Wednesday, 15 January 2014

பால் சக்காரியாவின் விருந்தாளி சிறுகதையும், தற்கொலையை முன்வைத்து ஹோமியோ மருத்துவமும்

பால் சக்காரியாவின் சிறுகதையை, ”விருந்தாளி” எனும் தலைப்பில், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்த்திருக்கிறார். கதையின் முழு பேசுபொருளும் கொஞ்சம் கூட விலகலற்று, தற்கொலையைப் பற்றியே விவாதிக்கிறது. சில நண்பர்கள், ஒரு மருத்துவர், ஒரு பத்திரிகை ஆசிரியர், புதிதாக வரும் ஒரு இளைஞர் இவர்களது உரையாடலே கதை. எளிமையாய், மிகுந்த அவஸ்தையின்றித் தற்கொலை செய்துகொள்வது எப்படி? துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதா? நீரில் முழ்கி இறப்பதா அல்லது, தூக்குக் கயிறா? எது சிறந்தது? தூக்கில் தொங்கினால் விழிகள் பிதுங்கி, நாக்கு வெளித்தள்ளுமா ?புதிதாக வந்த இளைஞனிடம் நிறைய கேள்விகள் உருக்கொள்கின்றன; தற்கொலை தலைமுறையாய்த் தொற்றுகிற ஒண்ணா? அவனது தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டவர்களே!

நான் , என் ஹோமியோபதி மாணவர்கள் கட்டாயம் இச்சிறுகதையை வாசிக்கவேண்டும் என வற்புறுத்துவேன். ஹோமியோபதியில் தற்கொலை செய்துகொள்பவனின் மனோ நிலை ஆழ்ந்து வாசிக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாது, எந்த வழியைத் தேர்வு செய்துகொள்கிறானோ அதற்கேற்ப மருந்தும் உண்டு.

உயரத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ள விருப்பமுள்ளவனுக்கு ஆரம் மெட் மருந்து.

கத்தியால் கழுத்தை அறுத்துக்கொள்பவனுக்கு ஹெப்பார் ஸல்ஃப் ,மெர்க் ஸால்.

கோடரியால் வெட்டிக்கொண்டால்- நல்லபாம்பு விஷம்- நஜா திரிபுடன்ஸ்.

நீரில் மூழ்கி இறப்பதைத் தெரிவு செய்தால், அர்ஜ் நைட், ஆரம் மெட்.

கொளுத்திக்கொண்டால், ஆர்ஸ், ஹெப்பார் ஸல்ஃப்.

தூக்கில் தொங்கினால் ஆர்ஸ், பெல்லடோனா,

விரையும் வண்டியின் முன் விழுந்து இறந்தால் லாக்கெஸிஸ், காலி ப்ரோம், ஆர்ஸ்.

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டால் நேட்’ஸல்ஃப்

 விஷ வாயுவை முகர்ந்து உயிர் துறந்தால் நக்ஸ்,ஆர்ஸ் .

கோபமா ? பதட்டமா? துயரமா? பயமா? மனப்பிறழ்வுகளா? சிந்தனைசுழலில் சிக்கிகொள்வதா? காதல் தோல்வியா? ஒவ்வொரு காரணத்திற்கேற்ப மருந்தும் மாறுபடும்.

