Friday, 1 May 2015

யானைப் பால்

அந்த யானை இருபது டன் எடையுடன் அசைந்து கொண்டு இருந்தது.
வலி, கண்களில் நீர் சுரந்துகொண்டிருக்க அதன் அசைவுகள் முன்னெப்போதுமில்லாதபடிக்கு இருந்ததை எல்லோரும் கவனிக்கத் தவறவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்கள்.
அதன் குட்டி இறந்து இரண்டு நாட்களாகிவிட்டது. அந்த ஆப்பிரிக்க யானை சோகத்தில் தளர்ந்து விட்டது. நிலை கொள்ளாமல் தவிக்கிறது. பால் காம்புகள் புடைத்து பால் வழிகிறது, பால் கட்டிக்கொண்டு காம்புகள் பிளந்து ரணம் வலி.
அசைவும் அலறலும் மட்டுமே அதன் மொழியாகியிருந்தது.
...
அந்த யானைக் காப்பகத்தின் க்யூரேட்டர் அதனிடம் மிகுந்த பிரியம் கொண்டவர். வாத்ஸல்யத்தோடு எப்போதும் அதோடு உரையாடும் மொழியறிந்தவர். இன்று வழி புரியாமல் தவிக்கிறார்.
இரு நூறு மைல்களுக்கப்பால் தாய் நோய்வாய்ப்பட்டு தன் குட்டிக்குப் பால் கொடுக்க முடியாமல் அல்லலுறும் செய்தி அவருக்கு சமயத்தில் அறிவிக்கப்பட்டதும் அவர் ஏதோ கண்டுபிடிப்பை நிகழ்த்தியதுபோல் குதூகலித்தார்.
எல்லாம் விரைவில் நொடிப்பொழுதில் நடந்தன. பெரும் பள்ளம் வெட்டப்பட்டது. ட்ரக்கில் வெளியூர்க் குட்டியானை கொணரப்பட்டது. பின் கேட்கவேண்டுமா?
பள்ளத்தில் ட்ரக் இறக்கப்பட்டு, கீழ் நின்றபடி பால் அருந்தியது. தாய் யானை அந்தக் குட்டியானைக்குப் பால் கொடுத்தது வாஞ்சையோடு. குட்டியும் அவசர அவசரமாய் உறிஞ்சுவதை காப்பகத்தார் மெய்சிலிர்க்கக் கண்டார்கள்.
எந்த அனிமேஷன் படத்திலும் காண்பிக்கப்படாத அற்புதக் காட்சி யதார்த்தமாய் தன்னிச்சையாய் நடந்தபொழுது பக்கத்து நகரிலிருந்த ஒரு ஹோமியோபதி வைத்தியர் அவ்விடம் விரைந்து சென்றார். அன்று, அவருடைய வெகு நாள் கனவு பலிக்கும்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
க்யூரேட்டரிடம் தெரிவித்துக் கெஞ்சிக் கூத்தாடி வெகு நேரம் கழித்து சம்மதம் வாங்கி, பலத்த பாதுகாப்பாய் ஒரு சொட்டு யானைப் பால் சேகரித்தார்.
அந்த ஒரு சொட்டு யானைப்பால் வீரியப்படுத்தப்பட்டு. மெய்ப்பிக்கப்பட்டது.
மெய்ப்பித்து மெட்டீரியா மெடிக்கா தொகுத்தவர் ஹோமியோ மருத்துவர் நான்ஸி ஹெர்ரிக். உளவியல் நிபுணராயிருந்து பின் சுய தேர்வாய் ஹோமியோபதி மருத்துவரானவர்.
இன்று ஹோமியோ மருத்துவத்தில் யானைப்பால் ஒரு முக்கிய மருந்து!

No comments:

Post a Comment