என் அப்பா 1973ம் வருடம் மாரடைப்பால் காலமானார். அன்றைய தஞ்சை மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவில், விவசாயிகள் சங்கம், ஏ.ஐ.டீ.யூ.சி தொழிற்சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய எல்லா தளங்களிலும், அப்பா பணிபுரிந்திருந்தார். 1946-52 கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்த காலங்களில் தலை மறைவு வாழ்க்கை, 48-51 செஞ்சி சிறை வாழ்க்கை காரணாமாக, ரெயில்வே நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்.
இறந்த இரண்டு வாரங்ளில் , படத்திறப்பு விழா நடைபெற்றது. ஒரு பெரும் ஜன சமுத்திரத்தை, என்வீட்டு வெளியில் நான் முதன் முதலாகப் பார்த்தேன். விழாவில் கலந்து கொண்டு தோழர் பாலதண்டாயுதம் , அப்பாவின் பங்களிப்பு குறித்து வெகு விரிவாகப் பேசினார். எனக்கு அதுவரை தெரிந்திராத பல விஷயங்கள் அன்று கேட்டிருந்தேன்.
எங்கள் வீட்டில் 2000 புத்தகங்களுக்கு மேல் இருந்தது. தோழர் பாலன், ஆயுள் தண்டனை பெற்று, கோவை சிறையிலிருந்தபோது, மொழிபெயர்த்த ”தேனீக்கள்” புத்தகமும் இருந்தது. தேனீக்கள் குறித்த பெரும் ஆராய்ச்சிக்குப்பின் அப்புத்தகம் எழுதப்பட்டிருந்தது. அதில் இல்லாத தகவல்களே இல்லையென்று சொன்னால் மிகையாகாது. தேனீக்களோடு ஒரு நெருக்கம் ஏற்பட்டிருந்தது.. மரத்தால் செய்யப்பட்ட தேனி வளர்ப்புப்பெட்டி வீட்டில் இருந்தது. தேனிக்களும் வளர்த்தோம். அவற்றின் ”ஞொய்” சத்தம் எப்பவும் வீட்டில் கேட்டபடி இருக்கும். 78ல் , வேலை நிமித்தம், இறுதியாக மன்னையை விட்டு வரும்வரை, தேனீக்களோடு எற்பட்டிருந்த புரிதல் ஆழமானது.
மாதம் ஒருமுறை வீட்டிற்கு வந்து போகும் பழயனூர் வைத்தியர் வீட்டிலிருந்த எல்லாருக்கும் கொடுத்த மருந்துப்பொட்டலங்கள் அனைத்தும், தேனில்தான் பெரும்பாலும் குழைத்து சாப்பிடுவோம். தேனின் பயன்பாடு, மருந்து சாப்பிடுவதைத்தவிர அன்றைக்கு வேறு எதுவும் தெரியாது. ஒரு நாளைக்குக் காலை, மாலை இரண்டு வேளை, இரண்டு பொட்டலங்கள் வீதம் தேனில் குழைத்து சாப்பிடனும், என்று வைத்தியர் சொல்லும்போதே எங்களுக்கு குஷி பிறந்துவிடும். தேன் ருசி.
90ல், சென்னையில், முதன் முதலாக ஹோமியோ மருத்துவர் குமரேசனிடம் ஹோமியோபதி கற்றுக்கொள்ள ஏற்பாடாகியிருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், பிற்பகல், பாடம். அக்கொனைட், அம்ப்ராக்ரீஸா, என்று அகர வரிசையில் மருந்துகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. அடுத்த ஞாயிறு வருவதற்குள், அந்த மருந்தினை மனதில் வாங்கிக்கொள்வோம்.
ஒருஞாயிறு அப்பிஸ் மெல் பாடம் நடந்தது, அது தேனி விஷம். டாக்டர் ஜெயக்குமார் , மிக ஆழமான ஞானம் கொண்டவர், சிறந்த விரிவுரையாளர். தேனீக்கள், தேனிலிருந்து, முதன்முதலாக தேன் விஷமும் அதன் மருத்துவ குணங்களையும் நோக்கி பயணிக்கிறேன். மாமா கோபாலகிருஷ்ணன், சக மாணவர், ஆனாலும், ஏற்கனவே ஹோமியோ சிகிச்சை அளித்து வருபவர்,- அபிஸ்மெல் துயரர் சரிதைகள் பத்தாவது சொல்லுவார். எங்கள் எல்லோருக்கும் கொஞ்சம் பொறாமை வரும். அவர் முன் தாழ்ந்த குரலில் தான் பேசுவொம். அவருடைய கால்கள் சற்று புசுபுசுவென வீங்கியிருக்கும். பாடம் மனதில் படிந்த பின் அவருக்கு அபிஸ்மெல் 30 கொடுத்தோம். இரண்டு வாரங்களில் வீக்கம் மறைந்துவிட்டது.
இந்த 20 வருடங்களில் பலமுறை அபிஸ்மெல் நண்பர்களுக்கு பரிந்த்துரைத்திருக்கிறேன். ஒவ்வாமையால் தோன்றும் கண்டுகண்டான வீக்கம், அரிப்பு(urticaria-காணாக்கடி), பூச்சிக்கடிகள், தொண்டை அழற்சி,கண் இமை வீக்கம், கால் வீக்கம், நீர்ச்சுருக்கு, வலி, எரிச்சல் என ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் அபிஸ்மெல் வசப்பட்டிருக்கிறது. சிறு நீரக அழற்சி, அக்யூட் க்ளாமெருலார் நெஃப்ரைட்டீஸ், நெஃப்ராட்டிக் சிண்ட்ரோம், அல்புமின் யூரியா என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. துயரர்கள் பெரும்பாலும் நண்பர்கள், உறவினர்கள், சக உழியர்கள், நண்பர்கள் சிலாகித்துப் பேசக்கேட்டு வருபவர்கள் சிகிச்சைக்குப்பின் பெரும் நம்பிக்கை கொள்கிறார்கள். தேனிக்கள் போல மொய்க்கிறார்கள். ஹோமியோபதி நாளும் விவாதிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment