Wednesday, 15 January 2014

கையில் ரென்ச்சோடு வந்த தேவ தூதன்

கையில் ரென்ச்சோடு வந்த தேவதூதன்.

1977ஆம் வருடம் ஃபெப்ரவரி மாதம். எனக்கு மஞ்சள் காமாலை முற்றிவிட்டது என்று சொன்னார்கள். கேசவன் சித்தப்பா வந்து பார்த்துவிட்டு தன்னுடனேயே அழைத்துக்கொண்டு போனார். மாலை டாக்டர் சீ.ஏ.கே வீட்டிற்குப் போய் பார்த்தோம்.
திட்டினார்.

””படிச்சவங்களா நீங்க? நாளக் காலையில வார்டு நம்பர் ஃபோர்.. வந்து அட்மிட் ஆகனும். கேசவா.. இனி வீட்டில வைச்சுக்கக் கூடாது ஸீரம் பிளிரூபின் 22 ஐத் தாண்டியாச்சு””
. உள்ளுக்குப் போய் ஃப்ரிட்ஜ்லிருந்து ஒரு ஆரஞ்சுப் பழம் எடுத்து வந்து கொடுத்தார். இதைத் தவிர நான் சொல்றவரைக்கும் ஏதும் சாப்பிடக் கூடாது.

மறு நாள் கேசவன் சித்தப்பா அட்மிஷன் போட்டுவிட்டார். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மணையில் பயோ கெமிஸ்ட்ரி துறையில் ட்யூட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பாவின் தோழர். அப்படியே குடும்பத்தோடு ஒட்டிக்கொண்டார். 1973ல் அப்பா இறந்த பிறகும் அடிக்கடி எங்களை வந்து பார்த்துப் போவார். ஆஸ்பத்திரியில் நல்ல பேர், செல்வாக்கு அவருக்கு.

4ஆம் வார்டு 16 படுக்கைகள். ஸிஸ்டர் வசந்தா. தாட்டீகமான உடல் வாகு. எல்லாம் ஒழுங்காய் இருக்கனும்.கண்டிப்பு அதிகம். வார்டிலேயே நான் தான் குறைந்த வயது. வா போ தான் எல்லோரும். தினமும் காலை படுக்கை தட்டிப்போட்டு துப்புரவு செய்வார்கள். வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடுவார்கள். காலையில் நியோமைசின் 250 எம்.ஜி ஒரு காப்ஸ்யூல் இரவு ஒன்று. 11 மணிக்கு க்ளுக்கோஸ் ஐ.வீ ஆரம்பிப்பார்கள். 3 பைண்ட் தொடர்ச்சியாக. எழுந்திருக்க முடியாது. அது முடிந்தபின் ஃப்ரீ. ரெஸ்ட் தான். சாப்பாடே கிடையாது அப்படியே படுத்திருக்க வேண்டியதுதான். துணைக்கு தம்பி வாசு கூட. மதியம் கரந்தைக்கு போய் பெரியம்மா வீட்டில் சாப்பிட்டு வருவான் ஒரு மணிக்குப் போனால் 4 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருவான். இரவு 10 மணிக்குப் புறப்பட்டுப்போவான். மறுபடி காலை 10 மணிக்கு வருவான். ஆஸ்பிட்டல் வேடிக்கை , அரட்டைகளில் பொழுது ஓடிவிடும்.

டாக்டர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

””எப்படியும் 2 மாதங்கள் ஆகும் சரியாக. அதுவரை பொறுமையாய் என்னோட இரு.””
இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. நான் வார்டின் செல்லப்பிள்ளையாகி விட்டேன். எனக்கு உதட்டைச் சுற்றி ஹெர்பிஸ் தொற்றிவிட்டது. ஜென்ஷன் வயலெட் பெய்ண்ட் பூசி விட்டார்கள். டாக்டருக்கு ஒரே கோபம்,.

””எப்படி வந்தது இன்ஃபெக்ஷன், ஆஸ்பிடலில் இருக்கையில்? ஸிஸ்டர் தலையை தாழ்த்திக் கொண்டார். நீட்னஸ் போதாது. பேஷண்ட் ஐ ஜாக்கிரதையா, சுத்தமா இருக்காங்களான்னு பாருங்க. இம்ம்யூனிட்டி குறைச்சலா இருக்கறச்சே ஜாக்கிரதையா பாத்துக்கனும். இனி இந்த வார்டில் இப்படி நடக்கக் கூடாது.””

மறு நாள் வழக்கம் போல 11 மணிக்கு ட்ரிப்ஸ் ஆரம்பித்தார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தூக்கிப் போடுது, உதறுது. கையெல்லாம் நடுக்குது. ரைகர் வந்துடுச்சின்னு சொல்லி ஸிஸ்டர் பீரோவைத் திறந்து சிகப்பு கம்பளி எடுத்து போர்த்திவிட்டார். வார்டில் எல்லோரும் என்னையே வேடிக்கை பார்ப்பது போல் இருந்தது. 12 மணி வாக்கில் ஹவுஸ் சர்ஜன் ராமசாமி விட்டமின் பீ இஞ்செக்ஷன் போடவந்தார்.

