Wednesday, 15 January 2014

வெற்றிக் குதிரை காஸ்டிக்கம்

வெற்றிக் குதிரை காஸ்ட்டிக்கம்.

பல மாதங்களுக்குப் பிறகு நண்பர் ஜெயக்குமார் அலுவலகம் வந்திருந்தார். அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைப் பொறியாளராக ஓய்வு பெற்றதும் ஓய்வூதியப் பயன்கள் அனைத்தும் ஒரே மாதத்தில் எங்கள் அலுவலகத்திலிருந்து அவருக்குக் கிடைக்கப் பெற்றது. பார்க்க வந்தவர் என்னிடம் ஒரு உதவி கேட்டார். அவரோடு மடிப்பாக்கம் வரை வந்து அவரது நண்பர் ஒருவருக்கு மருந்து தர இயலுமா என வினவினார். அன்று மாலையே மடிப்பாக்கம் சென்றேன்.

அவரது நண்பர் 68 வயதான பெரியவர். சற்றே குள்ளமானவர். கணேசன் என்று பெயர். தலைமையகத்தில் ஸெக்ஷன் ஆஃபீஸராய் இருந்து ஓய்வு பெற்றவர். ஒரு நாள் சைதாப்பேட்டையிலிருந்து பஸ்ஸில் மடிப்பாக்கம் செல்லும்போது, ஒரு பள்ளத்தில் பஸ் ஏறி இறங்கியதிலிருந்து நடு முதுகில் கடுமையான வலி. உடனடி மருந்து மாத்திரைகளுக்கு வலி குறையவில்லை. லோக்கல் மருத்துவர், பின்னால். ஆர்த்தோ, ந்யூராலஜிஸ்ட் , பிரபல 5 ஸ்டார் மருத்துவமணை என மருத்துவ சிகிச்சை முன்னேறியதாம்.

அவரது போதாத காலம் முதுகு முள்ளெலும்புகள் பிதுக்கம் கண்டுவிட்டன. இடுப்புக்குக் கீழே மரமரப்பு. நாளாக நாளாக சிறுநீர் கழிப்பதில் சிரமம். ஸர்ஜிக்கல் ஒபினியன் கேட்டதில் லேமினேட்டமி ஸர்ஜரி செய்யவேண்டும் என்று சொல்லிவிட சர்ஜரியும் நடந்து முடிந்து விட்டது. முதுகு வலி நன்கு குறைந்து விட்டது. ஆனல் எதிர்பாராத விதமாக, சிறு நீர் கழிக்கவே இயலவில்லை. பெரிய கத்தீட்டர் மாட்டி விட்டார்கள். சிறு நீர் ப்ளாஸ்டிக் பையில் சேகரமாகியது. படுத்தே கிடக்கும் நிலை. கத்தீட்டர் இருப்பதால் எங்கும் போக முடியாது. பத்து நாட்களுக்குப்பின் டிஸ்சார்ஜும் செய்துவிட்டனர். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பிரச்சினை சரியாகும் என நம்பிக்கை சொல்லி அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது; உபாதை தீரவில்லை பதினைந்து நாட்களுக்கொரு முறை கத்தீட்டர் மாற்றினார்கள். வெளி உலகம் என்பது அவரைப் பொறுத்தவரை இல்லாமலேயே போய்விட்டது.

அவரை முறையாகப் பரிசோதித்தேன். வழமையான துயரர் சரிதை இங்கு தேவை இல்லை எனப் பட்டது. டிஸ்சார்ஜ் ஸம்மரி முழுதும் படித்தேன். அறுவை சிகிச்சைக்குப்பின் சிறு நீர் மண்டல நரம்புகள் சரியாக ஒத்துழைக்க வில்லை. டெட்ரூஸர் தசைகள் சுருங்கவில்லை. ஒரு ஸ்டிமுலஸ் தேவை . தூண்டப்பட்டால் எல்லா இயக்கங்களும் ஒருங்கிணையும்; தெரிவு செய்யும் மருந்து அத்தூண்டலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

