Tuesday, 21 January 2014


சைதாப்பேட்டை மனவளக்கலை தவ மையத்தில், பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஹோமியோபதி அறிவியல் குறித்த அறிமுக விளக்க வகுப்பு எடுக்க நான் போனபோது பல துயரர்களின் நட்பு கிடைத்தது.  இந்த ஐந்தாறு வருடங்களில் அவர்கள் அனைவரும் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். மைக்ரைன் தலைவலி, காலில் எக்ஸீமா, தோல் நிற மாற்றம், குழந்தைகள் சுவாசப் பாதை தொற்றுகள், ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் என பல நோய்கள் முற்றிலுமாகத் தீர்ந்திருக்கின்றன.

திருமதி கல்யாணி ஸ்ரீநிவாசன் அப்படி அறிமுகமான துயரர்தான்.  அதிகம் பேச மாட்டார். மன இறுக்கம் அதிகம்,  மனம் எளிதில் தளர்ச்சி கொள்ளாது. அவரது வலது , இடது கை விரல்களில் ஆழமான வெடிப்புகள் காணப்படுகின்றன.  புண்ணாகி நீர்க்கசிவு தென்படுகிறது.  45 வயது  கருப்பையில் 4 செ.மீ அளவுக்குக் கட்டியும், சில ஸீட்லிங் ஃபைப்ராய்ட்ஸும் இருப்பதாக ஸ்கான் ரிப்போர்ட் காட்டுகிறது. அறுவை சிகிச்சைக்குத் தப்பி ஹோமியோவுக்கு வந்திருக்கிறார். 

நன்றாகத் தண்ணீர் தாகம் இருக்கிறதா?

ம்.  சில்லுன்னு பிடிக்கும்

மாத விடாய் பற்றிச்சொல்லுங்கள்

22, 23 நாட்களுக்கொரு முறை வந்துடும். வயத்து வலியைவிட  முதுகு வலி அதிகமிருக்கும். 4 அல்லது 5 நாட்களுக்குப் படும்.

வெள்ளைபடுகிறதா?

ஆமாம், தூரமாவதற்கு முன்பே ஆரம்பித்து விடுகிறது. அரிப்பும் இருக்கும்

கோபம் அதிகம் வருமா?

சிரிப்பு முகத்தில் வந்து போகிறது.  எங்க வீட்டுக்காரர் பன்றதுக்கு அவரிடம் தான்  அதிகம் எரிச்சல் படுவேன்.

பிள்ளைகள்?

இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தது எம்.பீ.பீ.எஸ் முதலாமாண்டு. இரண்டாவது இப்பொதுதான் 11ம் வகுப்பு படிக்குது.  பிள்ளைகளிடம் ஒன்றும் ப்ரச்சினை இல்லை.

உங்க ஹஸ்பெண்ட் கிட்ட ஏன் கோபப்படுறீங்க?

கொஞ்சம் தயங்குகிறார்.  பின் சுதாரித்துக் கொண்டு, தொடர்கிறார்.  குடும்பப் பொறுப்பே கிடயாது.  கார்ப்பரேசன் காண்ட்ராக்டர்.  நல்ல வருமானம் இருந்தாலும், பொறுப்பில்ல.  ஓயாம வெளியூர் போயிடுவாரு,  சினேகிதம் சரியில்ல.  என்னடா வயசு வந்த ரெண்டு பொட்டப் பசங்க இருக்கேன்னு கவல இல்ல.  அவரு அன்னாரு இதுக்கு நேர் மாதிரி  ஒரு பெரிய வீட்டில் நாங்க எல்லாரும் ஒன்னாத்தாம் குடியிருக்கோம்.  அவருக்கு பொறுப்பு ஜாஸ்தி.  ஒரே பொண்ணு பீ.இ படிக்குது.  அவரு இப்பவே அதுக்கு நகை எல்லாம் சேத்துட்டாரு.  இவரு பாதி வருமானம் சினேகிதங்களோட குடிக்கிறதுலேயே போயிடுது.  எரிச்சல் வராம எப்படி இருக்க முடியும்.

கொஞ்சம் இறுக்கம் தளர்கிறது.  மனம் நெகிழ்ந்து, கண்களில் சோகம் படிகிறது. கூட்டுக் குடும்பத்துல இவரால தகராறு வருது.  நான் யார் கிட்டேயும் பேசுறதில்ல,  ஒதுங்கிட்டேன்.  ஏதோ பிள்ளைங்ககிட்டே மட்டும் பேசுறேன். வீட்டுல வேலை செய்யக்கூட இஷ்டமில்ல.  ரூமை சாத்திக்கிட்டு பொண்ணுங்க வர்ற வரைக்கும் உக்காந்திருப்பேன்.

கை வெடிப்பு எவ்வளவு நாளா இருக்கு?

மூனு வருஷமா இருக்கு.  டாக்டர் தம்பையாகிட்ட காம்பிச்சோம்.  ஆயிண்ட்மெண்ட் போட்டா போயிடுது.  ஆன மறுபடியும் வெடிக்குது.

எரிச்சல் இருக்கா?

இருக்கு

கோபம் வந்தா கத்துவீங்களா ? இல்ல சீக்கிரம் அழுதுடுவீங்களா?

கத்துவேன்.  இப்பப்போ, அழனும்னு தோனுது.  போய் கதவைச் சாத்திக்கிட்டு ஓன்னு அழுவேன்  கொஞ்ச நேரத்துல மனசு லேசாயிடுது.

கேள்விகளை நிறுத்திவிட்டு ரெப்பர்டரியைப் புரட்டுகிறேன்,.

செபியா 30 காலை மாலை இரண்டு வேளை.

ஆரம் மூரியாட்டிக்கம் நேட்ரோ நேட்டம் 6 எக்ஸ்  20 கிராம்  காலை மாலை 2 மாத்திரைகள் சாப்பிட்டபின். 

4 மாதங்களுக்கு மருந்தில் மாற்றமில்லை.

கை விரல்கள் வெடிப்பின்றி சொரசொரப்பும் குறைந்து உள்ளது.  செபியா 200 வாரம் ஒருமுறை 4 உருண்டைகள்,  6 மாதங்கள் கழித்து ஸ்கான் ரிப்பீட் செய்கிறோம்.  கருப்பைக் கட்டி கரைந்திருந்தது. நல்ல வேளையாக கருப்பைக் கழுத்துப் பகுதியில் இருந்த ஸீட்லிங் ஃபைப்ராய்ட்ஸும் கரைந்துவிட்டன.  முன்போல் அடிக்கடி சிறு நீர் கழிக்கும் தூண்டலும் இல்லை.  மருந்தை நிறுத்திவிட்டேன்.

செபியா மீன் மருந்து. அற்புதமாகச் செயல்படும்.  மனக் குறிகள் முக்கியம்.  கருப்பைக் கட்டிகளும், கை வெடிப்பும் ஒரு சேர அம்பேல்.  

   

1 comment:

  1. உங்கள் வலைத் தடம் கண்டு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. தாமதமான வருகை என்றாலும், தமிழுக்குப் புதிய மகுடம் உங்களது முயற்சி. வாழ்த்துகள்.

    எஸ்.எம்.ஏ. ராம்.

    ReplyDelete