Tuesday, 22 July 2014

மனிதர்களின் தேவைகள் குறித்த விவாதம் 1920 களிலிருந்து
தொடர்கிறது.சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் அதிக
பங்களிப்பு செய்திருக்கிறார்கள். குடும்ப வருமானம் கூடக்கூட, உணவுக்கென்று
செலவழிக்கும் தொகை அதே விகிதத்தில் கூடுவதில்லை என கோட்பாடு தந்த
எர்னஸ்ட் எங்கெல்ஸ் தொடங்கி தேவைகளின் படி நிலை தயாரித்தளித்த ஆபிரஹாம் மாஸ்லோ
வரை ஆரம்ப நிலை புரிதல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இக் கருத்துக்களின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் பின்னாட்களில் கூடினாலும் முழுமை பெறாமலே இருக்கிறது. 
மார்க்ஸியரல்லாத பொருளாதார நிபுணர் தார்ன்ஸ்டன் வெப்ளனின் ஓய்வு விரும்பிகளின் வர்க்கம் மற்றும்
பகட்டு நுகர்வு ஆகிய இரண்டு கருத்தாக்கங்களும்  காலத்தில் முந்தியதால், தேவைகளின் படி நிலைக் கோட்பாட்டின் மீது ஒரு பொருத்தமான எதிர்வினையை விதைக்காமலே இருந்துவிட்டது.
50 களில்  முதலாளித்துவமும் தொழில் நுட்பமும் இணைந்து நுகர்வுக் கலாச்சாரம் கட்டமைக்கப் படுகிற போது தனது தேவையை உணராத தலைமுறை உருவாவதையும், சந்தையின் பலிகடாக்களாக மனிதர்கள் விழிப்புணர்வற்று மரத்துப் போனதையும் கோட்பாடாக ஹெர்பர்ட் மார்க்யூஸ் முன்மொழிந்தும், இன்றுவரை, தேவைகளின் படி நிலையில் மேலிரண்டு அடுக்குகளான, சுய மதிப்புத் தேவைகளும், சுய மேம்பாட்டுத் தேவைகளும் இன்னும் சரியான தளத்தில் விவாதிக்கப் படாமலேயே இருக்கிறது. ஏறக்குறைய இப்படி நிலைகள் வெப்ளனின் பகட்டு நுகர்வாகவே உருவாக்கப்பட்டுள்ளது.  மார்க்யூஸும், வெப்ளனும் இணையும் தளம் மாஸ்லோவ் மற்றும் ஆல்டர்ஃபெரால் சுருக்கியளிக்கப்பட்ட  பிழைப்பின் தேவைகள், சார்ந்திருத்தலின் தேவைகள், வளர்ச்சியின் தேவைகள் மீதான விமர்சனமாகவே அமையும் .
சந்தையின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தலை முறையின் வாழ்வியல் தேவைகள் மீதான சரியான கணிப்பு மிகவும் அவசியம்.

தேவைகள் –பகட்டு நுகர்வு கட்டமைக்கும்-வேட்கை தொடர்மம் குறித்த அவதானிப்பும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment