Tuesday, 22 July 2014

அந்தக் கிராமத்தில் அந்தக் காலத்தில்

  1. அந்தக் கிராமத்தில்
    அந்தக் காலத்தில்
    மாடுகள் வசித்தன

    முகர்ந்து பார்த்தே
    தெரிவு செய்து
    தாய் மாடு தின்னும்
    கன்றுகளும் அப்படியே

    இது ஆகாது...
    தின்றால் கழிச்சல்
    சடுதியில் வருமென
    தாயறியும் கன்றுக்கும்
    ஞானம் கடத்தும்
    கல்லூரிக்குப் போனதில்லை
    கல்வி கற்க கால் நடைகள்

    என்றைக்கோ அடாவடியாய்
    தின்று கழிந்தால்
    பெத்தய்யா வைத்தியர்
    முண்டாசுக் கட்டி
    கழுத்தில் வஸ்திரம் தரித்து
    பச்சிலை மருந்து தர
    பறந்து போகும் கழிச்சல்

    கொம்புக்கு வர்ணம் பூசி
    கழுத்தில் நெட்டிமாலை சகிதம்
    மாட்டுப் பொங்கலன்று
    மாடவிழ்க்கும் நேரம்
    முதல் மரியாதை
    பெத்தய்யா வைத்தியருக்கே!

    இந்தக் காலத்தில்
    இந்தக் கிராமத்தில்
    மாடும் இல்லை
    வைக்கோலும் இல்லை
    வைத்தியர் பெத்தய்யன்
    வருவதும் இல்லை!

No comments:

Post a Comment