காமுவுன் அந்நியன் நாவலில் கதா நாயகன் மெர்ஸோ கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறான். ஏன் அவனைச் சுட்டாய் என்று நீதிபதி கேட்கிறார். மெர்ஸோ சொல்லுவான்- அன்று கொளுத்தும் வெய்யில்; உஷ்ணம் தாங்க முடியவில்லை. என் நண்பனோடு சென்றிருந்தேன். சுடப்பட்டவனோடு எந்தவித முன் விரோதமும் எனக்கில்லை. என் நண்பனைத் தாக்க அவன் வந்தான். ஒரே உஷ்ணம். என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை; சுட்டுவிட்டேன். அப்படித் தாங்க முடியாத உஷ்ணத்தினால் தற்கொலை செய்து கொண்டால் கூட, அதற்கு வேறு மூன்று மருந்துகள். தற்கொலை முயற்சிக்குப்பின், துயரர் பிழைதுக்கொண்டால் கட்டாயம் அவருக்கு மருந்துகள் கொடுக்கவேண்டும்
.
நல்ல திரைப்படங்களுக்கான தேடலில் , தற்கொலையை விவாதித்தது, ஸையத் மிர்ஸாவின், ”அர்விந்த் தேசாய் கீ அஜீப் தஸ்தான்”. கதா நாயகன் , மும்பையில் வாழும், பணக்காரப் பிள்ளை. அவனது கேள்விகள் அவனை நவீன புத்தனாக அடையாளம் காட்டும். அவனது கேள்விகளுக்கு விடை சொல்லும் முயற்சியாய் அவனது ப்ரொஃபொஸர் (ஓம் பூரி) மும்பை வாழ்க்கையை சமூகவியல் நோக்கில் அவனுக்கு விளக்குவார்; மிகக் குறைந்த நிலப்பரப்பில் எல்லா வணிகமும், பணமும் குவிந்துள்ளது. கோடீஸ்வரனும், ஏழையும் அருகருகே வசிக்கிறான், உறவுகள் நெக்குவிட்டுப்ப் போகின்றன. ஒவ்வொருவரிடமும் தற்கொலை கரண்ட் இருக்கிறது. இதுவே தற்கொலைக்குக் காரணம் ,. காமிரா சில கணங்கள் நாரிமான் பாயிண்ட்டைச் சுற்றி வருகிறது, ஆடம்பரமும், சினிமா விளம்பரங்களும் முடிவில்லா வாகனங்களின் அணிவகுப்பும், பிச்சைக்காரர்களும், தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு கேட்பவர்களும் பதிவாகிறார்கள். படத்தின் இறுதியில், கேள்விகளுக்கு விடை கிடைக்காமல், தனது கையிலிருக்கும் மந்திரக்கோல் – துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துபோகிறான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூகவியலாலர் எமிலி தர்க்கைம் தற்கொலை ஆய்வுகளைத் திறம்படச் செய்தவர். கத்தோலிக்கப் பிரிவினரையும், புதிதாய்த்தோன்றிய புராட்டெஸ்டண்ட் பிரிவினரையும் ஆய்வுக்குட்படுத்தினார். அதிக விழுக்கடுகள் தற்கொலை புராட்டெஸ்டண்ட் பிரிவிலேதான் அதிகம்; அதன் காரணிகளையும் விளக்கினார். அப்போது உருவான கருத்தாக்கமே தற்கொலை விகிதமும், தற்கொலை மின்னோட்டமும். அந்தப் பின்னனியில் தான் பெருநகர வாழ்வின் கடுப்பாடற்ற நிலையும், அமளியும், அந்நியமாதலும், தற்கொலைகளும் சையத் மிர்ஸாவால் கையாளப்பட்டது.

நாம் வாழும் காலத்தில், நசித்துப்போன கிராமிய வாழ்க்கையால், கடனில் மூழ்கித் தலைகுனிவும், அவமானங்களும் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதை சாய்நாத், மீண்டும் மிண்டும், எழுதியும், பேசியும் வருகிறார். ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களின் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

தனிமனிதத் துயரங்களைக் கலை இலக்கியம் பேசும்—எப்போதும்!!. அவர்களது தற்கொலை எண்ணங்களைப் புரிந்துகொண்டு மருந்தும் கொடுத்து அவர்களைக் காப்பாற்றவும் முடியும்!. பெரும் எண்ணிக்கையில் நிகழும் விவசாயிகளின் தற்கொலை அவலத்துக்கு என்ன தீர்வு? ஹானேமன் மணிமொழி 77ல் விவாதிப்பதுபோல், அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தாமல் ஆளுமைக் கோளாறு நோய் போல் பொய்த் தோற்றம் கொள்ளும் தற்கொலைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அதற்கான அரசின் கிராமியப் பொருளாதாரக் கொள்கைகளில், நகாசுகள் தவிர்த்த, உண்மையான மாற்றங்கள் கொண்டுவருவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்!

No comments:

Post a Comment