- பொய்யாவணம் தவிர்த்த எள்ளலோடு!
அகவை அறுபது
மூத்த குடிமகனென
அரசு சொல்லிற்று!
இனி வேலை இல்லை!
வங்கிக் கணக்கில்
ஓய்வூதியம் சேமிப்பில்!
...
ஆரமும் அட்டிகையும்
மனைவி கேட்கிறாள்
மகளுக்கு சீதனமாய் கார்
தானப் பத்திரம் மகனுக்கு
வீட்டை மாற்றி அவன் பெயரில்!
பேரன் பேத்திக்கு ஆளுக்கு
அரை க்ரௌண்ட் மனை
புதுச்சேரி போகும் வழியிலாவது!
என்செய்வது?
நேர்மையாய் சம்பாத்யம்!
லஞ்சம் லாவண்யம் கை சுத்தம்!
ஈ.சீ.ஜீ யில் எழும்பி வாய் பிளந்து
எகிறுது எஸ்.டீ வேவ்!
இடது வெண்ட்ரிக்கிள் டிஸ்ஃபன்க்ஷன்!
நெஞ்சை அழுத்தும் வலி
நாக்கடி மருந்து நாலு நிமிஷமே தாங்குது!
சின்ன வயசில் பலூன் ஆசை
என் நெஞ்சுக்குள் பலூன் விடனுமாம்!
இன்ஷ்யூரன்ஸ் கார்ட் தேய்க்கலாம்
கார்ப்பரேட் ரேட்டுக்குக் காணாது
சேமிப்பும் தேயும் முழுசாய்!
மனசுக்குள் வெம்பி
மற்றவர் முன் புன்முறுவல்
மனம் மறை பொருள் சொல்ல
அக்ரிமனி போல் அலையலாம்!
உயிலும் இல்லை! தானமும் இல்லை!
டீ-மாட் கணக்கு,ஷேர் தகவல்
யாருக்கும் இல்லை!
என்னாகுமோ? ஏதாகுமோ?
மரண பயம் துரத்த
ஒரு மாதமோ? ரெண்டு மாதமோ?
இறுதித் தீர்ப்பு வந்தே தீரும்!
ஆர்ஸெனிக் பதட்டம் அனு தினமும்!
தன்னைச் சுற்றி சுவரெழுப்பி
தனிமையைப் போர்த்திய உடலாய்
தாளிட்ட கதவின் பின் ஓவெனெ
அழலாம் இக்னேஷியாவாய்!
சட்டி சுட்டதடா! கை விட்டதடா!
விட்டேத்தியாய் ஸெபியாபோல்
பாட்டும் பாடலாம்!
பாட்டும் கேட்கலாம்!
ஒரு மாத தாடி வளர்ந்தபின்
புல், பூ, புள் , உதிரும் இறகெழுதி
முக நூலில் லைக்ஸ் வாங்கலாம்!
சொத்து, சொந்தம், சுமை, சுகவீனம் இல்லா
சுதந்திரம் தேட
என்ன செய்யலாம் இந்த மிச்சப் பொழுதை?
Tuesday, 22 July 2014
என்ன செய்யலாம் இந்த மிச்சப் பொழுதை?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment