க இயலவில்லை. பின் வீட்டுத் தோட்டத்தில் தன் மைத்துனனே, அதுவும் ஒரு மருத்துவன் ,முடை நாற்றமடிக்கும் குப்பைக் கூளங்களைக் கொட்டி அந்தப் பிரதேசத்தையே அசுத்தப்படுத்துகிறான் தடுக்க முடியவில்லை. கெட்ட வார்த்தைகளாய் வசவு வாங்குவது தான் மிச்சம்.எதிர்ப்பு எந்த பிரதிபலனையும் தராத அவலம் சித்திரப்படுத்தப்பட்டிருக்கிறது ஆனாலும் ஏதொ ஒரு வழக்குரைக்கான ஆவணம் போன்ற அனுபவமே மிஞ்சுகிறது.. சிறுகதை இலக்கிய தாக்கம் கிட்டவில்லை.
பால் சக்காரியாவின்“ ஜோசப் நல்லவனின் பாவ மன்னிப்பு “ கே.வீ ஜெய ஷ்ரீயின் மொழிபெயர்ப்பில். இதுவும் ஒரு க்றிஸ்துமஸ் நாளன்று நடைபெறும் சம்பவமெழுப்பும் உள்மனத் தாக்கம் தாம் . எழுத்து தான் இலக்கியம் எனும் அனுபவம் வாசிக்கையில் கிடைக்கிறது. தூக்கலான எள்லலோடு எழுதப்பட்ட கதை. கிறித்துவனாய் இருப்பதன் பொருள் குறித்த சுய விசாரணை தோரணையில் சரியான பகடியோடு திட்டமிட்டு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. கண்ணியமான எழுத்து. எல்லோரையும் இழுத்து தன்னை வாசிக்கச் சொல்லும் நடை.
மூன்றிலும் எங்கள் இருவரின் மனதிற்கு இதமாய் இருந்தது “ஜோசப் நல்லவனின் பாவ மன்னிப்பு. பக்குவமான இலக்கியப் பதிவாய் மிளிர்கிறது.
மொழிபெயர்த்த கே வீ ஜெயஷ்ரீக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment