Tuesday, 22 July 2014

தொட்டிலில் உறங்கும் குழந்தை

தொட்டிலில் உறங்கும் குழந்தை
 கனாக்கண்டு சிரிக்கும் தானாய்
 பாம்பில்லை அதன் கனவில்
 பஞ்சு மிட்டாயும் வந்ததில்லை
 என்னவென்று புரியாமல் சிரிக்கும்
 எப்படியும் எதாவது கிடைத்துவிடும்
 தொட்டிலில் உறங்கிச் சிரிக்க
 கருப்பைப் புறவெளி வியாபகம்
 பிஞ்சுக்கை முறித்துத் திமிறும்
 கால் நீட்டித் துழாவும் ஆனாலும்
காதில் இரைச்சல்கள் இல்லை
 புறச்சத்தம் ஏதும் பாதிப்பில்லை
 அகச்சத்தம் இல்லவே இல்லை
 ஊமைப்படமாய் எல்லாக் காட்சியும்
 ஒருவேளை தொட்டில் மொழி
 சத்தமற்ற, சலனமற்ற காட்சியோ?
திரிசங்கு நிலையில் ஊஞ்சல்
 மேலே மட்டிலும் இணைப்பு
 கீழென்று ஏதுமற்ற வெளி
 மேன்மை நோக்கிய பயணம்போல்!

No comments:

Post a Comment