Wednesday, 15 January 2014

நோய்மை குறித்து- அக்கறையுடன் எஸ். ராமகிருஷ்ணன்

நோய்மை குறித்து அக்கறையுடன் தனது படைப்புகளில் அதிகம் பதிந்தவர் திரு. எஸ். ராமகிருஷ்ணன். துயில் நாவல் முழுக்க நோய்மை பேசுபொருளாகிறது.
கொண்டலு அக்காவின் பாத்திரம் ஒரு உளவியல் நிபுணர் சாயலில் படைக்கப்பட்டுள்ளது. எட்டூர் மண்டபத்தில் வந்து தங்கும் எண்ணற்ற துயரர்களுக்கு கொண்டலு அக்கா நிஜமான வாஞ்சையோடு, அவர்களோடு பேசி, அவர்களது அந்தரங்க வலியைத்தொட்டு ஆறுதல் படுத்துகிறார்.
எஸ்.ரா எழுதுகிறார் -”நோய்ம்மையின் விசித்திரங்களை நாம் கேட்டும் புரிந்தும் பகிர்ந்தும் கொள்ளும்போது தான் அதை நிஜமாக எதிர்கொள்ளவும் கடந்து போகவும் முடியும். மருந்தால் நோயை எதிர்கொள்வதற்கு முன்பாக, நாம் நோயின் ஆதார வேர்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.”
 ”நோயுறுகையில் மனம் இடைவிடாமல் எதை எதையோ நினைத்துக்கொண்டேயிருக்கிறது. தறியில் ஓடும் ஓடத்தைப்போல மனது சதா பயத்தை நெசவு நெய்ய ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நோயும் ஒரு விசித்திரம். அது எப்படி உருவானது என்பதை யாருமே அறிந்து கொள்வதேயில்லை.”.
”நல்ல மருத்துவன் நோயாளியை தோழனைப்போல நடத்துவார்.”
எஸ்.ரா. வின் எழுத்து, கார்ல் ரோஜர்ஸ் எனும் உளவியல் சிகிச்சை நிபுணரை நினைவு கூற வைக்கிறது. Empathic understanding, unconditional positive regard towards patient and congruence ஆகிய மூன்றுமே ஒரு சிறந்த உளவியல் ஆலோசகர் பின்பற்ற வேண்டிய நியதிகளாகும். என ரோஜர்ஸ் குறிப்பிடுவார்.
கொண்டலு அக்கா இதையே செய்கிறார். சீயன்னா என்கிற ஒரு துயரரின் மூச்சு முட்டல் நோய்க்கு ஆலோசனை அளிக்க வேண்டி அவரோடு வாஞ்சையோடு பேசுகிறார். சீயன்னாவின் நோய் ஆரம்பத்திலிருந்து வரும் கனவினைப் புரிந்துகொள்ள முயல்கிறார். அந்தக் கனவில்தான் நோய் தீர்வுக்கான திறவிகோல் இருக்கிறது. பர்மாவிலிருந்து தமிழகம் வந்த பின்னர் சீயன்னாவின் கனவில் ஒரு திருடன் தோன்றி எதையோ யாசிக்கிறான், பேசுவதேயில்லை, நாளாக, நாளாக, திருடனின், மனவி, குழந்தைகள். அவனது பெற்றோர் என இறந்துவிட்ட அனைவரும் சீயன்னாவின் படுக்கையை சூழ்ந்துவிட, சீயன்னாவிற்கு மூச்சு முட்ட ஆரம்பிக்கிறது.
பேச்சைத் தவிர்த்து அவர்கள் யாசிப்பது என்ன? கொண்டலு அக்கா சீயன்னாவின், பர்மிய வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறாள். சீயன்னாவின் நண்பன் சூயி, அவனது மனைவி மியா இருவரும் சீயன்னாவின் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
