Wednesday, 14 May 2014

சாவை மறுத்து சூப்பர்சானிக் அலைதலில்

பரவித் திரியும்
 தும்பிப் பூச்சிகளின்
 வானவில் விரியும்
 சிறகைப் பிய்க்கும்
 மனம் உனது?
அறிவாயா நீ?

வீங்கிய உதடுகள்
 கிழியக் கத்தல் ஏன்?
எவர் மீது கோபம்
 சிரைகளில் புழு நெளிய
சபித்தல் ஏன்?

முதல் தகவல் அறிக்கை
 மையழிந்து போக
 கையூட்டுத் தரவும்
 படுக்கையை விற்றபின்
 களவு போனதாய்க்
 கதைக்கவும் சமர்த்து நீ!

சுய மோக சஞ்சரிப்பில்
 மிதந்தபடி எப்போதும்!
மற்றவன் உனக்குக்
 காளான் குடைதான்!

வேக வலம் வரும்
 ந்யூட்ரான் அனுப்பி
 எரியுமிழ்ந்து சாய்த்துவிட
 எதிர்படுபவனைக் கொல்ல
 சதா மனதில் இரைச்சல்!

சாவை மறுத்து
 சூப்பர்சானிக் அலைதலில்
 அசுவத்தாமனை மிஞ்சிவிட
 ஆசைகள் உனக்கு!

நேற்ரைய கனவில்
 முளைத்த கொம்புடன்
 முட்டி முட்டிச் சாய்க்கிறாய்
 இல்லாத எதிரியை

 நீண்டு மெலிந்த
 டாலி ஓவியக் காலோடு
 துரத்துகிறாய் அவனை

 நீ ஓடித் தொடத் துடிக்கும்
 மாயக் கம்பம் மேலும் நகர
 ஓட்ட முடிவின்
 விசிலொலிகள் கேட்காமல்
 துவண்டு போகிறாய்!

உனக்கு பயம்
 உன்னைக் கண்டுதான்!

No comments:

Post a Comment