இதற்கு உகந்த ரெபர்டரி, போயரிக் ரெபர்டரி தான்.
புரட்டுகிறேன். சரியான குறிமொழியைத் தெரிவு செய்கிறேன்.
Paralysis in single parts,--------------causti
 Retention of urine, after surgery----causti
 Retention of urine after emotional conflicts----staphi
உறுப்பு சார்ந்த உபாதைகளுக்கு மருந்து தெரிவு செய்ய, போயரிக் எப்போது துணைபுரிவார். காஸ்டிகம் எழுதித் தருகிறேன். 30 ஆம் வீரியம்; ஒரு நாளைக்கு மூன்று வேளை. ஒரு வேளைக்கு 4 உருண்டைகள். 1 மாதம். சாப்பிடுமுன் உருண்டைகள் போட்டுக் கொள்ள வேண்டும். காஸ்டிகத்திற்கு காஃபீ ஒத்துக் கொள்ளவே ஒத்துக்கொள்ளாது, எனவே 1 மாதம் காஃபீ கட். கணேசன் ஒப்புக் கொண்டார்.

12 ஆம் நாள் கணேசன் போன் செய்தார்- ஸார், தானாகவே சிறு நீர் கழிக்கனும்னு தோனுது, கத்தீட்டரை எடுத்துடவா? குரலில் சந்தோஷம்.

எடுத்துடுங்க- தைரியமா செய்யுங்க, மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சி, இனி உங்க முயற்சி ரொம்ப முக்கியம். சரீன்னார்.

உங்க கை ராசி என்று கூறினார்.

ஹோமியோபதி ராசி என்று பதில் கூறினேன். காஸ்டிக்கம் ஆசான் ஹானெமனால் மெய்ப்பிக்கப்பட்ட மருந்து. அவர், ரஸவாத முறையில் தயார் செய்தது. இன்று வரை அதன் வேதியல் ஃபார்முலா யாருக்கும் தெரியாது. ஏதோ பொட்டாஷியம் உப்பு என்று மட்டும் தெரியும். அமெரிக்க போயரிக் 1912ல் எழுதியது 2000லும் சென்னையில் வேலை செய்யும்.
Retention of urine after surgery, paralysis in single parts
மறக்க முடியாத குறிமொழிகள்.

ஒரு வாரம் கழித்து நண்பர் ஜெயக்குமார் போனில் பேசினார். பாஸ், இப்போ சிறு நீர் ஒரேடியாப் போகுது. 10 நிமிஷத்திற்கொருக்கா போறாரு என்ன செய்யலாம்? தூக்கம் டிஸ்டர்ப் ஆகுது பாஸ்.

காஸ்டிகத்தின் துணை—நட்பு மருந்து பெட்ரோசெலினம் 30 மூன்று வேளை 15 நாட்கள். அடிக்கடி சிறு நீர் கழிக்கும் உபாதை அதில் உண்டு, மேலும், காஸ்டிக்கம்- பெட்ரோசெலினம்- கோலோசிந்த், அமெரிக்க ஹோமியோ மேதை ஜேம்ஸ் டெய்லர் கெண்ட்டின் மூன்று தொடர் மருந்துகள்.(Kent’s trio) ஒன்றில் ஆரம்பித்தால் அடுத்ததன் குறிகள் தானாய் வரும்-அடுத்த மருந்தைக் கேட்கும்.

மிகுந்த பாராட்டுக்கள் குவிந்தன. சிறு நீர் சீராகப் போகிறது. கணேசன் சார்ந்த உறவினர் வட்டத்தில் ஹோமியோபதி குறித்த நல்ல விழிப்புணர்வு.

எனக்கு என்றும் மறக்க முடியாத துயரர் சரிதை.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். அநீதி கண்டு பொங்கும் புரட்சிக்கார ஆளுமைக்கான மருந்து காஸ்டிக்கம். ஹிப்பிகளுக்கும், சிறுவட்ட கலகக் காரர்களுக்கும் மெடோர்ரினம். அடுத்தவனுக்காக இரக்கம் கொள்பவருக்கு பாஸ்பரஸ். காஸ்டிக்கமும், பாஸ்பரஸும் எதிரிகள், அடுத்தடுத்து கொடுக்கக் கூடாது. வாய்ப்பாடுகள் போல அடிப்படைகள் மனதில் பதிகின்றன. —  

No comments:

Post a Comment