Monday, 10 February 2014

கூரை வீடு, உள்ளிருந்து
பார்க்க அலுப்பதே இல்லை
பூமியும், வானமும் எப்போதும்
தென்பட்டது தட்டையாய்,
பூகோளப் புத்தகம்
பொய்யுரைப்பதென
தாத்தாவின் பொருமல்..

அடிக்கடி வந்தது அமாவாசை
கைப்பிடியற்ற கருக்கருவாளாய்
சதா சதா தேய்பிறைகள்
முக்குக் கடையில் விற்கும்
கவிழ்த்துப்போட்ட ரொட்டியாய்
பௌர்ணமி மட்டும் அரிது அரிது.
தேள், பூரான் கடிகள்,
வலிகள் விலங்கியலில்
அறிமுகம் இல்லை.
விசுவாசம் கூடி
தேளிலும், நாகத்திலும்
ராஜாக்கள் இருந்தன எங்களுக்கு.
குப்புற விழுந்த இன்க் பாட்டிலாய்
விஸ்தரிக்கும் நட்பு வட்டம்
கருவண்டு, தேரை, நத்தை
எப்போதும் பேசிக்கொண்டிருக்க..
பஞ்சாரமிருந்தது கோழியோடும்
குஞ்சுகளோடும், சாணி மெழுகி.
பத்தாய பதிலி குதிர்
சின்னதாய் வாய் வைத்து.
பாட்டிக்குப் பக்கத்தில்
எச்சிப் பணிக்கம்
மூங்கிலில் முளைவிட்ட
ஆணியில் தொங்கும் சுரைக்குடுக்கை
கொஞ்சம் சில்லறைகள், திருநீரோடு.
திறந்து மூடப் படலாய்க் கதவு
வெளியுலகம் எங்களோடு இல்லை.
ஆட்டுகுட்டியில், கோழிக் குஞ்சில்
பங்கு கேட்டு வந்துபோகும் மணியக்காரர்
தாத்தா மரியாதை காட்டுவார்
அடுத்த ஈத்தில் நிச்சயம் தரேன்!
வாங்கிய கடனைத் தந்ததே
இல்லையாம் தாத்தா.!
கன்றுக்குட்டிக்கு, தாய்ப்பசு
சொல்லித்தந்தன எதைத் தின்னலாம்
எது கழிச்சல் தருமென
முகர்ந்து பார்த்தே பாடம் படித்தன
ஆகாதென ஒன்றுமில்லை எங்களுக்கு
ஏதாயினும் பரவாயில்லை பசிக்கு,
புல்லாயினும் பரவாயில்லை புலிக்கு.
ஐப்பசி அடை மழை,
பூமி குளிர்ந்து போகும்
நீரூறும் வீடு
அன்னக் கூடைகள் ஆசனமாகும்
தெருவோரம் பாயும் நீரில்
கத்திக் கப்பல்
கொஞ்ச நேரம்
போக்குக் காட்டும்
பின் அமிழும்
எங்கள் மனம் பதைக்க.
அடுத்த ரெண்டு நாளில்
மண் பிளந்து மூச்சுவிடும்
இலைத்தளிர்கள்
எங்கள் நம்பிக்கையாய்..  

No comments:

Post a Comment