Wednesday, 15 January 2014

வெற்றுக்கரி-கார்போ வெஜ்- உறவுகளை உறுதிப்படுத்துகிறது

உறவுகள்.

4 ஆண்டுகளுக்கு முன்னர். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஹோமியோபதி விவாதம் நடைபெறுகிறது. தலைக்கு மேல் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட். வெப்பம் அதிகம் வீசுகிறது. ஆனால் பழகிப்போன ஒன்று, ஒவ்வொரு ஞாயிறு மதிய வேளையும் இதே கதைதான். அந்த இருபது பேர்களுக்கு வேறு வேலை கிடையாது. கொஞ்சம் ஹோமியோ பைத்தியங்கள். தவறாமல், மழையோ, வெய்யிலோ எதுவானாலும், அவர்களுக்கு சம்மதம், அங்கே கூடிவிடுவார்கள், சைபீரிய நாரைகள் ஜாதி, திசை அறிவார்கள், இலக்கும் உண்டு. ஹோமியோபதியை பரப்ப வேண்டும்.

நடுத்தர வயதிற்குக் குறைந்த வயது என்று சொல்லலாம். ஒரு ஆடவரும், பெண்மணியும் பள்ளிக்கு உள்ளே வருகின்றனர். ஏதோ தவறான அல்லது பொருத்தமில்லாத இடத்திற்கு வந்து விட்டது போல் உள் சிந்தனை. என் பெயரைச் சொல்லி பார்க்க வேண்டுமென்று சொல்லவும், நண்பர்கள் அழைத்து வந்து இருக்கையில் அமர வைக்கிறார்கள். இருக்கை என்றால் பெரிதாய் ஒரு வசதியும் இல்லை. பள்ளிச் சிறுவர்கள் அமரும் தரை பென்ச் மூன்று ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கியிருக்கும், அதன் மேல் தான் அமர வேண்டும்.

என் மேசையின் மேல், வெள்ளைத் தாள்கள் வைக்கப் பட்டிருக்கிறது. ரெபர்டரி இருக்கிறது. துயரர் சரிதை.கேட்டல் ஆரம்பம் என்று பொருள். வந்தவர் தயங்கித் தயங்கிப் பேசுகிறார். இரண்டு ஆண்டுகளாக அவரது இடது காலில் திட்டுத் திட்டாய் ரத்தக் களறியாய் பச்சைப் புண். வெளிர் சிவப்பில் ஊந்தண்ணீர் வடிகிறது; வேட்டியை சற்றே உயர்த்திக் காடுகிறார். நண்பர்கள் சந்ருவும், ஷண்முகமும் குறிப்புகள் எடுக்க ஆரம்பிக்கின்றனர். ரொம்ப ஸீரியஸாய் ஷெஷன் போகிறது. முட்டி வரை காலைப் பரிசோதிக்கிறார்கள். சிரைகள் நெடுகிலும் புடைத்துக் காணப் படுகின்றன. உதவி மருத்துவர்கள் புடை சூழ காலைப் பரிசோதித்து, குறிகளைக் கேள்விமேல் கேள்வி கேட்டு அவர்கள் எழுதிக்கொண்ட்டால் தான், நான் தலைமை மருத்துவர் ஆக முடியும், கொஞ்சம் ஜம்பமும் வரும். பார்க்க வரும் துயரருக்கு அவர்களை அனுப்பியவர்கள் எல்லாவற்றையும் சொல்லியே அனுப்புவது வழக்கம். யாரும் தவறாக நினைப்பதில்லை.

அடுத்தது அவரின் அன்றைய மருந்து பரிந்துரையை தீர்மானிக்கும் கட்டம் வந்து விட்டது. ரெபர்டரியில் பக்கங்கள் வெகுவாகப் புரட்டப்படும். மார்க்குகள் போடப்பட்டு ஒப்பீட்டளவில், அதிக மார்க் வாங்கும் மருந்து தான் கொடுக்கப் படும். என் மனதிற்கு அதீத முன் முடிவுகள் உண்டு இடது கால் வேரிகோஸ் வெய்ன்ஸ், பச்சைப்புண், எனவே லாக்கெஸிஸ் என அது அதிகப் பிரசங்கித்தனமாய் முடிவு கட்டுகிறது. ஆனால் கணக்கு வேறு மாதிரி விடை தருகிறது. கார்போவெஜ் தான் மருந்து. அதிக மதிப்பெண்கள் வாங்குகிறது. வேறு வழியில்லை அதைதான் நான் எழுதுகிறேன். கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என் துணைவர்களுக்கு. அவர்களைப் பார்த்ததும் அசடு அதிகமாகவே வழிகிறது எனக்கு. இருந்தாலும் வெளியில் காட்டக் கூடாது. துயரர்கள் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு.

பரிந்துரை முடிந்துவிட்டது ஒரு மாதம் கழித்து இதேமாதிரி வரவேண்டும் என்று சொல்லி எங்கே மருந்து வாங்க வேண்டும் என்பதெல்லாம் சொல்லி துணைவர்கள் அனுப்பி வைக்கின்றனர். துயரருக்குப் பொறுமை இல்லை மூன்றே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துவிட்டார். எங்களுக்குக் கொஞ்சம் அதிருப்தி தான்; ஆனால் அவர்கள் முகத்தில் பெரும் சந்தோஷம். இடது காலில் புண்கள் ஆறிவிட்டன. தோல் வழ வழ வென்று இருக்கிறது. சிரைகள் புடைப்பில் எந்த மாற்றமும் இல்லை; ஆனால், புண் இல்லை, ரத்தக்கசிவு இல்லை, வீக்கம் இல்லை, வலி இல்லை. எனக்குக் குஷி, துணைவர்கள் முகத்தில் ஒரே ஆச்சரியம், அவர்களால் நம்ப முடியவில்லை. கார்போவெஜ் இப்படியெல்லாம் வேலை செய்யுமா? அற்புதமான அனுபவம். அறுவை சிகிச்சை தவிர்க்கப் பட்டுவிட்டது. உள்ளுக்கு எடுத்துக்கொண்ட மருந்தின் விலையோ மிஞ்சி மிஞ்சிப் போனால் 15 ரூபாய் தான்.

புங்க மரக் கிளையை எரித்துக் கரியாக்கி அதிலிருந்து தயாரிக்கப் படுகிறது கார்பொவெஜ். வேரிகோஸ் அல்சரில் முழுத்திறமையோடு வேலை செய்கிறது. ஹோமியோபதியில் டாக்டரைவிட அதிக முக்கியத்துவம், புகழுரைகள் அவர்கள் சொந்தக்காரர்களைபோல் நேசிக்கும் மருந்துகளுக்குத்தான். ஆசான் ஹானெமனுக்குத்தான். அந்தத் துயரர் இன்றுவரை குடும்ப நண்பராகவே ஆகிவிட்டார். இதுவரை 50க்கும் மேற்பட்ட துயரர்கள்- நட்பு வட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

வெற்றுக்கரி உறவுகளை உறுதிபடுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment