Friday, 1 May 2015

வசப்படும் ஹோமியோ வானம் ஒரு ஞாயிறு மாலையில்

இன்று மதியம் சுமார் மூன்று மணி நேரம் கோல்ச்சிக்கம் ஆடம்னேல் ஹோமியோபதி மருந்து குறித்து சேர்ந்து வாசித்தோம் விவாதித்தோம்!
ஐந்தரை மணிக்கு துயரர்கள் வரத் தொடங்கி விட்டனர். விவாதத்தை முடித்துக் கொண்டு நானும் நண்பர் சந்த்ருவும் சேர்ந்து துயரர் சரிதை கேட்கத் தொடங்கினோம்
முதல் துயரர் பீ.எஸ்.என்.எல் ஊழியர். ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டீஸ் நோயால் அவதிப்படுபவர்..
...
அடுத்தவர் தணிக்கைத் துறையில் பணிபுரியும் தோழர். அவரது இரண்டு மகள்களுக்காக வந்திருந்தார். பீ.சி.ஓ.டி, மாத விலக்கு குறைபாடுகள், சூதக வலி, சைனஸைட்டீஸ் இத்தியாதி
மூன்றாமவர், சந்த்ருவின் நண்பர்-தன் மனைவியை அழைத்து வந்திருந்தார். மாதவிலக்கு பெரும்பாடு-கருப்பைக்கட்டி, இரண்டு சிறு நீரகங்களிலும் கற்கள், நான்கு, ஐந்து மி.மீ ஸைஸில். போதாக்குறையாக கருப்பைக் கழுத்துப் பகுதியில் அழற்சி.
இன்னொருவர். வித்தியாசமான நோய் ஹீமோஃபிலியா இரண்டு ஆண்டுகளாக ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொள்கிறார். ஃபேக்டர் 8 ஊசி போட வேண்டிய அவசியமின்றி இருக்கிறார். மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.
மற்றவர் நண்பர் சண்முகத்தின் உறவினர். மலக்குடல் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை முடித்து இப்போது ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். மலக்குடல் குறுக்கம் விலக, எளிதாக சிரமமின்றி மலம் கழிக்க சிகிச்சைக்கு வந்திருக்கிறார். இன்னொரு அறுவை சிகிச்சை தவிர்க்க வேண்டி என்னென்ன கோணங்களில் அலச முடியுமோ அதையெல்லாம் யோசித்து மருந்துகள் தேர்வு செய்கிறோம். முன்னேற்றம் இருப்பதை சந்தோஷத்தோடு தெரிவிக்கிறார்.
ருஅடுத்த பெண் துயரர் திருப்பத்தூரிலிருந்து அவருடைய கணவணோடு வந்திருக்கிறார். குழந்தையின்மை நீங்கி மகப்பேறு அடைய. இருவரது சரிதையும் கேட்டு மருந்து எழுதிக் கொடுக்கிறோம்.
கடைசியாக நண்பர் பாஸ்கர், அவரது மனைவி, குழந்தை ரோஷன். நண்பரின் கழுத்துத் தேய்மானத்தால் தோன்றும் வலிக்கும், அவரது மனைவியின் இதயப்படபடப்புக்கும் , அவரது மகனின் கால் சரும அரிப்புக்கும் மருந்து
மணி 9 ஆகிவிட்டிருக்கிறது. சந்த்ருவுக்குப் புறப்பட அவசரம். நண்பர் சேகர் புத்தக நிலையத்தில் துயரர் குறிப்பேடுகளை வைத்துவிட்டு புறப்படுகிறோம்.
ஹோமியோபதியராய் இருப்பதால்தான் இந்த மாலை இப்படி சாத்திய மாகி இருக்கிறது. விதவிதமான உயிரிகளின் ஆளுமைகளையும், அவர்களது நோய் ஏற்புத் திறனையும், துயரங்களையும் புரிந்துகொண்டு அவர்களோடு சேர்ந்து நிற்க முடிகிறது.
1994ல் பரீக்‌ஷா அரங்கேற்றிய சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள் நாடகத்தில் பங்கேற்று நடித்ததோடு சரி. இந்த இருபத்து மூன்று வருடங்களில் எந்த நாடகத்திலும் பங்கேற்ரு நடிக்க இயலவில்லை.
தினசரிப் பொழுதுகள் இப்படிக் கழிவதால் வேறு எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும், நாடக ஆக்கங்களுக்கும் செல்ல இயலவில்லை.
இந்த வருத்தத்தையெல்லாம் இழப்புக்களையெல்லாம் தாண்டி ஏதோ நண்பர்களுக்கு உதவ முடிகிறது என்கிற மன அமைதியும் உண்டாகிறது. கொஞ்சம் ஆறுதல் சொல்லிக் கொள்ளவும் முடிகிறது.

No comments:

Post a Comment