- கூட்டுக் குடும்ப முன்னறையில்
செவ்வகமாய் போர்வைத்தடுப்பு
அதுவே பிரசவவெளி!
பெரியப்பாவின் மூத்த மகள்
பெண் குழந்தை பெற்றிருந்தாள்!
ஒரு பிராந்தி பாட்டிலில்
சுகப்பிரசவம் நடத்தினாள் முசுடு ஆயா
ஊரில் எல்லார் தொப்புள் அறுத்த
கத்தியும் அவளிடம் தானாம்!...
முகமெங்கும் சுருக்கம்
சிறுபிள்ளை சாக்பீஸ் கிறுக்கலாய்
அவளே கைனக் அவளே டையட்டீஷியன்!
ப்ரசவத்தின் மூன்றாம் நாள்
பத்தியக் குழம்பு செய்கிறாள் முசுடு
சாயந்தரம் பிடித்த கொறவை மீன்கள்
அன்னக்கூடையில் வளைய வரும்
தேங்காய்ப்பால் சாறெடுத்து சேர்ப்பாள்
காலையில் மீன்கள் மயக்கத்தில்
பூண்டுரிக்க ரெண்டுபேர் மிளகிடிக்க ரெண்டுபேர்
அவள் அதட்டல் உருட்டல் அட்டகாசம்
ஒரு பிள்ளைத்தாய்ச்சிப் பத்தியக் குழம்பு
ஊரெல்லாம் மணக்கும் முசுடின் கைராசி
எல்லோரும் நினைப்பர் தம் வீட்டுப்
பிரசவக் கொறவைப் பத்தியக் குழம்பை!
குலதெய்வ பூஜையில் என்னைக் கண்டதும்
எரவானத்தில் தேடுகிறாள் என் தொப்புள்
அறுத்த கத்தியை மறதியாய் வைத்தவள் போல்!
கதை சொல்லிகள் ஊரில் அதிகம்
என் பிறப்பின் கதை சொல்ல
ஆயாவால் மட்டும் முடிகிறது
ஊருக்கே ப்ரசவம் பார்த்த அவள் கதையை
முக நூலில் பதியலாம் பகிரலாமென்றால்
யார் வீட்டிலும் இல்லை அந்த தெய்வத்தின் படம்.!
Tuesday, 22 July 2014
அவளே கைனக் அவளே டையட்டீஷியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment