Wednesday, 12 February 2014

தமிழ் இலக்கிய போதி மரம் 2



தமிழ் இலக்கிய போதிமரம் எனக்கருளிய உபதேசம்

””படிக்காதவன் முன் படித்தவன் வேஷம்
படித்தவன் முன் கசடறக் கற்றவன் வேஷம்
கசடறக் கற்றவன் முன் ஆன்று அவிந்து அடங்கிய வேஷம்
ஆன்று அவிந்து அடங்கியவன் முன் பொய்மையும் வாய்மையிடத்த வேஷம்””
இவ்வரிகள் எக்காலத்திலும், ஜீவித நியாயம் கொண்டவை!
இவற்றை வேஷங்களின் அணிவகுப்பாய் பார்ப்பதா?
அல்லது, ஒரு ஆளுமையின் வளர்ச்சிக் கட்டங்களாய்ப் பார்ப்பதா?
மனதின், தந்திர முக்காடுகளை இவ்வரிகள் தெளிவாய் விளக்குகின்றன.
கவிஞர் அபி சொல்வதுபோல்
“” ஊர்க்குளம் பாசி விலக்கி என்முகம்
கிடைத்த பெருமை தாங்காமல்
புரண்டெழுந்தேன்”” இம்மனோ நிலை-சுயமோகி நிலை எவர்க்கு சம்பவித்தாலும், மேலே சொன்ன வேஷ-வளர்ச்சிக் கட்டங்களை , தங்கள் மனத்தைப் புரிந்து கொள்ள, நினைவு கூர்தல் நல்லது என்றே தோன்றுகிறது.
 நான் என் நினைவிலிருந்தே இவ்வரிகளைப் பதிவு செய்திருக்கிறேன். ஒருவேளை அவை ஆசிரியரின் சொந்த, தேர்ந்தெடுத்த வார்த்தைகளிலிருந்து விலகியுமிருக்கலாம். அப்படியாயின், ஆசிரியர் பொறுத்துக் கொள்வாராக!
மெத்தச் சரி. இவ்வரிகளை எழுதிய ஆசிரியர் யார்?
உயர்வு நவிற்ச்சியற்று யோசித்தால். என்னைப் போன்ற சிறு நகரவாசிகளுக்கு, மார்க்ஸையும்,காந்தியையும்,பெர்ட்ரண்ட் ரஸ்ஸலையும்,ரோமண்ட் ரோலந்தையும் ஒருசேர படிக்கவைத்த, தங்கத்தையும், கல்யாணியையும், சாரங்கனையும், ஹென்றியையும், எங்களோடு உரையாடவைத்து, குருபீடங்களை அசைத்து,பிரம்மோபதேசம் புதிதாய்ச் சொல்லி, ஓங்கூர் சாமியாரையும்,அம்மாசிக் கிழவனையும், நந்தவனத்திலோர் ஆண்டியையும், காட்டித்தந்து, உள்ளே இருப்பவர்களையும், வெளியே இருப்பவர்களையும்,  சினிமாவுக்குப் போகும் சித்தாள்களின் நீளும் பட்டியலையும், ஆழமாய்ப் புரிந்துகொள்ளத் தூண்டிய, மதிப்பிற்குரிய 
த. ஜெயகாந்தன்.

No comments:

Post a Comment