”” டாக்டர் வேண்டாம், நேத்துப் பொட்டதே இன்னும் கடுக்குது.””
 ””ஆயில் இஞ்செக்ஷன் அப்படித்தான் இருக்கும். பொறுத்துக்கனும், இல்லாட்டி உடம்பு தேறவே தேறாது”” ன்னு சொல்லிக்கிட்டே போட்டு முடிச்சிட்டார். உடம்பு ரைகரில் இன்னும் ஆடிக் கொண்டுதான் இருந்தது. 10 நிமிடங்களில் குமட்ட ஆரம்பித்தது. பயங்கரக் குமட்டல், ஓங்கரிப்பு. ட்ரிப்ஸை நிறுத்திவிட்டார் ஸிஸ்டர். டாக்டர் ராமசாமி வந்தார்.

””என்ன ஆச்சு இன்னிக்கு,? தொந்தரவு ஜாஸ்தியா இருக்கு. சும்மா பயப்படாதீங்க …. ஸ்டெமடில் இஞ்செக்க்ஷன் குடுக்கிறேன் வாந்தி வராது”” ன்னு சொல்லிக்கிட்டே ஊசி போட்டுவிட்டார். வாந்தி தணிந்தது. அவரும் புறப்பட்டுப் போய்விட்டார். ஸிஸ்டர் யாரையோ பேஷண்டைக் கூட்டிக்கிட்டு டெஸ்ட் எடுக்கப் போனார். 2ஆம் வருஷம் ஸ்டூடெண்ட் நர்ஸ் இன்சார்ஜ். ப்ளு பேட்ஜ் அடையாளம்.

அப்போதுதான் என் வாழ்க்கையில் முக்கியமான சம்பவம் நடந்தது. திடீரென்று மூச்சுவுட முடியல. நெஞ்சை அடைக்குது. நான் கத்துறேன். எல்லோரும் என்கிட்டெ ஓடி வர்ரது தெரியுது. பார்வை மங்குது. கேசவன் சித்தப்பாவைக் கூப்பிடுங்கன்னு கத்தறேன். ஸ்ட்டுடெண்ட் நர்ஸுக்கு கையும் ஓடல, காலும் ஓடல அவசரத்துக்கு என்ன செய்யனும்னு தெரியல. அழ ஆரம்பிக்குது.

பக்கத்து பெட் மோஹனைப்ப் பார்க்க ஆஸ்பிடல் ஸ்டாஃப் கையில் ரென்ச்சோடு வந்திருக்கார். இரும்புக் கட்டில் ரிப்பேர் பண்ண வந்திருக்கார். நான் கஷ்டப் படுறதப் பாத்துட்டு அவரு அங்கேயும் இங்கேயும் ஓடுரார். அடுத்த விநாடி ஆக்ஸிஜன் சிலிண்டர் தரதரன்னு இழுத்துக்கிட்டு வர சத்தம். என்னமோ செய்யிரார். என் மூக்கில் மெல்லிசா ஒரு ட்யூப் நுழக்கிறார் ப்ளாஸ்டர் போடுறதுதான் தெரிஞ்சுது. அப்புறம் எனக்கு நிகா இல்ல.

மறுபடி கண் விழிக்கும்போது மறு நாள் மாலைன்னு புரிஞ்சுது. டாக்டர் வாஞ்சிலிங்கம் வந்திருந்தார். முதல் நாள் அவசரத்துக்கு அவர்தான் ஓடிவந்து என்னை அட்டெண்ட் பண்ணினாராம்.

””அவன் எருமை மாட்டை ஒட்டிக்கிட்டு இதுவரைக்கும் வந்துட்டான். விரட்டியடிச்சிட்டோம். பயப்படாதீங்க ஒன்னுமில்ல உடம்பு கொஞ்சம் வீக் அவ்வளவுதான். தைரியமா இருங்க ஒங்க டாக்டர் வர்ற நேரம் அவரு இனிமே உங்களுக்கு சொல்லுவாரு””

சுற்றிலும் பார்க்கிறேன். தம்பி வாசு அழுதபடி நிற்கிறான் வார்டே என்னருகில். அழுகையை அடக்கிக்கொண்டு டாக்டருக்கு தாங்க்ஸ் சொல்ரேன்.
””எனக்கில்லெ இவருக்கு…….. இவருதான் ஜெட் வேகத்தில ஆக்ஸிஜன் கனெக்க்ஷன் குடுத்திருக்காரு…… இல்லாட்டி ஏதும் ஏடா கூடமா ஆயிருக்கும். இவருக்கு சொல்லுங்க.”” ஜெயக்குமார் அறிமுகம் ஆஸ்பிடல் மெக்கானிக், கையில் ரென்ச்சோடு வந்த தேவதூதன். கை கூப்பி அழுதுகொண்டே நன்றி சொல்ல முயற்சிக்கிறேன். பேச முடியவில்லை. எல்லாம் நின்றுபோய் மீண்டும் உயிர்த்திருக்கிறேன். அடுத்தவன் மேல் நேசமும் அக்கறையும் கொண்ட ஒரு மனிதனின் முயற்சியால். இறப்பது என்றால் என்னவென்று எனக்கும் புரிந்தது.
இப்போது 35 வருடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருக்கிறோம். இருவரும் வேலைமேல் மெட்ராஸ் வந்தோம். திருமணம், குடும்பம். எல்லாம் வந்தது அவர் கே எம் சீ எச்சில் மெக்கானிக்கல் எஞ்சினீயர் நான் நடுவநரசில் கணக்கு அதிகாரி. பின் சட்ட அதிகாரி. ஹோமியோபத். ஜெ! எனக்கு என்றைக்கும் உயிர் தந்த தேவதூதன் . கையில் ரென்ச்சோடு வந்த தேவதூதன்.

No comments:

Post a Comment