Monday, 10 February 2014

எதற்காய் நீ சோகம் காக்கிறாய்?

எதற்காய் சோகம் காக்கிறாய்?
முகம் வெளிறிப் போனதற்கா?
இரும்புச் சத்து சாப்பிட
சரியாகுமென சமாதானம்
அறிந்தவன் தான் நீ!
இல்லை இக்காரணி இல்லை

துணி வெளுக்கும், வெந்நீர், தண்ணீர்
அறிதிறன் எந்திரம் மீள் துவைப்பில்
சட்டை வண்ணம் வெளிறியதற்கா?
இல்லை; இல்லவே இல்லை.
இல்லாள் கோபித்தால் மீள்வண்ணம்
கூட்டவும் வகையறிந்தவன் நீ!

தோகை விரித்து ஆடிக் குலுங்கும்
மயிலிறகுக் குட்டி போடாததற்கா?
இல்லை ஒருபோதும் இருக்காது
இறகைக் கிள்ளிவைத்து லகுவாய்
கூட்டலைப் பெருக்கலாக்கும்
கலை வசப்பட்டவன் நீ

மாமியார் தந்த சீதனம்
ஈயச் சொம்பு முகம் நசுங்கியதற்கா?
இது பொருந்தாக் காரணி.
அடகுக் காரனும் சீண்டமாட்டானென
அளந்தே வைத்திருப்பவன் நீ!

வாசல் தேவதை அழகு கூட்டும்
ஒத்தை செம்பருத்தி வெளிறிக் கிடக்க
காரணம் அறியா மனம் வெதும்பும்.
மனிதனுக்கு வைத்தியருண்டு
மாட்டுக்கும், முயலுக்கும் வைத்தியருண்டு
ஏற்றமிகு வண்ணத்தொட்டி மீனுக்கும்
நோய் தீர்க்க வைத்தியருண்டு
செம்பருத்தி வைத்தியர்
யாரென்று அறிந்தவர் சொல்லுங்களேன்!


No comments:

Post a Comment