HARUKI MURAKAMI'S NOVEL- KAFKA COMES TO THE SHORE- OSHIMO SUFFERS FROM HAEMOPHILIA
ஹீமோஃபிலியா ஒரு பரம்பரைத் தன்மை கொண்ட நோய் -பெண்கள் மூலமே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படுவது- ஆண்களையே பாதிப்பது.
மனித ரத்தத்தில் காணப்படும் முன்று காரணிகள் குறைபாட்டால் முன்று வகையான ஹீமோஃபிலியா நோய் வருகிறதாம். இந்நோய் கண்டவர்களுக்கு, ஏதோ ஒரு காரணத்தினால், ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ அல்லது ரத்தப் பெருக்கு நிகழ்ந்தாலோ, ரத்தம் உறைவதில்லை. சிலருக்கு உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவு தானாகவே தோன்றுவதுண்டு. அல்லோபதியில், ஸீரம் ஃபேக்டர் ஊசியாய் செலுத்தப் படுகிறது. விலை அதிகம். இக் குறையிருப்பது தெரியாமலே இருந்துவிட்டால், விபத்தில் சிக்கினால், ரத்தப் பெருக்கால் மரணம் நிகழ்வதும் உண்டு
சென்னையில் 300 குழந்தைகளூக்கு மேல் உறுப்பினர்கள் கொண்ட ஹீமோஃபிலிக் சொசைடி செயல்படுகிறதென்று சொல்கிறார்கள்; புதுச்சேரியில் , முது நிலை குழந்தை நல மருத்துவ நிபுணர் நளினியின் கீழ் ஒரு ஆராய்ச்சிக்குழு இயங்குகிறது. 40 ஹீமோஃபிலியாக் குழந்தைகள் பதிவு கண்டிருக்கிறார்கள். ஹோமியோபதி அறிவியலில் முது நிலை ஆராய்ச்சியாளர் திரு ப்ரகாஷ் ராவ் இப் பதிவு பெற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் முகாம் நடத்தி , ஹோமியோ சிகிச்சையளிக்கிறார். ரத்தக் கசிவு தோன்றியதும், மருத்துவர் நளினியின் மேற்பார்வையில் மெர்க் சால், பெல்லடோன்னா, கல்கேரியா கார்ப், பாஸ்பரஸ், லாக்கெஸிஸ், க்ரோட்டாலஸ், சிக்கேல் கார், என ஒரு பத்துப் பன்னிரெண்டு ஹோமியோ மருந்துகளிலிருந்து, அக்குழந்தையின் குறிகளுக்குப் பொருத்தமான மருந்து ஒன்றைத் தெரிவு செய்து, ஹோமியோ மருத்துவர் ப்ரகாஷ் ராவ் கொடுக்கிறார், ஃபேக்டர் ஊசி தவிர்க்கப்படுகிறது. மரணத்தின் சமீபத்திற்குக் கொண்டு செல்லக்கூட்ய இக் கொடிய நோய்க்கு ஆங்கில மருத்துவரும் ஹோமியோ மருத்துவரும் இணந்து நடத்தும் ஆராய்ச்சி மருத்துவ, மனித மாண்பின் விழுமியம் என்று சொன்னால் மிகையாகாது. சரி, முரகாமிக்கு வருவோம்.
தமிழ் இலக்கியத்தில் என் வாசிப்பில் ஹீமோஃபிலியா துயரர் இல்லையென்று சொல்லலாம். ஹாருகி முரகாமியின் kafka comes to the shore நாவல்; பெயரிலேயே வசீகரம் கொண்டது. காஃப்காவின் பெயர் எங்கு தென்பட்டாலும் நாம் ஈர்க்கப்படுவது இயல்பானது. பின் நவீனத்துவனரால், நவீனத்துவ பெருங்கதையாடல் என்று சொல்லப்படுகிற ஃப்ராய்டிசக் கோட்பாடுகளில் ஒன்றான இடிபஸ் சிக்கலை ஆரம்பப் புள்ளியாய்க் கொண்டு பின்னப் பட்டிருக்கிற நாவல். நாயகன் காஃப்கா தன் தந்தையிடமிருந்து முரண்பட்டு, வேற்றூருக்குப் புலம் பெயர்கிறான். அங்கு அவன் எதிர்கொள்ளும் பல நபர்களில் ஒருவன் ஓஷிமோ. நூலகப் பணியாளன் என்பதாய் நினைவு தன் மன உணர்வில் இருபால் தன்மைகளும் கொண்ட ஓஷிமோ ஒரு ஹீமோஃபிலியா துயரராகப் படைக்கப்பட்டிருக்கிறான். முரகாமி ஹீமோஃபிலியா என்கிற பிறதுறைசார் படிமத்தை மெனக்கெட்டுக் கொண்டு வந்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்நோய்மை குறித்தானக் கவனக் கோரலுக்காகவும் இருக்கலாம். எது எப்படியோ ஒரு நாவல் வாசிப்பிலாவது இக்கொடிய நோயை நாம் அறிந்து கொள்ள முடிகிறதே.! —
No comments:
Post a Comment