Wednesday, 15 January 2014

ஃப்ளூரிக் அஸிடம்-ஒரு துயரர் சரிதை

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் எங்கள் உறவினர் திருமணம் தஞ்சையில் நடந்தது. காலை ஏழரையிலிருந்து ஒன்பது மணி வரை முஹூர்த்தம். திருமணம் முடிந்ததும் புறப்பட்டு என் அலுவலகத் தோழர் அய்யா கணபதியின் கிராமத்திற்குச் செல்வதாக ஏற்பாடு.

அங்கு-தம்பிக்கோட்டை மரவாக்காடு- கிராமத்தில் ஹோமியோபதி சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவதற்காக நிறைய துயரர்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும், துயரர் சரிதை கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டு, மருந்தைத் தெரிவு செய்து எழுதிக் கொடுக்கக் குறைந்தது 15 நிமிடமாவது ஆகும். மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக வேலை இருந்தது. கடைசியில் ஒரு 25 வயது இளைஞர் வந்தார். தனது முதுகில் தடிப்புக்கள் நிறைய இருப்பதாகக் கூறினார். அரிப்பு இல்லை. சூடாக இருப்பதாகக் கூறினார்.

சட்டையைக் கழட்டச் சொல்லிப் பரிசோதித்தேன். முதுகில் தடிப்புத் தடிப்பாக மரவட்டைபோல், கறுப்பு நிறத்தில் 10 இடங்களில் காணப்பட்டது. எரிச்சல் , வலி இல்லை. வெளிப்பாடுகளும் ஏதுமில்லை. பார்க்க அருவருப்பாய்த்தான் இருந்தது. அவரால் வீட்டில் கூட சட்டையில்லாமல் இருக்க முடியவில்லை. எல்லோரது கவனத்தையும் ஈர்த்து, கேள்விகள் பல உருவெடுத்தன. தோல் மருத்துவர்கள் ஒவ்வொன்றையும் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறிவிட்டனர். புதியதாக எதுவும் வராது என்று உறுதி கூறவும் முடியாது என்றும் கூறி விட்டனர்.

துயரரது உடல் குறிகளில் முக்கியமாக வெப்பமும், அடிக்கடி சளித் தொந்தரவும், மூக்கடைப்பும், முன் நெற்றியில் ஓயாமல் தலை வலியும், கீலாய்ட் உருவாவதையும் கணக்கிலெடுத்துக் கொண்டு அவருக்கு முக்கிய மருந்தான ஆஸிட் ஃப்ளோர் 30, தினமும் காலை, மாலை இருவேளை 4 உருண்டைகள் , 15 நாட்களுக்குப் பரிந்துரைத்தேன். எனக்கு நம்பிக்கையிருந்தது, கீலாய்ட் நிச்சயம் மறையும், ஆனால் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் எனத் தோன்றியது. 3 வாரங்களுக்குப் பின் துயரர் போனில் பேசினார். ஒன்றிரண்டு முற்றிலுமாக மறைந்து விட்டன. மேலும் சில அளவில் சிறிதாகத் தென்பட்டன. நிற மாற்றமும் தெளிவாகப் புலப் பட்டது. முக்கியமாக அவர் சொன்னது உஷ்ணம் குறைந்து விட்டது. நான் துயரருக்கு விளக்கினேன்; நீங்கள் முழுமையான நலமாக்கலை நோக்கிப் பயணிக்கிறீர்கள்; ஆனால் பொறுமையாக இருக்க வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களுக்கு மருந்து எடுக்க வேண்டும்; ஆனால் 200வது வீரியம்; தினமும் மருந்து வேண்டாம் ; மூன்று நாளைக்கொருமுறை காலையில் நான்கு உருண்டைகள். ஒரு மாதம்; அதன்பின் எனக்கு ரிபோர்ட் கொடுங்கள் என்று அறிவுறுத்தினேன்.

என் தோழர் அய்யா கணபதி மிகவும் உல்லாசத்தோடு பேசினார். அவரது முயற்சியில் ஒரு கிராமத்தில் ஹோமியோபதி சிகிச்சை முகாம்; அவரது நண்பரே மருத்துவர். சுமார் 40 துயரர்கள் , அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், வீட்டு வேலையாட்கள் இவர்களே துயரர்கள். இரண்டு மாத இடைவெளியில், நல்ல முன்னேற்றம். கிராமத்தில் எல்லோரது பேச்சிலும் இச்சம்பவம் கவனம் கொள்கிறது. இந்த 10 வருடங்களில் மேலும் புதிய துயரர்கள். ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ், சிறு நீரகக் கோளாறுகள், அல்சர், பிராங்கைடிஸ், கடுமையான தலைவலி, என நீண்டகால நோய்கள் ஹோமியோபதியில் நலமாக்கப் பட்டிருக்கிறது. அதற்கும் மேலாக, ஈசிஜி, எக்கோ, ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட்கள், ஸ்கான் ரிப்போர்ட், சீ.டி.ஸ்கான் ரிப்போர்ட், எம் ஆர். ஐ ரிப்போர்ட் எதுவாயினும் என் தோழர் முலம் விளக்கத்திற்காகவும் , ஆலோசனைக்காகவும், மேற்கொண்டு என்ன வழியில் சிகிச்சை தொடர வேண்டும் என்னும் வழிகாட்டலுக்காகவும் என்னிடம் வருகிறது. என் தோழர் இன்னும் அவரது கிராமத்திற்கு ஒரு தூணாகவும் change agent ஆகவும் விளங்குகிறார்.

மூன்று மாதங்களில் கீலாய்ட் முற்றிலுமாக மறைந்து விட்டது. 200 வீரியத்திற்கு மேலாய் 1M, 10M, ஏதும் தேவைப்படவில்லை. ஆனால் தொடர்ச்சியாக மூன்று நாளைக்கொருமுறை 4 உருண்டைகள் மருந்து தேவைப்பட்டது. இப்போது அவரது முதுகில் மரவட்டைகள் இல்லை. புதியது ஏதும் தோன்றவுமில்லை. கீலாய்ட் ஒரு constitutional manifestation; ஹோமியோபதி முற்றிலுமாக நலமாக்குகிறது.
 .

No comments:

Post a Comment