Tuesday, 22 July 2014

பள்ளிக் கூடம் வெகு தூரம்

  1. பள்ளிக்கூடம் வெகு தூரம்
    ஐந்து மைல் குறையாது
    நடந்தே போகனும்
    ஒருகையில் புத்தகப்பை
    மற்றதில் பித்தளைத் தூக்கு
    கொஞ்சம் பழையது மோரூற்றி

    புதாற்றுக் கரை நெடுக
    விண்ணுயர தேக்கு மரம்
    ஐந்து கண்ணுப் பாலம் தாண்டி...
    ஆறு வளைந்து போக்குக் காட்டும்
    தினமும் துணைக்கு வருவது ஆறு
    போகும் வழியெங்கும் தீனி தரும்

    சடை சடையாய் கொடுக்காய்ப்புளி
    ஒரு கல் விட்டால் நூறு விழும்
    ஈச்சம்பழம் முந்திரிப் பழம் ,மூக்குசளிப் பழம்
    யத்தனிப்பு இல்லாமல் கைக்கு வரும்
    மைனா சிட்டு பழந்தின்னி வௌவால்
    எல்லாம் அன்போடு பங்கு கேட்டு
    பரிபாஷை பேசும் கலகலப்பாய்

    அரக்கு நிறத்தில் பட்டுப்பூச்சிக்கு
    நெருப்பெட்டி கூடாரம் வளையவர
    மூச்சிரைக்க ஓடினாலும்
    பிடிபாடாமல் தப்பும் வெட்டுக்கிளி

    தாவரவியல் விலங்கியல் தானாய் விளங்க
    தமிழாசிரியர் ஐந்துவகைப் பா கேட்பார்
    கலிப்பா, வெண்பா ஆசிரியப்பா அடுத்தது
    சொல்ல திக்கித் திணற நக்கலாய்ச் சொல்லுவார்
    நீ இனிமேல் தூங்கப்பா வென. !

No comments:

Post a Comment