Wednesday, 15 January 2014

வடு- சுமதி ரூபன் சிறு கதையிலிருந்து- மறைந்த ஹோமியோ மேதை ஆனந்தா ஸரீன் வரை....

””வடு”” சுமதி ரூபனின் சிறுகதையிலிருந்து.

”” ச்சீ. நாசமாய்ப் போக. என் தலையில் இடி விழ… அப்பவே அம்மாவிடம் சொல்லி லண்டன் மாமாவை உண்டு இல்லை எண்டு பண்ணியிருக்க வேணும்.”” மல்லிகா வெம்மினாள். தான் சொல்லியிருந்தாலும் அம்மா நம்பியிருப்பாளா? கைச் செலவுக்கும் கறி உப்புக்கும் அவள் அடிக்கடி அவர்கள் வீட்டை நம்பி இருப்பவள். அம்மாவுக்கு எப்போதுமே லண்டன் மாமா மேல் ஒரு வெட்கம். முகம் பார்த்துக் கதைக்க மாட்டாள். ஒருவேளை அம்மாவுக்கும் அவருக்கும்… ச்சீ… இருக்காது.

எனக்கும் பிடித்திருந்ததா? இல்லை, பயத்தால் எழுந்த சம்மதமா? எட்டு வயதில் உணர்ச்சிகளுக்கு உடல் ஏங்குமா?பல வருடங்களாக பலவிதமாக சிந்தித்தாகிவிட்டது. பதில் கிடைக்கவில்லை கூச்சம் விட்டுப் பிறருடன் அலசவும் பிடிக்கவில்லை. எனக்கு மட்டுமா இந்த நிலை? இல்லாவிட்டால் பல பெண்களுக்கும் இருக்குமா இப்படிப்பட்ட அனுபவங்கள்? பார்க்கும் இடங்களெல்லாம் பிண்டங்கள் பிணைப்பதற்கு அலைவதாக அவளுக்குப் பட்டது. தன் சாபம், வேதனை தான் லண்டன் மாமா ரோட்டில் சிதைந்துபோகக் காரணமோ?

அண்ணி , அஞ்சலி ரெடியா? கேட்டபடியே நேசன் வந்தான். இவனுக்கென்ன அஞ்சலி மேல் இவ்வளவு அக்கறை. கார் வைத்திருப்பதால் மகளை அலுங்காமல் குலுங்காமல் பாடசாலையில் விட்டுவரும் பொறுப்பை நேசனிடம் ஒப்படைந்திருந்தார் அவன் அண்ணா. அலுங்காமல் குலுங்காமல் விட்டு வருகிறானா அல்லது குலுக்கி எடுக்கிறானா என் செல்லத்தை. மல்லிகா பல்லு நெருமினாள்.

பல பொறுப்புகளை நேசன் முகம் தூக்காமல் ஓடியோடிச் செய்கிறான் நன்றிக்கடனா? இல்லாவிட்டால்… மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

அறியாத வயதில் தனக்கு நேர்ந்த வன்முறை தன் மகள் அஞ்சலிக்கு நேரக்கூடாது என பதை பதைக்கும் தாயுள்ளம். நெருங்கிய உறவுகளில் கூட சந்தேகம். ஒரு நிமிடத்திற்கு அடுத்த நிமிடம் மனமாற்றம். ஒரேபொருள் குறித்த சிந்தனை. அச்சிந்தந்தனையிலிருந்து விடுபடமுடியாமை, பதட்டமும் பயமும் ஒருசேர மல்லிகாவை வாட்டி வதைக்கிறது. Anxiety neurosis, panic disorder. நவீன வாழ்வின் பிரச்சினை.

சுமதி ரூபன் மல்லிகா பாத்திரத்தை ஒரு வடு தாங்கியாய் உருவாக்கியுள்ளார். எப்போதும் தனக்குள்ளே குமுறிக்கொண்டு. குற்றவுணர்வைச் சுமந்தபடி பிளவுண்ட மனத்தோடு….

ஆனந்தாஸரீன் ஹோமியோபதி மருத்துவர்,- பெண் மருத்துவர். பெண் மனத்தின் பிரத்தியோகப் ப்ரச்சினைகளைத், தனது சிகிச்சைகளில் அலசி ஆராய்ந்து மருந்தைத் தெரிவு செய்பவர். மகப்பேறு மருத்துவத்தில் பிரசவ கால சிகிச்சைகளில் ஹோமியோ மருந்துகளை மட்டும் பயன்படுத்தி புதிய விழிப்புணர்வைத் தோற்றுவித்தவர்.

மல்லிகா போன்று துன்புறுத்தப்பட்ட இருபது பெண்களுக்கு சிகிச்சையளித்தவர். கோபம் எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களிடம் காணப்பட்டது. அக்கோபத்தினடியில் எப்போதும் துக்கம். இறுக்கமான அற நெறிப்பார்வை, சற்றும் விலகலை அனுமதிக்காத மனம். பொறுமையின்மை, உணர்வுகளை சதா விழுங்கியபடியே இவர்கள் ஜீவிதம். இவர்கள் எல்லோரும் சிறு குழந்தையாய் இருக்கும் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள்.

ஆனாந்தா இவர்கள் அனைவருக்குமே ஒற்றை மருந்தையே தெரிவு செய்தார். காலி ஃபெர்ரோ சயனேட்டம். விட்டு விட்டுக் கொடுத்து வந்தார். சிகிச்சைக்குப்பின் எல்லோரிடமும் நல்ல மன மாற்றம் தென்பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார். சுயக் கோபங்களை மற்றவர்கள் மீது திருப்புவது குறைந்து விட்டிருக்கிறது. பதட்டம் இல்லை. அடுத்தவர்களை ஆட்டிப் படைப்பதும் இல்லை.

சுமதி ரூபனின் ”மல்லிகா” ஒரு காலி ஃபெர்ரோ சயனேட்டம் ஆளுமை.
ஆனந்தா ஸரீன் ஒரு சாலை விபத்தில் மரணித்து, ஆண்டுகள் ஓடிவிட்டாலும், பெண்ணியக் கண்ணோட்டத்தோடும், புரிதலோடும் நம்மை மருந்துகளை உணரச் செய்தவர்.


ஆனந்தாஸரீன் 1946-2008.

No comments:

Post a Comment