Wednesday, 15 January 2014

மௌனியும் சுரமும்

மௌனியும் சுரமும்

 இந்தக் காலத்தில் பரவாயில்லை, சுரமென்றால் மூன்று நாட்களில் அனேகமாக ஓடிவிடுகிறது. புதிய மருந்துகளின் வருகைக்குப்பின், பழைய பயமுறுத்தும், சுர அரக்கர்களான டைஃபாய்ட், நிமோனியா, மலேரியா எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டனர். ஆனால் திடீர் திடீரென்று, புயல்களுக்குப் பேர் வைப்பது போல், புதுப்புது சுரங்கள். ஸார்ஸ், ஃப்ளூ, டெங்கு, சிக்குன் குனியா. ஒரே பீதி, வாந்தி பேதியைவிட இந்தக் காய்ச்சல்களில் பீதிதான் அதிகம்.

சரி. 1930 களில் சுரங்கள் எப்படியிருந்தன? இலக்கியப் பதிவுகளில் ஏதேனும்? சிறு கதைகளின் திருமூலர் திரு மணி என்கிற மௌனியின் கதைகளில்- 1937ல் மணிக்கொடியில் எழுதப்பட்டவை- மூன்று கதைகள்- ஒரு சின்ன சாம்பிள் – ”சிகிச்சை”, ”மாபெருங்காவியம்”, ”எங்கிருந்தோ வந்தான்”- மூன்றிலும் சுரம் கதையில் முக்கிய திருப்பம் தரும் பாத்திரமாகிறது. சுரம் வந்தவர்கள் கமலா-மனைவி, கிட்டுவின் குழந்தை, சங்கரன் பத்மா ஆகிய நால்வரும் சுரங்கண்டு, ஜன்னி வேகத்தில் பிதற்றி சிகிச்சை பலனின்றி இறந்து போகின்றனர்.

“சிகிச்சையில்” சுரம் சாவைக்கொண்டு வந்து, பழைய உறவை மறையச் செய்து,புதிய உறவை ஏற்படுத்தியும் தருகிறது.

இரண்டாவது கதையில் குழந்தையின் இழப்பில், தான் எழுதிய காவியத்தையும், இழந்துவிட்டதையும் கிட்டு புரிந்துகொள்ள நேரிடுகிறது.

மூன்றாவது கதையில் சுரம் இருவரின் மரணத்தை ஏற்படுத்தி ஒரு காதலின் அமரத்துவத்தைப் பதிவு செய்கிற பாலமாகிறது. 37 என்பது, எதிர் உயிரி மருந்துகள் வருகைக்கு முந்திய காலம். மௌனியின் சுர அனுபவங்கள் மரணத்தில் முடிந்ததில் ஆச்சரியமில்லை. கதைகளும் நன்றாகவே நகர்கின்றன. அந்தக் காலங்களில் டைஃபாய்ட் சுரத்தில், அல்லோபதியில், இறுதி மருந்தாக டிங்க்ச்சர் பென்சாயினை உள்ளுக்குக் கொடுப்பார்களாம்; பிழைத்தால் பிழைத்தது, போனால் போனது தானாம்.

இதற்கும் முந்திய காலங்களில், டைஃபஸ் சுரம் குறித்த இரு சிறுகதைப்பதிவுகள் நினைவுக்கு வருகிறது. ஒன்று ருஷ்யாவில் ஆண்டன் செகாவின் பதிவு; மற்றொன்று அமெரிக்காவில் ஓ. ஹென்றியினது. இரண்டிலும் டைஃபஸ் சுரம் அன்பின் வெளிப்பாட்டுக் காரணியாய் இருக்கும். சுரம் வந்தவர் இருவரும், சிகிச்சையில் உயிர் பிழைப்பர். மாறாக, சுரம் கண்டவர்களுக்கு உதவியாக அயராது இரவுகளில் கண்விழித்துக் காத்த மற்றவர் இருவர் தொற்று நோயில் மாண்டு போவர். உயர்வு நவிற்சியற்று , மனித வாழ்வின் மேன்மைகள் அடங்கிய தொனியில் பதிவாகும்.

No comments:

Post a Comment