Tuesday, 11 February 2014

அது வாயகன்ற பாத்திரம்

அது வாயகன்ற பாத்திரம்
திறந்து மூடலாம்
மேலேயும் கீழேயும்.
ரகசிய உள்ளடுக்குகளோடு.

பொதிந்து வைத்த ஸ்வாரஸ்யங்கள்
நீற்றுப்போகா பழிக்குப்பழிகள்
நீறுபூத்த காமங்கள்
ஒன்றன்மேல் ஒன்றாய்.

அவ்வப்போது ஒரு கட்டை
மேலெழும்பி வாசிக்கும்
உரசும், முரண்படும்,
உள்ளூரக் கைகோர்த்துக் குழிபறிக்கும்.

பாத்திரத்தின் இருப்பை
பொய்யென்றவரெல்லாம்
பூ வாடும் கணத்துள்
போய்ச்சேர்ந்தார்.

பாத்திரம் வளரும்
யுகங்களாய், மன்வந்த்ரங்களாய்
பலப்பல பெயரோடும்
பலப்பல பசியோடும்..
பல்லாயிரம் வயிற்றோடும்.
மகோதர மகோன்னதமாய்.

புழுவென வளையும் நெளியும்
மண்டியிடும், கதறும், சீறும்
அறச்சீற்றம் மட்டிலும்
அன்றுமில்லை, இன்றுமில்லை.

பல்லாங்குழியும், பாண்டியும்
தாயமும் லகுவாய் ஆடிக்
கரையேறும் திருப்படிகள் கடந்து
ஏதோ ஒன்றைக் கோஷித்தபடி!.

ஔவைக்கோ அம்னீஷியா
என் சொல்வாள் இன்று?
பல்லாயிரம் வயிற்றுப்
பாத்திரம்,பசிக்கக்கண்டு.!. .

No comments:

Post a Comment