சீயன்னாவிற்கு ஒரு திருமணமான பெண்ணோடு, அவனது கணவனுக்குத்தெரியாமல், உறவு ஏறபடுகிறது. அவளுக்கு சீயன்னாவால் ஒரு குழந்தையும் பிறக்கிறது. பின்னால் இறந்துவிடுகிறது. அக்குழந்தைக்கு அவனே கணவன் என அறிவிக்கும்படி அப்பெண் வேண்ட சீயன்னா கோழையாய் மறுக்க, அப்பெண் அவனைவிட்டு விலகுகிறாள். ஒரு இரவு, அவளை ஆறுதல் படுத்த, அவள் வீட்டிற்கு சீயன்னா வர, அவளது ஊர் நண்பன், ஒரு திருடன் பார்த்துவிடுகிறான்.
பர்மாவில் போர் மூள நோய்வாய்ப்பட்டு, சீயன்னாவின் மனைவியும், சூயியும் இறந்து போகிறார்கள். மியா கிராமத்திற்கே போய்விடுறாள். சீயன்னா தாயகம் திரும்புகிறான். கொண்டலு அக்காவிற்கு, சீயன்னாவின் குற்றவுணர்வு புரிகிறது. அவனோடு உறவு கொண்ட பெண், நண்பனின் மனைவி மியாதான் என்பதை சீயன்னாவிடம் சிரமமின்றி ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறாள். மியாவுக்காகவே, அவளது ஊர் நண்பன் , சீயன்னாவின் கனவில் தன் உறவுகளோடு தோன்றி, யாசிக்கிரான். மியா கேட்டதையே அவர்கள் கேட்கிறார்கள். இறந்துபோன குழந்தை தன் குழந்தைதான் என சீயன்னா அறிவிக்க வேண்டும் என அக்கா புரிய வைக்கிறாள்; துக்கம் தாளாமல் சீயன்னா அழுகிறான். அவர்கள் வேண்டலை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். அக்குழந்தைக்குப் பெயரிட்டு அதன் பெயரில் தர்மங்கள் தொடர்ந்து செய்துவர திட்டமிடுகிறான்.
நோய் என்பது வெறும் அறிகுறி மட்டிலுமே! அதன் வேர் எங்கோ தொலைவில் புதையுண்டிருக்கிறது என்கிறாள் கொண்டலு அக்கா.
சீயன்னாவின் பொருந்தாக் காதலும், காமமும், கனவில் திருடன் தோன்றுவதும், யாசிப்பதால் ஏற்படும், ஆழமான சோகமும், குற்றவுணர்வும்,
மூச்சு முட்டுவதும் , ரகசியங்களும், நோய்க்கான காரணம் புரிந்ததும், உடைவதும் , நீண்ட அழுகையும், ஹோமியோ மருத்துவ முறையில் நேட்ரம் மூர் எனும் மருந்தைக் குறிக்கிறது. ஹோமியோ இலக்கியங்களில் இதுபோன்ற துயரர் சரிதைகள் பரவலாய்க் கிடைக்கின்றன. கனவுகளின் சூட்சுமத்தைத்திறந்து, மருந்தைத்தெரிவு செய்வது ஹோமியோபதியின் முக்கிய அடிப்படையாகும்.னோயின் ஆணிவேரைக்காண்பதும் ஹோமியோபதியின் நோக்கமாகும்; இல்லையேல், சிகிச்சையில் தீர்வு கிட்டாது.
எஸ்.ரா தனது நூல்களின் முன்னுரைகளில், தனது சகோதரர் மருத்துவர் வெங்கடாசலத்திற்கு தவறாமல் நன்றி நவில்வது வழமையாகும். அவர் ஒரு மாற்று மருத்துவர். மாற்று மருத்துவம் எனும் இதழ் நடத்துபவருங்கூட. உளவியல் ஆலோசனைகள் குறித்தும், ஹோமியோ அடிப்படைகள் குறித்தும் ஆழமான புரிதல் எஸ்.ராவிற்கு சாத்தியப்பட்டிருக்கிறது.
கரிச்சான் குஞ்சுவிலிருந்து இன்றுவரை, பல நோய்கள் படைப்பிலக்கியங்களில் காணப்பட்டாலும், எஸ்.ரா.வே அதிகம் நோய்மை குறித்த புரிதலோடு எழுதுகிறார்.

No comments:

Post a Comment