ஸூர்ய ஒளியை ஸ்விட்ச் ஆன் செய்ய அறிகிலேன்
வெட்டிபோட்ட பச்சை மணம் வீசும்
புல் பத்தைகள்
கெக்கலித்தன என்னிடம்
என்னத்தைப் பிடுங்கி
விட்டாய்? என
பதில் தேடி விழித்திருக்கையில்
சிறகடிக்கும் வெட்டுக்கிளி
சேதி சொன்னது
”முழிக்கிறான்
முழிக்கிறான் திருடனாட்டம்”
”என் சோற்றுக்
கவளத்திற்காக எல்லாம்” என்றேன்
”புல்லைப் புதிதாய்
நட்டு சம்பாதி” அறிவுறுத்தும்
புற்கள், பல்லைக்
காட்டி பெரிதாய் நகைத்து
வெட்டுக் கிளி
கைகொட்ட, புல்லை
மீண்டும் அதன்
இடம் சேர்க்க பிரயத்தனப்பட்டேன்
ஒரு வழியாய் பின்னப்பட்டே
முடிந்தது
”தண்ணீர் ஊற்றனும்
தெரியுமா,” குரல் கேட்டது
கொம்பேரி மூக்கன்
ஊர்ந்து போனது தன்னிடம் தேடி
தண்ணீரும் ஊற்றினேன்,
மேகம் கருக்கவும்
சூரிய ஒளி கொண்டு
வா என்றது வெட்டுக்கிளி
என்ன செய்ய? காத்திருக்கிறேன்
என்றேன்.
இடுகாட்டுப் பிணத்திற்கு
காத்திருக்கும் கொம்பேறி
மூக்கனாட்டம்-
குரலெழுப்பித் தத்தியது வெட்டுக்கிளி
சூரிய ஒளியை ஸ்விட்ச்
ஆன் செய்ய அறிகிலேன்
நான் என்செய்ய?
வெட்டுமுன் யோசி! பிடுங்கியது போதும்!
நாலு திசை மந்திரமாய்
கேட்டது பதிலுரைகள்.
ஒப்புக் கொள்ளத்தான்
வேணும்! புற்கள்,, வெட்டுக்கிளிகள்,
மூக்கன்கள், எல்லாம்
புத்திசாலிகள் என்னைவிட!!!
No comments:
Post a Comment